Published : 15 Jul 2019 08:15 AM
Last Updated : 15 Jul 2019 08:15 AM

காமராஜரை அறிவோம்

காமராஜரைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புபவர்கள் சென்னையிலுள்ள அவரது நினைவில்லத்துக்குச் செல்லலாம். விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த வீடும், கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபமும் பார்க்க வேண்டிய இடங்கள். இங்கெல்லாம் காமராஜர் பயன்படுத்திய பொருட்களும், ஏராளமான புகைப்படங்களும் அவரது உன்னத வாழ்வின் சாட்சியங்களாக இருக்கின்றன. ஆ.கோபண்ணா எழுதிய ‘காமராஜ் ஒரு சகாப்தம்’ புத்தகம் காமராஜர் வாழ்க்கை தொடர்பான அரிய ஆவணம்.

வளர்ச்சியின் நாயகன்

இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததைப் போலவே, காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ‘பெல்’ நிறுவனம் தொடங்க நினைத்தது மத்திய அரசு. அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையம், குடிநீர், பரந்த நிலப்பரப்பு எல்லாம் வேண்டும் என்று மாநிலம் முழுவதும் தேடினார்கள். கடைசியில், எந்த இடமும் தேர்வாகவில்லை என்று அண்டை மாநிலத்துக்குப் போகும் முடிவுடன் திரும்பிய அவர்களிடம், “திருச்சி திருவெறும்பூரைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார் காமராஜர். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தவர் காமராஜர். அவர் சொன்ன இடத்தைப் பார்த்துவிட்டு, மிகப் பொருத்தமான இடம் என்று சொன்னது நிபுணர் குழு. திருச்சியின் வளர்ச்சிக்குக் காரணமாக ‘பெல்’ நிறுவனம் அங்கு அமைந்தது இப்படித்தான்.

கிங் மேக்கர்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு. அவரைப் பிரதமராகப் பரிந்துரைத்தவர் காந்தி. நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்கப்போவது யார் என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. காரணம், புதிதாக சுதந்திரம் பெற்ற பல நாடுகள் சரியான தலைவர் இல்லாமல் அமைதியை இழந்து தவித்த காலகட்டம் அது. இந்தியாவுக்கும் அந்நிலை வந்துவிடக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. அந்நிலையில், பிரதமர் பதவிக்கு லால் பகதூர் சாஸ்திரியைப் போட்டியின்றித் தேர்ந்தெடுத்திட முக்கியக் காரணமாக இருந்தவர் காமராஜர். சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமர் ஆனதிலும் காமராஜருக்குப் பெரும்பங்கு உண்டு. இந்தியப் பிரதமரைத் தீர்மானிக்கும் வாய்ப்பை காந்திக்குப் பிறகு பெற்றவர் காமராஜர்.

கல்விப் புரட்சி

காமராஜரின் சாதனைகளிலேயே மகத்தானது, தமிழக வரலாற்றிலேயே கல்வித் துறையில் அதிகபட்ச வளர்ச்சியைக் கொடுத்தவர் அவர் என்பது. அனைவருக்குமான இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். 1957-1962 இடைப்பட்ட காலகட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சம் ஆக உயர்ந்தது. இந்த சாதனையைப் போற்றும் வகையிலேயே 2008 முதல் கல்வி வளர்ச்சி தினமாக காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்.

கல்விப் பசியாற்றிய காமராஜர்

“அத்தனை பேரும் படிக்கணும். வயிற்றிலே ஈரம் இல்லாதவன் எப்படிப் படிப்பான்? அவனும்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன்? ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்கணும். இது மிக முக்கியம். உடனடியாகத் தொடங்கிவிடணும்” என்றவர் காமராஜர். வேளாண் விளைச்சலில் உபரி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உணவுப் பற்றாக்குறை காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை இவ்வளவு காலம் கடந்தும் தமிழகம் மனதாரப் போற்றுகிறது. இந்தத் திட்டத்துக்கான விதை அவர் சிறுவனாக இருந்தபோதே விழுந்துவிட்டது. காமராஜருடன் உடன் படித்த மாணவன் பெருமாளால் மதிய உணவுக்காக வீட்டுக்குப் போய்வரும் வாய்ப்பு இல்லை. பள்ளியிலிருந்து வெகு தூரம் இருந்தது பெருமாளின் வீடு. ஆக, பெருமாளுக்கான மதிய உணவு வெறும் தண்ணீர்தான். இதை அறிந்துகொண்ட காமராஜர் அவரது பாட்டியிடம், “என்னால் இனி மதியம் சாப்பிட வீட்டுக்கு வர முடியாது. சாப்பாடு கட்டிக்கொடுங்கள்” என்று அடம்பிடித்தார். பிறகு, தனது மதிய உணவை பெருமாளுடன் பகிர்ந்துகொண்டார். இந்தப் பண்புதான் பின்னாளில் மிகப் பெரும் திட்டமாக விரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x