Published : 06 Jul 2015 08:58 AM
Last Updated : 06 Jul 2015 08:58 AM

ஒரு புத்தகக்காட்சி போதுமா?

சென்னை தவிர ஏனைய ஊர்களின் புத்தகக்காட்சிகள் கவனிக்கப்படாதது வேதனையானது.

நெய்வேலி, ஓசூர் புத்தகக்காட்சிகள் பற்றிக் கேள்விப்பட் டிருக்கிறீர்களா? எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மிஞ்சியிருக்கும் ஒரே கலாச்சார வெளியாகவும் வர்த்தக வெளியாகவும் புத்தகக்காட்சிகளே இருக்கின்றன. ஆனால், அவை எந்த அளவு சீராகவும் வெற்றிகரமாகவும் நடத்தப்படுகின்றன என்பது முக்கியமான கேள்வி.

அரசியல், இலக்கியம், வரலாறு போன்ற நூல்களை விற்கக்கூடிய சில்லரைப் புத்தக மையங்கள் தமிழகத்தில் மிகக் குறைவு. பரவலாகப் புத்தகக் கடைகள் இருந்தாலும் கூட பெரும்பாலான கடைகள் மிகச் சிறிய இடத்தில் இயங்கு கின்றன. அவையும்கூடத் தாங்கள் பிழைத்திருப்பதற்காக வர்த்தகரீதியான நூல்களையே முன்னிலைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம். ஏனென்றால், சிறிய புத்தக் கடைகளின் விற்பனையும் வருமானமும் மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்கவே இயலாத நிலையில்தான் இருக்கின்றன. சுயமுன்னேற்ற நூல்கள், கல்விப்புலம் சார்ந்த நூல்கள், ஆன்மிக நூல்கள், சினிமா-ஊடகப் பிரபலங்களின் நூல்கள் ஆகியவற்றுக்கே பெரும்பாலான புத்தகக் கடைகள் முன்னுரிமை தருகின்றன. ஒரு பதிப்பகத்தில் நவீன இலக்கியம் சார்ந்து 500 புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அதில் 50 புத்தகங்கள் ஒரு புத்தகக் கடையில் பார்வைக்கு இருப்பது பெரிய விஷயம். குறிப்பாக, இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பல புத்தகக் கடைகள் வாங்குவதே கிடையாது. அப்படியே வாங்கினாலும் விற்காது என்று எங்காவது ஒரு மூலையில் போட்டுவிடுவார்கள்.

இழப்பு ஏற்படுத்தும் சிறிய கடைகள்

புத்தகக் கடைகளில் பல சிறிய புத்தகக் கடைகள் ஆரம்பிக்கப்படுவதும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் மூடப்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இப்படி மூடிவிட்டுப் போகும் புத்தக விற்பனையாளர்கள் பலர் தாங்கள் நஷ்டமடைவது மட்டுமல்ல, கடையை மூடும்போது பதிப்பாளர்களுக்குக் கணக்கு வழக்குகளை உரிய முறையில் முடிக்காமல் அவர்களுக்கும் இழப்பையே ஏற்படுத்துகின்றனர். மற்றொரு பிரச்சினை, விற்ற புத்தகங்களுக்குப் பணம் தராமல் இழுத்தடிப்பதற்காகப் புத்தகங்களைக் கடைக்காரர்கள் மறுபடி வாங்காமலேயே இருப்பார்கள். இதனால் பல புத்தகங்கள் ஒரே ஒருமுறைதான் கடைக்கு வரும். இது புரியாத இளம் எழுத்தாளர்களோ நம் புத்தகம் வெளிவந்தும்கூட ஏன் எங்கும் கிடைக்கவில்லை என மனமொடிந்துபோவார்கள். சிறிய புத்தகக் கடைகளின் கொஞ்சநஞ்ச விற்பனை வாய்ப்புகளையும் இன்று ஆன்லைன் புத்தக விற்பனை பறித்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. புத்தகக் கடைகளுக்கு ஆன்லைன் புத்தக விற்பனை ஒரு உண்மையான மாற்று அல்ல. ஒரு புத்தகக் கடையில் பலதரப்பட்ட புத்தகங்களைப் பார்த்து, நமக்குப் பிடித்தவற்றைத் தேர்வுசெய்வது ஒரு கலாச்சாரச் செயல்பாடு. லேண்ட் மார்க் புத்தகக் கடைகள் மூடப்பட்டபோது, ஒரு பதிப்பாளனாகவும் எழுத்தாளனாகவும் வாசகனாகவும் நான் அடைந்த ஏமாற்றம் கடுமையானது.

