Published : 19 Jul 2019 06:59 AM
Last Updated : 19 Jul 2019 06:59 AM

மனித குலத்தின் பெரும் பாய்ச்சல்!

ஆசை

புவியிலிருந்து 2,40,000 மைல்கள் தொலைவில் உள்ளது நிலா. இது புவியை ஒன்பதரை தடவை சுற்றிவருவதற்குச் சமமான தொலைவு. அறிவியல்பூர்வமாகப் பார்த்தால், நிலவானது உயிர் வாழ்க்கைக்குத் தகுதியற்ற, வறண்ட துணைக்கோள். அவ்வளவுதான். ஆனால், மனிதர்கள் இருப்பதை இருப்பதாகக் கொள்வதில் திருப்தியடைந்துவிடுவதில்லை. அதிலிருந்து தங்கள் கற்பனைகள், சாத்தியங்களை விரித்துக்கொண்டே செல்பவர்கள் அவர்கள். நிலவு மனிதப் பிரக்ஞையில் ஆழமாக ஊறியிருக்கிறது. அதனால்தான், ‘நிலவூறித் ததும்பும் விழிகளும்’ என்று கண்ணம்மாவின் விழிகளைப் பார்த்துப் பாடுகிறார் பாரதியார். நிலவைப் பார்த்த விழிகள் அல்ல, நிலவைப் பிரிக்க முடியாதபடி தன்னுள் கலந்துவைத்திருக்கும் விழிகள்.

நிலவானது மனிதர்களின் கவிதைகள், கற்பனைகள் போன்றவற்றின் அடையாளம் மட்டுமல்ல; ஒருவகையில் கௌரவத்தின் சின்னம். நிலவில் மனித குலம் கால்வைத்த 50 ஆண்டை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், அது மனித குலத்தின் அறிவியல் பாய்ச்சல் மட்டுமல்ல, அமெரிக்க கௌரவம் தன்னை நிரூபித்துக்கொண்ட தருணம் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

நிலவுப் பயணத்தின் பின்னணி

அறுபதுகளின் தொடக்கப் பகுதி, அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம். ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின் ஏப்ரல் 12, 1961 புவியின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு சுற்றை நிறைவுசெய்ததை அடுத்து விண்வெளியில் பறந்த முதல் மனிதர் என்ற பெயரைத் தட்டிச்சென்றார். ஏற்கெனவே  போட்டிபோட்டுக்கொண்டு இரு நாடுகளும் விண்கலங்களை அனுப்பிக்கொண்டிருந்த கட்டத்தில், ரஷ்யா பல படிகள் தாண்டிச் சென்றது, அமெரிக்கத் தன்மானத்துக்குப் பெருத்த அடியாகப் பார்க்கப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுத்து தங்கள் கௌரவத்தையும் விண்வெளியில் தங்கள் மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்த வேண்டுமென்றால், அமெரிக்கா வேறு ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டியிருந்தது. மக்களின் உணர்ச்சிகளையும் கற்பனையையும் கொள்ளைகொள்ளும் பெருந்திட்டம் ஒன்றால்தான் அமெரிக்கா தான் நினைத்ததைச் சாதிக்க முடியும். ஆகவே, மே 25, 1961 அன்று அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி இப்படி அறிவித்தார்: “இந்த தசாப்தம் முடிவடைவதற்குள் மனிதனை நிலவுக்கு அனுப்பி அவனைப் பத்திரமாகப் புவிக்குத் திருப்பிக் கொண்டுவருவோம்.”

பெரிய அறிவிப்புதான். அதற்கான அடுத்த ஒன்பது ஆண்டுகள் கடும் உழைப்பைச் செலுத்தியது அமெரிக்கா. இதற்கிடையே ஆளில்லா விண்கலங்களை வெற்றி தோல்விகளுடன் அனுப்பிப் பார்த்துப் பரீட்சித்தும் கொண்டது. இதன் உச்சம்தான் அப்போலோ-11.

