Published : 17 Jul 2019 07:51 AM
Last Updated : 17 Jul 2019 07:51 AM

குழந்தைகளுக்கு சாப்பாட்டுடன் ஸ்மார்ட்போன் எனும் பேராபத்தையும் ஊட்டுகிறோம்!

சில நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் ஒரு சிறுவனைப் பார்த்தேன். ஒரு எட்டு வயது இருக்கலாம். எனது பால்ய கால ரயில் பயணங்களை ஒப்பிடும்போது அவனது பயணம் பல வகைகளில் வித்தியாசமானது. அவன் ஜன்னல் சீட் கேட்டு அடம்பிடிக்கவில்லை, தின்பண்டங்கள் வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்கவில்லை, துறுதுறுவென இல்லாமல் அமைதியாக இருந்தான், தொணதொணவென அவன் பெற்றோரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை, ஆறு மணி நேரப் பகல் பயணத்தில் கொஞ்சம்கூட உறங்கவில்லை, ஒரு குழந்தை இருக்கும் பெட்டி என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இது எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான்; அவன் கையில் அகலமான ஒரு செல்போன் இருந்தது. அதை விட்டு அவனது கண்கள் அகலவேயில்லை.

ஒரு குழந்தைக்குரிய குதூகலங்கள், சுவாரசியங்கள், சேட்டைகள் எதுவும் இல்லாமல் ஒரு குழந்தை ஒரு கருவியுடன் பல மணி நேரம் இருக்குமென்றால் அந்தக் கருவி மீது நாம் நிச்சயம் அச்சம்கொள்ளத்தான் வேண்டும். குழந்தைத்தன்மையைப் பறித்துக்கொள்ளும் எதுவும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதல்ல. இரண்டு வயது குழந்தைக்கே செல்போன் கொடுத்து சாப்பாடு ஊட்டும் பெற்றோர்கள், சாப்பாட்டோடு சேர்த்து ஒரு மிகப் பெரிய ஆபத்தையும் ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

செல்போனிலிருந்து வெளியாகும் ரேடியோ கதிர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. குழந்தைகளின் சிந்தனைத்திறன், வளர்ச்சி, பசி, தூக்கம் என அத்தனையும் செல்போனால் பாதிப்படைகின்றன என்பதைப் பல்வேறு பெற்றோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் குழந்தைகளின் கைகளில் செல்போனைத் தயக்கமின்றிக் கொடுக்கிறார்கள்.

இதில் பெருமிதம் ஏதுமில்லை அய்யா!

இது ஒருபுறம் இருக்க, குழந்தைகளின் உலகத்தோடு தொடர்பறுந்து இருக்கும் போக்கு இன்னொருபுறம். ஒரு கருத்தரங்கத்துக்காகச் சென்றபோது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். சில முக்கியமான காணொளிகளை யூட்யூபில் சேமித்து வைத்திருப்பதாகச் சொன்னார். ஆனால், அவை எங்கிருக்கின்றன என்பது அவருக்குத் தெரியவில்லை. அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றும் அவருக்குத் தெரியவில்லை. என்னைப் பார்த்து பெருமிதமாகச் சொன்னார், “என் பையனுக்குதான் சார் இதெல்லாம் நல்லாத் தெரியும், எனக்கு இதுல அவ்வளவா ஒண்ணும் தெரியாது”. எனக்கு உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது; பயமாகவும்கூட. இதுபோன்ற சமூகவலைதளங்களைக் குழந்தைகள் பயன்படுத்துவது என்பதே பாதுகாப்பானதல்ல எனும்போது அதைப் பற்றி பெற்றோர்கள் எந்தக் கவனமும் இல்லாமல் இருப்பது அதைவிட ஆபத்தானது இல்லையா?

சரி, செல்போனால் நன்மையே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அமெரிக்காவின் சீதோஷ்ண நிலையோ சீனாவின் வணிகமோ கியுபாவின் பொருளாதாரமோ ஜப்பானின் தொழில்வளர்ச்சியோ - எதுவாக இருந்தாலும் உடனடியாக அதைத் தெரிந்துகொள்ள முடியும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உரையாட முடியும் என நாம் ஆரோக்கியமான விஷயங்களாக என்னென்னவோ பட்டியலிடலாம்தான். ஆனால், செல்போனைப் பயன்படுத்தும் நம் குழந்தைகளில் எத்தனை பேர் இதுபோன்ற விஷயங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள்? அந்த எண்ணிக்கை வெகு சொற்பம்தான்.

