Published : 15 Jul 2019 08:08 AM
Last Updated : 15 Jul 2019 08:08 AM

ஆடம்பரத் திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன?

வ.ரங்காசாரி

தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் பெரிய தொழிலதிபர்களான அஜய் குப்தா, அதுல் குப்தா சகோதரர்கள் வீட்டுத் திருமணம், உத்தராகண்ட் மாநிலத்தின் அவ்ளி மலைப் பகுதியில் வெகு ஆடம்பரமாக நடந்தது. இந்தியத் திருமணங்கள் வரவர எவ்வளவு ஆடம்பரமாக மாறிக்கொண்டிருக்கின்றன என்கிற சம்பாஷனையைச் சூடுபிடிக்க வைத்திருக்கிறது. ஆனால், பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. குப்தா சகோதரர்கள் தென்னாப்பிரிக்காவில் இருப்பதால், இந்தியா தேடி வந்தார்கள்; வட இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் வெளிநாடுகள் நோக்கிப் போகிறார்கள்.

தங்களுடைய வீட்டுத் திருமணங்களைச் சொந்த ஊரிலும் பெரிய நகரங்களிலும் பிரம்மாண்டமான திருமண மண்டபங்களிலும் கொண்டாடி அலுத்துவிட்டார்கள் வட இந்தியக் கோடீஸ்வரர்கள். இப்போதெல்லாம் கடலுக்கு அடியில், மலை உச்சியில், பாலைவனத்தில், பள்ளத்தாக்கில், சோலை அருகில், பெரிய அணைக்கரையில், தனித் தீவில், பசுங்காட்டில் என்று உலகெங்கும் உள்ள தனித்துவமான லொகேஷன்களைத் தேடித் திருமணங்களை அவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சொந்தக்காரர்கள் வியக்க வேண்டும், ஊரே அசந்துபோக வேண்டும், மாநிலமே பேச வேண்டும், நாடே ஸ்தம்பிக்க வேண்டும், உலகமே திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற லட்சியங்களோடு இந்தக் கோடீஸ்வரர்கள் வீட்டுத் திருமணங்கள் நடக்கின்றன. இதற்காகவே - திருமணங்களே நடந்திராத இடங்கள், நடந்திராத சூழல்கள், பின்னணிகள் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ என்ற பெயரில் தேடப்படுகின்றன.

மிட்டல்களும் அம்பானிகளும்

அவ்ளி மலையில் குப்தா சகோதரர்கள் திருமணத்தை நடத்தியபோது, அந்த பிராந்தியமே அமர்க்களப்பட்டது. சமையல் பாத்திரங்கள், மளிகைச் சாமான்கள், பாய் - படுக்கை - தலையணை முதல் எல்லா வசதிகளும் ஒட்டுமொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் தங்கவும் இளைப்பாறவும் விருந்துண்ணவும் கேளிக்கைகளில் ஈடுபடவும் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டது. ஒவ்வொரு வேளையும் விருந்தினர் களால் எண்ண முடியாத எண்ணிக்கையில் பட்சணங்களும் நொறுக்குத் தீனிகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் சிறப்பாகச் செய்யப்படும் பதார்த்தங்களும் சித்ரான்னங்களும் தயாரித்துப் பரிமாறப்பட்டன. கேளிக்கைக்கு பாலிவுட் தாரகை கத்ரினா கைஃபே நேரில் தனது திரையுலக நாட்டியக் குழுவினருடன் வந்து நாட்டியமாடி விருந்தினர்களை மகிழ்வித்தார் என்றால், மேலதிக ஆடம்பரங்களை இதற்கு மேலும் விவரிக்க வேண்டுமா என்ன? திருமணம் முடிந்த பிறகு திருமண கோஷ்டி விட்டுச்சென்ற குப்பைகள் மட்டும் 220 டன்!

பிரிட்டனில் மிகப் பெரிய உருக்கு சாம்ராஜ்யத்தையே நிறுவியிருக்கும் மிட்டல் குடும்பத் திருமணம் 2004-ல் பிரான்ஸின் வெர்செய்ல்ஸ் நகரில் நடந்தது. அதுதான் பல காலத்துக்குப் பேசப்படும் திருமணமாக இருந்துவந்தது. அடுத்தடுத்து ஏனைய தொழிலதிபர்களும் கோடீஸ்வரர்களும் கோதாவில் இறங்க முன்மாதிரியாகவும்கூட அது அமைந்தது.