அது 1969-ம் ஆண்டு. கென்னடி உயிருடன் இல்லை என்றாலும் அந்த ஆண்டுடன் அவர் கொடுத்த கெடு முடிந்துவிடும். விண்வெளிப் பந்தயத்தில் ரஷ்யாவிடம் அடிபணிந்ததுபோலாகிவிடும். இந்நிலையில், நாஸா முடுக்கிவிடப்பட்டது. அக்டோபர் 1968-ல் தொடங்கி மே 1969 வரை அப்போலோ 7,8,9,10 ஆகிய விண்கலங்கள் முன்னோட்ட வேலைகளில் ஈடுபட்டன. அதைத் தொடர்ந்து ஜூலை 16, 1969-ல் நிலவுக்கு அப்போலோ-11 அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்காக நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூன்று வீரர்களைத் தேர்ந்தெடுத்து, விண்வெளியில் இருப்பதுபோலவே புவியில் அவர்களுக்குப் பயிற்சிகள் தரப்பட்டன.
ஏவப்பட்டது!

அது ஜூலை 16, 1969. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தை லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்திருந்தனர். உலகெங்கும் கோடிக்கணக்கான மனங்கள் அந்த இடத்தை மையமிட்டிருந்தன. அப்போலோ-11 விண்வெளி வீரர்களைச் சுமந்துகொண்டு வெற்றிகரமாகப் புறப்பட்டது. பல்லாண்டு கால ஆராய்ச்சியின், உழைப்பின் வெற்றித் தருணம் அது.. கூடவே, ரஷ்யா-அமெரிக்காவுக்கு இடையிலான விண்வெளிப் போரின் இறுதிக் கட்டமும் அதுதான்.
ஏவப்பட்டதிலிருந்து எட்டு நாட்கள் கழித்து அவர்கள் புவிக்குத் திரும்பி வருவார்கள். உலகமே அவர்களின் மறுவருகையை ஆவலுடனும் படபடப்புடனும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. மூன்று வீரர்களையும் விண்வெளியில் செலுத்திய ஏவுகலத்தின் பெயர் அப்போலோ சாட்டர்ன் 5. இந்த ஏவுகலத்தின் மூன்று பகுதிகள் நிலவை நோக்கி வீரர்களைச் செலுத்துவதில் வெவ்வேறு பங்குவகித்தன. ஏவுகலத்தின் உச்சியில் அப்போலோ விண்கலம் இருந்தது. அதுவும் மூன்று பகுதிகளால் ஆனது. முதல் பகுதியின் பெயர் லூனார் மாட்யூல், அதுதான் நிலவில் போய் இறங்கும். இரண்டாவது பகுதி சர்வீஸ் மாட்யூல், அது செல்தடத்தைச் சரியாக்கவும் சுற்றுப்பாதையில் நுழையவும் விடுபடவும் தேவைப்படும் முன்செலுத்து அமைப்புகளைக் கொண்டது. மூன்றாவது பகுதி மூன்று வீரர்களையும் கொண்டது. மேலும் ஒரு பகுதி, பென்சிலைப் போல இருப்பது. இது லான்ச் எஸ்கேப் சிஸ்டம். அதாவது, ஏவப்படும்போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், வீரர்களைக் காப்பாற்றும் விதத்தில் கமாண்ட் மாட்யூலைத் தனியே கழற்றிவிடுவதற்கானது. இந்த அனைத்தும் சேர்ந்தவைதான் அப்போலோ சாட்டர்ன் 5 ஏவுகலமும் அப்போலோ விண்கலமும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாகக் கழன்று, இறுதியில் ஒரே ஒரு பகுதிதான் நிலவில் போய் இறங்கும்.