குழந்தைகளைச் சரியாகத்தான் வளர்க்கிறோமா?

உலகளவில் பத்திலிருந்து பன்னிரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளில் 45% குழந்தைகள் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறது 2017-ல் நீல்சன் நடத்திய ஆய்வு. இந்தியாவில் நடத்தப்பட்ட இதே போன்ற ஆய்வில், கிட்டத்தட்ட மூன்று கோடி குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்திருக்கிறது. இதில் பத்து வயதுக்குக் கீழிருக்கும் குழந்தைகள் மட்டும் 20%. கிட்டத்தட்ட அறுபது லட்சம் குழந்தைகள். இதையெல்லாம் பார்க்கும்போது நாம் நம்மை நோக்கிக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது: ‘நமது குழந்தைகளை நாம் சரியாகத்தான் வளர்க்கிறோமா?’

இந்தப் பிரச்சினைகளெல்லாம் நமது கையை விட்டுச் செல்வதற்குள் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். நமது செல்போன் உபயோகத்தை முறைப்படுத்துவதுதான் நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை. செல்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் குடும்பங்களில் குழந்தைகளும் அதில் அதிக நேரம் மூழ்கிவிடுகிறார்கள் என்கின்றன பல்வேறு ஆய்வு முடிவுகள். குழந்தைகள் என்ன சாப்பிட வேண்டும், என்ன படிக்க வேண்டும், எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும், யாரிடம் பேச வேண்டும், யாரிடம் பேசக் கூடாது என எல்லாவற்றிலும் மிகுந்த கவனத்தோடு இருக்கும் பெற்றோர்களால் எப்படிக் குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை மட்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை? இது நாம் ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய விஷயம். உண்மையில், இது பெற்றோர்களிடமிருந்துதான் தொடங்குகிறது. குழந்தைகளைப் பேராபத்திலிருந்து மீட்டுவருவது என்பது இன்றைய காலத்துப் பெற்றோர்கள் முன்னிருக்கும் மிகப் பெரிய சவால். ஆனால், பெற்றோர்கள் இன்னமும் தீவிரமாக உணராமலிருப்பது துரதிர்ஷ்டமான ஒன்று.

எப்படி சரிசெய்வது?

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் செல்போன் தரக் கூடாது. அவர்களது செல்போன் பழக்கமானது பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் இருக்கச் சொல்லி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். சாப்பிடும்போது, தூங்கச்செல்லும்போது செல்போன் பயன்படுத்துவதற்கு உறுதியாக ‘நோ’ சொல்ல வேண்டும். குழந்தைகளின் உலகத்தில் நமக்கு ஓரளவாவது பரிச்சயம் இருக்க வேண்டும்; குறிப்பாக, செல்போன் தொடர்பான தொழில்நுட்பங்களில். எந்த எதிர்பார்ப்புகளும் போட்டி மனப்பான்மையும் இல்லாமல் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். வாழ்வின் மதிப்பீடுகள், விழுமியங்கள், சமூக அக்கறைகள் போன்றவற்றைக் குழந்தைகளின் மனதில் நமது சின்னச் சின்ன செய்கைகள் மூலம் பதிய வைக்க வேண்டும்.

இணையத்தின் வருகைக்குப் பிறகு நமது வாழ்க்கையின் முகம் மாறியிருக்கிறது. ஒரு மனிதரின் நல்லியல்புகள் மீதான நிர்ப்பந்தங்கள் குறைந்திருக்கின்றன. நல்லியல்போடு இருப்பது என்பதையே நகைப்புக்குரியதாகப் பார்க்கும் அவலமும் நேர்ந்திருக்கிறது. சமூக அக்கறையற்று இருப்பதன் விளைவுகளை நமது குழந்தைகளின் மாறிவரும் சிந்தனைப்போக்கின் வழியாக நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். செல்போன்கள் பலவகைகளில் மிகப் பெரும் எதிர்மறைத் தாக்கத்தை இந்தத் தலைமுறையில் உண்டாக்கியிருக்கிறது. குறிப்பாக, சக மனிதர்களுடன் இணக்கமான உறவாடல் அற்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. பெருங்கூட்டத்துக்கு நடுவிலும் தனித்திருப்பது இப்போது இயல்பாகியிருக்கிறது. சமூக வலைதளங்களின் குணாம்சமும் அதுவாகத்தானே இருக்கிறது?

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: sivabalanela@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x