Published : 19 Jul 2019 08:09 AM
Last Updated : 19 Jul 2019 08:09 AM

360: இது கார்கள் விற்காமல் தேங்கும் காலம்

ராகுலின் தொழில் திட்டத்தை முன்னெடுக்கும் ராஜஸ்தான்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தொழில் வளர்ச்சியை முடுக்கிவிட என்னென்ன செய்யும் என்று ராகுல் சொன்னாரோ, அதையெல்லாம் மாநிலங்களில் செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறார்கள் காங்கிரஸ் முதல்வர்கள். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இதில் முன்னிற்கிறார். “சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளைப் புதிதாகத் தொடங்க மாநில அரசிடம் எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை” என்று அவர் அறிவித்த வேகத்தில் 708 தொழில் முனைவோர் இணையம் வழி பதிவுசெய்து புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்கியிருக்கின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர்கள் அரசிடமிருந்து எந்த அனுமதியையும் ஒப்புதலையும் பெறக் காத்திருக்கத் தேவையில்லை. இதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏற்றுமதி ஊக்குவிப்பு பேரவை, மாநில அரசின் நிதி மானியங்கள், மின் கட்டணத்தில் சலுகை விலை, சேவைத்துறை வளர்ச்சியில் தனி கவனம், புதிய தொழில்பிரிவுகளை உருவாக்கப் பிடிக்கும் நேரத்தைப் பாதியாகக் குறைத்தல் ஆகியவற்றையும் மாநில அரசு அறிவித்திருக்கிறது.

இது கார்கள் விற்காமல் தேங்கும் காலம்

இந்தியாவில் கார் விற்பனைக்கு இது மோசமான காலம்போல. விற்பனையில் ஏற்பட்டிருக்கும் கடும் சரிவு காரணமாக, மகேந்திரா வாகன உற்பத்தியாளர்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சில நாட்கள் உற்பத்தியை நிறுத்திவைத்திருந்தார்கள். மாருதி சுஸுகியும் ஜூன் இறுதியில் ஒரு வாரம் உற்பத்தியை நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தது. டெல்லி, நொய்டா போன்ற நகரங்களில் பல விற்பனையகங்கள் இழுத்து மூடப்பட்டுவருகின்றன. மொத்த உற்பத்தி மதிப்பு நடப்பு ஆண்டில் கடும் வீழ்ச்சியை அடைந்திருப்பது, அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீது மத்திய அரசு தடை விதித்திருப்பது, 2030-க்குப் பிறகு மின்சார வாகனங்கள் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரைத்திருப்பது போன்றவை இந்த சரிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.

ஆப்பிரிக்காவைச் சுற்றிவளைக்கும் கூகுள், ஃபேஸ்புக்? 

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இணையதளப் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்துவருகிறது. கூகுள், ஃபேஸ்புக் இரண்டும் அந்தக் கண்டத்தைச் சுற்றிலும் தங்களுடைய கேபிள் வலையமைப்புகளைத் தீவிரமாக ஏற்படுத்திவருகின்றன. அக்கண்டத்தில் 50% மக்கள் இன்னும் இணையதள இணைப்பு பெறவில்லை என்றாலும், இப்போது ஆண்டுக்கு 24% என்ற வேகத்தில் இந்த இணைப்பு வளர்ந்துவருகிறது. 

2005-ல் இணையதள இணைப்பு பெற்றவர்கள் மொத்த மக்கள்தொகையில் வெறும் 2.1%. 2018-ல் மிக வேகமாக இது உயர்ந்திருக்கிறது. ஃபேஸ்புக் தொடங்கியுள்ள நீருக்கடி இணையதள கேபிள் இணைப்புக்கு ‘சிம்பா’ என்று பெயர். ‘சிம்பா’ என்பது பிரபல கார்ட்டூன் தொடரில் வரும் சிங்க அரசனின் பெயர். கூகுள் நிறுவனத்தின் திட்டத்துக்கு ‘எகுயானோ’ என்று பெயர். இவர் நைஜீரியாவில் 18-வது நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். ஆப்பிரிக்காவை முன்பு இருண்ட கண்டம் என்று (தவறாக) குறிப்பிடுவது வழக்கம். இனி அது இணைய கண்டம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x