கழன்றுகொண்ட பகுதிகள்

சாட்டர்ன் 5-ன் முதல் பகுதி அப்போலோவை மணிக்கு 6,000 மைல்கள் வேகத்தில் உந்தித்தள்ளியபடி புவியிலிருந்து 42 மைல்கள் உயரத்துக்குச் சென்றது. அத்துடன் முதல் பகுதி கழன்றுகொண்டது. இதையடுத்து சாட்டர்ன் 5-ன் இரண்டாவது பகுதி உசுப்பிவிடப்பட்டு விண்கலத்தை ஏந்திச்சென்றது. ஏவுதலில் எந்தப் பிரச்சினையும் இல்லாததால் முன்னே பென்சில்போல நீட்டிக்கொண்டிருந்த லான்ச் எஸ்கேப் சிஸ்டம் கழன்றுகொண்டது. ஏவுகலத்தின் இரண்டாவது பகுதி விண்கலத்தை மேலும் மேலும் உயரத்தில் செலுத்திவிட்டு ஒரு கட்டத்தில் அதுவும் கழன்றுகொண்டது. அப்போது மூன்றாவது பகுதியானது உசுப்பிவிடப்பட்டு அது விண்கலத்தைப் புவியின் மேற்பரப்பிலிருந்து 103 மைல் உயரத்திலுள்ள சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது. புவியைச் சுற்றிவிட்டு சாட்டர்ன்-5 அப்போலோ விண்கலத்தை நிலவை நோக்கிச் செலுத்துகிறது. அத்துடன் சாட்டர்ன்-5 ராக்கெட்டின் வேலை முடிந்துவிட்டதால் அதுவும் கழன்றுகொண்டது.

நிலவை நோக்கிய பயணத்தின்போது நடுவழியே லூனார் மாட்யூலை கமாண்ட் மாட்யூலுடன் இணைத்தனர். அப்படிச் செய்தால்தான் நிலவில் போய் இறங்க முடியும். இணைத்த பின், சாட்டர்ன் 5-ன் எஞ்சியுள்ள பகுதியையும் கழற்றிவிட்டுவிட்டனர். இனி, நிலவை நோக்கிச் சுமை குறைவான பயணம். ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து இதுவரை ஆன நேரம் மூன்றரை மணி நேரம் மட்டுமே. இப்போது மிஞ்சியுள்ளதுதான் அப்போலோ விண்கலம். இதற்குப் பிறகு மூன்று நாட்கள் பயணம்.

பெரும் பாய்ச்சல்

இறுதியில் நிலவின் ஈர்ப்பு விசையால் அதன் சுற்றுவட்டப்பாதையில் உள்வாங்கப்பட்டது விண்கலம். அங்கே அந்தக் குழு இரண்டாகப் பிரிந்தது. ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்டரினும் கழுகு என்று பெயரிடப்பட்ட லூனார் மாட்யூலுக்கு மாறிக்கொள்கின்றனர். கழுகு மெதுவாக நிலவின் மேற்பரப்பை நோக்கி இறங்கத் தொடங்குகிறது. கொலம்பியா என்று பெயரிடப்பட்ட கமாண்ட் மாட்யூலில் இருந்தபடி காலின்ஸ் நிலவைச் சுற்றிவருகிறார். கழுகு தன் இன்ஜினைத் திருப்பிக்கொண்டு, உந்தத்தைக் குறைத்துக்கொண்டு நிலவின் மேற்பரப்பில் இறுதியாக இறங்குகிறது. முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் கீழே இறங்கி நிலவில் கால்வைக்கிறார். “இது ஒரு மனிதன் எடுத்துவைத்த சிறிய காலடி. ஆனால், மனித குலத்தின் பெரும் பாய்ச்சல்” என்று அவர் அங்கிருந்து பேசியதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிளந்த வாயுடனும் விரிந்த கண்களுடனும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவரை அடுத்து 19 நிமிடங்கள் கழித்து பஸ் ஆல்ட்ரின் நிலவில் கால்வைத்தார்.