புத்தகக்காட்சிகளே நம்பிக்கை

பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் முறைகேடுகள் உச்சத்துக்குச் சென்ற பிறகு, பதிப்பாளர்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பது புத்தகக்காட்சிகள் மட்டுமே. ஒரு பதிப்பாளர் தன்னுடைய எல்லா வெளியீடுகளையும் மக்கள் முன் காட்சிப்படுத்துவதற்கு புத்தகக்காட்சிகளே ஒரே வாய்ப்பாக இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு வகையான புத்தகக்காட்சிகள் ஆண்டு முழுக்க நடைபெற்றுவருகின்றன. முதலாவது, பெரிய பெரிய புத்தக் கண்காட்சிகள். சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி ஆகியவை இந்தப் பிரிவில் அடங்கும். இவற்றில் மக்கள் வருகையும் விற்பனையும் அதிகமாக இருக்கும். அடுத்ததாக நடுத்தரப் புத்தகக்காட்சிகள். திருப்பூர், தஞ்சை, உடுமலைப்பேட்டை, ஓசூர், பெரம்பலூர், காரைக்குடி, புதுச்சேரி போன்ற சிறு நகரங்களில் அவை நடக்கின்றன. பாரதி புத்தகாலயம், என்.பி.டி. போன்ற நிறுவனங்கள், உள்ளூர் பண்பாட்டு அமைப்புகள் இந்தக் கண்காட்சிகளை நடத்துகின்றன. ஏற்பாட்டாளர்களின் ஆர்வமும் மாவட்ட ஆட்சித் தலைவரின் அக்கறையும் இருக்கும் இடங்களில் இந்த நடுத்தரப் புத்தகக்காட்சிகள் ஓரளவு வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றன. மற்ற இடங்களில் பதிப்பாளர்கள் - விற்பனையாளர்கள் கடும் நஷ்டத்தையே சந்திக்கின்றனர்.

மூன்றாவதாக, சிறிய ஊர்களில் யாராவது ஒரு புத்தக விற்பனையாளர் திருமண மண்டபம் போன்ற இடங்களில் நடத்தும் புத்தகக்காட்சிகள். அங்கு அவரே புத்தகங்களை வாங்கி விற்பனை செய்வார். நான்காவதாக, பள்ளி - கல்லூரிகளில் மூன்று நான்கு நாட்களுக்கு நடைபெறும் மிகச்சிறிய புத்தகக்காட்சிகள்.

மற்ற நகரங்கள் முக்கியமில்லையா?

