Published : 03 Jul 2015 10:16 AM
Last Updated : 03 Jul 2015 10:16 AM

ஒரு பத்திரிகையாளரின் மரணம்

உத்தரப் பிரதேச ஆளும் சமாஜ்வாதி கட்சியின் பால்வளத் துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவின் சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் மற்றும் நில ஆக்கிரமிப்புகள் குறித்து ஃபேஸ்புக் கில் தொடர்ந்து எழுதியவர் ஷாஜகான்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜகேந்திர சிங்.

இம்மாதத் தொடக்கத்தில் உடல் முழுவதும் தீக் காயங்களுடன் இறந்துபோனார் ஜகேந்திர சிங். இச்சம்பவம் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பிவருகிறது. ஜகேந்திர சிங்கின் கோர மரணத்துக்குப் பின்னால் உள்ள உண்மைகளை நியாயமான முறையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு வெளிப்படுத்தும் என நம்ப முடியவில்லை. ஏனெனில், அவர்களுடைய நடவடிக்கைகள் ராம் மூர்த்தி வர்மாவைக் காப்பாற்றும் நோக்கிலேயே உள்ளன.

தன் வீட்டில் போலீஸ் மற்றும் குண்டர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதாக ஜகேந்திர சிங் மரண வாக்குமூலம் அளித்த வீடியோ பதிவு வெளியானபோது, அதை உத்தரப் பிரதேச அரசு ஆரம்பத்தில் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் திடீரென, ஜகேந்திர சிங்கின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடும் அவரது குடும்பத்தில் இருவருக்கு வேலையும் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது ஜகேந்திர சிங் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை செய்துகொண்டார் என்கிறது அரசுத் தரப்பு. வலது கைப் பழக்கம் உடையவரான ஜகேந்திர சிங்கின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர் உடலில் வலது பகுதியைக் காட்டிலும் இடது பகுதியில் அதிகப்படியான தீக் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

எனவே, அவர் தற்கொலைதான் செய்துகொண்டிருக்க வேண்டும் எனத் தற்போது சொல்லப்படுகிறது. ஆனால், “போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராய் மற்றும் ஐந்து போலீஸ்காரர்கள் என்னை உயிரோடு கொளுத்தினர். இதற்குக் காரணமானவர் பால்வளத் துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா” என்று ஜகேந்திர சிங் மருத்துவமனையில் மரண வாக்குமூலம் அளித்ததைக் காவல்துறை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஜகேந்திர சிங்கின் மரணத்துக்குக் காரணம், ராம் மூர்த்தி வர்மாதான் என்பதைத் தீவிர விசாரணைக்குப் பின்னரே உறுப்படுத்த முடியும். ஆனால், ராம் மூர்த்தியின் பல்வேறு தவறுகளை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்தியவர் ஜகேந்திர சிங் என்பதை நினைவில்கொள்வது அவசியம்.

தன்னையும் சமாஜ்வாதி கட்சியையும் எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் எனும் ஒரே குறிக்கோளுடன் ஊடகங்கள் செயல்படுவதாக அகிலேஷ் யாதவ் நினைக்கலாம். ஆனால், விசாரணை முடியும்வரை ராம் மூர்த்தியை கேபினட்டிலிருந்து நீக்குவதாக அகிலேஷ் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அவரைக் காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்தார். ஜகேந்திர சிங்கின் மரண வாக்கு மூலம் வெளியான தைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினர் தர்ணா செய்தனர். அதற்குப் பிறகுதான் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் ராம் மூர்த்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிவாகிப் பல நாட்கள் கடந்தும் காவல்துறை அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உ.பி. அரசு உகந்த நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், அவர்கள் மீதுள்ள சந்தேகங்கள் உறுதிப்படும்.

அதிகாரமும் பணமும் மண்டியவர்களின் சதிகளை அம்பலப்படுத்தும் புலனாய்வு நிருபர்களின் வாழ்க்கை எவ்வளவு அபாயகரமானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது ஜகேந்திர சிங்கின் மரணம். இது ஒரு பத்திரிகையாளனின் மரணம் மட்டுமல்ல; கருத்துச் சுதந்திரத்துக்கு வீசப்பட்ட பாசக்கயிறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x