இருபத்தொன்றரை மணி நேரம் நிலவில் இருந்துவிட்டு, இறங்குவதற்கான கியரை விட்டுவிட்டுக் கழுகு புறப்பட்டது. புவியல்லாத ஒரு விண்பொருளில் நிகழ்ந்த முதல் ஏவல் (லான்ச்) அது. நிலவைச் சுற்றிவரும் கொலம்பியாவுடன் அது மறுபடியும் சேர்ந்துகொண்டது. கமாண்ட் மாட்யூலுடன் இணைந்துகொண்ட பிறகு, லூனார் மாட்யூல் தேவையில்லை என்பதால் அதுவும் கழற்றிவிடப்பட்டது. 
நிலவின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விடுபட்டால்தான் புவி நோக்கித் திரும்பி வர முடியும். இதற்குப் புவிநோக்கிய செலுத்தல் என்ற செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகு, புவி நோக்கி இரண்டரை நாள் பயணம். புவியின் வளிமண்டலத்தை நெருங்கும்போது அந்தக் கலத்தின் செலுத்துக் கருவிகளும் கழற்றிவிடப்படுகின்றன. சர்வீஸ் மாட்யூலையும் அப்போலோ கழற்றிவிடுகிறது.

விண்வெளியிலிருந்து புவியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் எதுவும் தீப்பற்றிக்கொள்ளும் என்பதால், எஞ்சிய கமாண்ட் மாட்யூலுக்குத் தீப்பாதுகாப்புக் கவசம் இடப்பட்டிருந்தது. எரிந்துகொண்டே மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகத்தில் புவியை நோக்கித் திரும்பிவந்த கமாண்ட் மாட்யூல் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. உடனே, பாராசூட்கள் மூலம் வீரர்கள் மீட்கப்பட்டனர். அந்த மூன்று பேருக்கு மட்டுமல்ல, இந்த நிகழ்வைப் பின்தொடர்ந்த உலக மக்கள் அனைவருக்கும் போன உயிர் திரும்பிவந்ததுபோல் ஆயிற்று. ஏவுகலம், எரிபொருள், விண்கலம், வீரர்கள், ஏனைய சுமைகள் என்று 30 லட்சம் கிலோ எடையுடன் புறப்பட்டுச் சென்ற அப்போலோ-11 வெறும் 5,557 கிலோ கொண்ட கமாண்ட் மாட்யூலாகத் திரும்பிவந்தது.

53 கோடிப் பேர்!

நிலவில் மனிதர்கள் கால்வைத்த நிகழ்வை உலகெங்கும் 53 கோடிப் பேர் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர். இது அப்போதைய உலக மக்கள்தொகையில் 15%. அமெரிக்காவில் மட்டும் 93% மக்கள் இந்த நிகழ்வைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார்கள். மனிதர்கள் நிலவில் கால்வைத்தது என்பது அமெரிக்காவின் கௌரவப் பிரச்சினை என்பதைத் தாண்டி, மனிதர்களின் கற்பனையும் திறனும் எந்த அளவுக்குப் பாயும் என்பதற்கான சான்றாக உருவெடுத்தது.

இதுவரை 12 பேர் நிலவில் நடந்திருக்கிறார்கள். யூஜீன் செர்னன், ஹாரிஸன் ஜாக் ஷ்மிட் ஆகிய இருவர்தான் இறுதியாக 
(1972-ல்) நிலவில் நடந்த மனிதர்கள். நிலவுக்குச் செல்வது ரொம்பவும் எளிது என்றும், அதே நேரத்தில் ரொம்பவும் செலவுபிடிக்கும் விவகாரம் என்பதால், ஒரு கட்டத்தில் அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது. அப்போலோ திட்டங்களுக்காக மொத்தம் 4 லட்சம் பொறியாளர்களும் வல்லுநர்களும் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதையும், அனைத்து அப்போலோ திட்டங்களுக்கும் இன்றைய இந்திய மதிப்பில் சுமார் ரூ 6.9 லட்சம் கோடி செலவானதையும் பார்க்கும்போது, அமெரிக்கர்களின் நிலவுப் பித்து நமக்குப் புரியும். ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என்று பாடிய மனிதர்கள் நிலவையும் நெருங்கிவிட்டார்கள்; இனி அடுத்தது என்ன என்ற கேள்விதான் அப்போதும் இப்போதும்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

ஜூலை 20, 2019: நிலவில் மனிதர்கள் கால்வைத்து 50 ஆண்டுகள் ஆன தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x