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாஸி) நேரடியாக நடத்தும் புத்தகக்காட்சிகள் என்றால், அவை சென்னை மற்றும் மதுரை புத்தகக்காட்சிகள் மட்டுமே. மற்ற கண்காட்சிகள் அனைத்தும் பிற அமைப்புகளாலேயே நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் மிக முக்கியமான நகரங்களான திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நகரங்களில் முறையான புத்தகக்காட்சிகள் இல்லை என்பது பெரும் அவலம். அவ்வப்போது இந்த இடங்களில் ரோட்டரி அல்லது வேறு ஏதேனும் அமைப்புகள் புத்தகக்காட்சி நடத்துவது உணடு. அவற்றில் பெரும்பாலானவை தோல்வியடைந்த புத்தகக்காட்சிகள். கல்வி வளர்ச்சியும் மக்கள் திரளும் கொண்ட இந்த நகரங்களில் மிக வெற்றிகரமான புத்தகக்காட்சிகளை நடத்த முடியும். ஆனால், அதை வெற்றிகரமாகச் செய்யக்கூடியவர்கள் இல்லை. பலர் நடத்துகிற புத்தகக்காட்சிகள் நடைபெறுவது உள்ளூர் மக்களுக்குக்கூடத் தெரிவதில்லை. விளம்பரம் இருக்காது. ஊடகங்களையும் முறையாக அணுகியிருக்க மாட்டார்கள். சென்ற ஆண்டு நெல்லையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆர்வத்தால் வெற்றிகரமான ஒரு கண்காட்சி நடந்தது. திருச்சியில் உணவுத் திருவிழாவோடு சேர்ந்து ஒரு புத்தகக்காட்சி நடைபெற்றது. இந்த ஆண்டில் கோவை, நெல்லை, திருச்சி ஆகிய நகரங்களில் புத்தகக்காட்சிகள் நடைபெறுவதற்கு எந்த அறிகுறியும் இல்லை. இதுகுறித்து பபாஸிக்குப் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் இந்த நகரங்களில் கண்காட்சிகள் நடத்துவதிலிருந்து அவர்களை எது தடுக்கிறது என்று தெரியவில்லை. சில ஊர்களில் கண்காட்சிகள் நடத்துவதில் பபாஸிக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்படலாம். உள்ளூர் ஆதரவாளர்களைத் தீவிரமாக அணுகுவதன் மூலமாக நஷ்டத்தைக் குறைக்கலாம். மேலும், இன்று வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் எல்லா கண்காட்சிகளுமே ஆரம்பத்தில் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தவைதான். கண்காட்சியை ஒரு ஊரில் தொடர்ச்சியாக நடத்தினால்தான் அது மக்கள் இயக்கமாக மாறும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் வெவ்வேறு அமைப்புகள் நடத்துவதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று ஊர்களில் புத்தகக்காட்சிகள் நடக்கின்றன. இது ஊழியர்கள் குறை வாக உள்ள சிறு பதிப்பகங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்து கிறது. புத்தகத் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக் கும் சூழலில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்குப் புத்தகக்காட்சிகள் தொடர்பாகப் பெரும் பொறுப்பு இருக்கிறது. தமிழகத்தின் முக்கியமான பெரிய, சிறிய நகரங்களில் அது நேரடியாகக் காட்சிகளை நடத்த முன்வர வேண்டும். உள்ளூர் பண்பாட்டு அமைப்புகள், இலக்கிய அமைப்புகள், கல்வி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் துணையுடன் பபாஸி இதைச் செய்தால், நிச்சயமாக எல்லா ஊர்களிலும் புத்தகக் காட்சிகள் மக்கள் திருவிழாவாக மாறும். புத்தகக்காட்சிகளை ஏற்பாடு செய்தால் மட்டும் போதாது; வாசிப்பு ஆர்வம் உள்ள மக்களை ஈர்க்கும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சிறந்த சொற்பொழிவுகள், பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை உருவாக்க வேண்டும். பத்து சதவிகிதம்தான் தள்ளுபடி தர வேண்டும் என்பதுபோன்ற அபத்தமான விதிமுறைகளைக் களைந்து, அதிகபட்சக் கழிவில் நூல்களை வாங்கக் கூடிய இடமாகக் கண்காட்சிகள் மாற்றப்பட வேண்டும். உள்ளூர் ஊடகங்களைக் கண்காட்சிகளோடு இணைக்க வேண்டும்.

பெரிய கனவுகள் கைகூட சிறிய முயற்சிகள் இருந்தால் போதும். சிறிய வெற்றிகளை அடைய பெரிய கனவுகள் தேவை.

- மனுஷ்ய புத்திரன், கவிஞர், உயிர்மை வெளியீட்டாளர், அரசியல் விமர்சகர். தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x