எதையும் பிரம்மாண்டமாகச் செய்து பழகிய முகேஷ் அம்பானி தன்னுடைய மகள் திருமணத்தை உச்சத்துக்குக் கொண்டுசென்றார். மும்பையில் டிசம்பர் 2018-ல் நடந்த இஷா அம்பானி - ஆனந்த் பிராமல் கல்யாணத்துக்கு ரூ.700 கோடி வரை செலவிடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஒவ்வொரு விருந்தினருக்கும் அனுப்பிய அழைப்பிதழுக்கான செலவே ரூ.3 லட்சம்; அனைவருக்கும் புதிய வெள்ளித் தட்டில் விருந்து பரிமாறினார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியர், பாடகர், நாட்டியத் தாரகை இத்திருமண விழாவில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக வாங்கிய தொகையே ரூ.28 கோடி என்றார்கள். திருமணத்துக்கு  முந்தைய சடங்குகள் உதய்பூரில் (ராஜஸ்தான்) நடந்தன.  அங்கு விருந்தாளிகளைத் தங்க வைப்பதற்காக ஐந்து ‘5 நட்சத்திர ஹோட்டல்கள்’  வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன. விருந்தினர்களை உதய்பூர் அழைத்து வருவதற்காக வெவ்வேறு நகரங்களிலிருந்து 100 தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. மும்பையின் வொர்லி கடற்கரைப் பகுதியில், புதுமணத் தம்பதியர் குடியிருப்பதற்காகத் தனி பங்களா கட்ட மணமகனின் தந்தை பிராமல், 
2012-லேயே ரூ.452.5 கோடியை ஒதுக்கிவிட்டிருந் தாராம்.

சாமானியர்களின் திருமணமே விரிகிறது

மிட்டல்கள், அம்பானிகள் என்று மட்டும் இல்லை; சாமானியத் திருமணங்களே கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பெரும் செலவு மிக்கதாக மாறியிருக்கின்றன என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.  இன்றைய தேதியில் உலக அளவில் திருமணச் செலவில் முதலிடம் அமெரிக்காவுக்கு. அடுத்த இடத்தில் இந்தியாதான் இருக்கிறது.
இந்திய மக்கள்தொகை 125 கோடிக்கும் மேல். சராசரி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 5.  25 கோடி குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் 20 ஆண்டுகளுக்கு ஒரு திருமணம். எனவே, சராசரியாக ஆண்டுக்கு ஒரு கோடித் திருமணங்கள். மிகக் குறைவாகக் கணக்கிட்டால்கூட ஒரு திருமணத்துக்கு சராசரியாக 30 கிராம் முதல் 40 கிராம் வரையில் தங்கம் வாங்கப்படுகிறது. எனவே, ஆண்டுக்கு திருமணங்களுக்கே 300 டன்கள் முதல் 400 டன்கள் வரை தங்கம் தேவை. இன்னும் 20 ஆண்டுகளில் நபர்வாரி வருமானமே மும்மடங்காக உயரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், திருமணச் சந்தையின் மதிப்பும் அதிகரிக்கும்.
இவ்வளவு செலவு தேவையா?

இந்தியாவில் ஓராண்டு திருமணச் சந்தையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.3,70,000 கோடி. திருமணத்தையொட்டி வாங்கப்படும் தங்க, வைர நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.60,000 கோடி. ஆடைகளின் மதிப்பு ரூ.10,000 கோடி. இன்னும், புதுக்குடித்தனப் பொருட்கள் செலவு ரூ.30,000 கோடி, ஹோட்டல்கள், திருமண மண்டபச் செலவு ரூ.5,000 கோடி; பந்தல், மணமேடை அலங்காரச் செலவு ரூ.10,000 கோடி, அழைப்பிதழ் செலவு ரூ.10,000 கோடி என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். மணப்பெண் நலங்கு சந்தை மட்டும் ரூ.5,000 கோடியாக விரிந்திருக்கிறது; சாப்பாடு ஒரு இலைக்கு ரூ.700 முதல் ரூ.1,000 என்பது சாதாரணமாகிவருகிறது என்கிறார்கள். அதேபோல், புகைப்படம், வீடியோவுக்கான செலவும் ரூ.1 லட்சத்தை எட்டியிருக்கிறது.

வாழ்நாளின் மொத்த வருவாயில் திருமணத்துக் காகச் சராசரியாக 20% தொகையை இந்தியப் பெற்றோர் செலவிடுகின்றனர். எனவே இவ்வளவு செலவு தேவையா என்று பேசுபவர்களும் இருக்கிறார்கள். இப்படியாவது பணம் வெளியே வரட்டுமே என்பவர்களும் இருக்கிறார்கள். சந்தையைப் பொறுத்தளவில் செலவு நல்லதுதான்; சலவைத்தூள்காரர்களுக்கு எப்படி ‘கறை நல்லதோ’ அப்படி!

- வ.ரங்காசாரி,

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x