Published : 22 Jul 2015 10:27 AM
Last Updated : 22 Jul 2015 10:27 AM

பாலாறால் பாதிக்காத ஆந்திர - தமிழக நல்லுறவு

கர்நாடகத்தில் பாலாற்றை முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டு ஏரிக்கரைகளை உயர்த்தியது, ஏரிகளை கட்டியது என பல்வேறு கட்டமைப்புகளை அம்மாநில அரசு ஏற்படுத்தியது. இருப்பினும் இதுபோன்ற தடைகளைக் கடந்து குப்பம் சாந்திபுரத்தில் ஆந்திர மாநிலத்துக்குள் பாலாறு அடி எடுத்து வைக்கிறது.

தமிழ்நாடு-கர்நாடகம் மாநில எல்லையில் இருக்கும் குப்பம் தொகுதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி. இங்கு சற்று தூக்கலாகவே தமிழ் மணம் வீசுகிறது. காரணம் இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். வியாபார ரீதியாகவும், உறவுகளாலும் வேலூர் மாவட்டத்துடன் தொடர்பில் இருப் பவர்கள்.

இவர்களின் தொப்புள்கொடி உறவுகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் உள்ளன. தமிழ்நாட்டுக்கு பாலாற்று தண்ணீரை விட்டுக் கொடுக்க ஆந்திர அரசுக்கு மனது இல்லை. ஆனாலும், திருமண பந்தங்கள் காரணமாக இரண்டு மாநிலங்கள் இடையிலான உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.

ஆந்திர மாநிலத்தில் வெறும் 33 கி.மீ. தொலைவு மட்டுமே பாலாறு பாய்கிறது. அதற்குள் 28 தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்குகிறது ஆந்திரம். கர்நாடகத்திலிருந்து வெளியேறும் மிச்ச மீதி தண்ணீரையும் ஆந்திரா சிறை பிடிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த 28 தடுப்பணைகளை நிரப்பி மாறுகால் பாய்ந்திருக்கிறது பாலாறு.

குப்பம் தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க 2008-ம் ஆண்டு கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி அரசு முயற்சி எடுத்தது. சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டிக்கும் இடையிலான அரசியலில் கணேசபுரம் அணை கட்டும் திட்டத்துக்கு ஆர்வம் காட்டியது அப்போதைய காங்கிரஸ் அரசு.

கணேசபுரத்தில் அணை கட்டுவதால் எந்த பயனும் இல்லை என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இருந்தாலும், குப்பம் தொகுதியின் தண்ணீர் பிரச் சினையை முன்வைத்த காங்கிரஸ் அரசின் திட்டத்துக்கு சந்திரபாபு நாயுடுவும் ஆதரவு தெரிவித்தார்.

அணை கட்ட தீர்மானித்த இடத்தில் பாமக போராட்டம் நடத்தியது. மற்ற கட்சிகளும் கொடுத்த தொடர் நெருக்கடி மற்றும் வழக்கு காரணமாக அணை கட்டும் திட்டத்தை ஆந்திர அரசு கிடப்பில் போட்டது.

தண்ணீர் பஞ்சம்

சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் 2,070 கிராமங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப் பாடு நிலவுகிறது. இவற்றில் அதிகபட்ச எண்ணிக் கையாக 350 கிராமங்கள் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பம் தொகுதியின் வளர்ச்சிக்காக KUPPAM AREA DEVELOPMENT AUTHORITY (KADA) என்ற தனி நிர்வாக அமைப்பை சந்திரபாபு நாயுடு ஏற்படுத்தியுள்ளார். குடிநீர், தொழிற்சாலை, சாலை போக்குவரத்து, கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு துறைகளில் KADA சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஆந்திராவின் விவசாயம், குடிநீர் தேவைக்காக அந்திரி-நீவா நதிநீர் இணைப்பு திட்டத்தை குப்பம் தொகுதிக்கு விரிவாக்கம் செய்ய KADA கவனத்துடன் செய்து வருகிறது.

என்.டி.ஆர். சுஜலா திட்டம்

குப்பம் நகர மக்களின் குடிநீர்த் தேவையை தற்காலிகமாக பூர்த்தி செய்ய என்.டி.ஆர். சுஜலா (NTR SUJALA PATHAKAM) குடிநீர் திட்டத்தை 2013 அக்டோபர் 2-ல் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 2 ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.



சுஜலா கார்டு மூலம் கேனில் தண்ணீர் நிரப்பும் இளைஞர்: படங்கள்: வி.எம்.மணிநாதன்

என்டிஆர் அறக்கட்டளை உதவியுடன் செயல்படும் இந்த திட்டத்துக்காக, குப்பம் நகரில் 110, நகரை ஒட்டிய கிராமத்தில் 163 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி இயந்திரங்கள் கட்டப்பட்டுள்ளன.

கார்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுகிறது. பொதுவான ஒரு இடத்தில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர், பிரத்யேக டிராக்டரில் கொண்டு வரப்பட்டு தினமும் இந்த தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏடிஎம் வடிவ எலக்ட்ரானிக் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் இந்த அட்டையின் பிரத்யேக எண்ணுக்கு பணம் கொடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். பின்னர், குடிநீர் தொட்டியில் உள்ள இயந்திரத்தில் இந்த அட்டையை ஏடிஎம் கார்டைப்போல உள்ளே செலுத்தினால் 20 லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். இதற்காகவே, பயனாளிகள் வீட்டுக்கு 20 லிட்டர் கொள்ளவு கொண்ட மஞ்சள் நிற கேன் கொடுத்துள்ளனர். சுஜலா திட்டமே எங்களது தாகத்தை தீர்க்கிறது’’ என் பெருமையாக தெரிவிக்கின்றனர் குப்பம் மக்கள்.

பாலாறும் சேக்கிழாரும்

தனது பயணத்தில் கடைசி பாதை வரை தன்னை நம்பி வாழும் மக்களுக்கு எல்லா வளங்களையும் அள்ளிக்கொடுத்த பாலாற்றால், ‘‘எருமைக் கடாக்களை பூட்டி ஏர் உழுது பயிர் செய்த விவசாயிகள் எப்போதும் ஆர வாரத்துடன் இருந்தனர்’’ என சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

‘‘பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்

மள்ளல் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட

வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப்

பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி’’

என்ற பாடல் வரியில் ‘‘குழந்தை தன் கையால் தடவவும் பெருகும் பால் சொரிகின்ற தாயைப் போல, உழவர்கள் வேனிற் காலத்தில் பாலாற்றில் மணல் மேடுகளை பிசைந்து கால்வாய் உண்டாக்கி ஒழுங்கு படுத்த, ஊறிப்பெருகும் நீர் இரண்டு பக்கங்களிலும் கால்வாய்களின் வழியே மிதந்து ஏறிச்சென்று பள்ளமான நிலத்தில் நீண்ட வயல்களின் பருத்த மடைகளை உடைக்கும். ‘‘வளமை வாய்ந்த ஊர்கள். குளிர்ந்த பெரிய வயல்களால் சூழப்பட்ட நிலங்கள், நெற் கூடுகள் நெருங்கிய இல்லங்கள், விருந்தினரை வரவேற்று உபசாரம் செய்யும் பெருமையில் நிலைத்த பெரிய குடில்கள், மாடங்கள் ஓங்கிய தெருக்களைப் பெற்றிருந்தன’’ என மக்களின் வாழ்க்கை முறையை சேக்கிழார் விவரித்துள்ளார்.

- பாலாறு பயணிக்கும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x