Last Updated : 21 Jul, 2015 09:08 AM

 

Published : 21 Jul 2015 09:08 AM
Last Updated : 21 Jul 2015 09:08 AM

சீர்திருத்தங்களும் சந்தேகங்களும்!

அறிவியல், கணிதம் முதலான நவீன பாடங்களைக் கற்பிக்காத மதரசாக்களை ‘பள்ளிகள் அல்லாதவை’ எனவும், அங்கு சென்று படிக்கும் குழந்தைகளை ‘பள்ளி செல்லாதவர்கள்' என அறிவிக்கவும் மகாராஷ்டிர அரசு எடுத்துள்ள முடிவு முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பொருள், முஸ்லிம்கள் இத்தகைய நவீன மயமாதலுக்கு எதிரானவர்கள் என்பதல்ல. தமிழ் முஸ்லிம் வார இதழ் ஒன்று இந்த ஆணையை வரவேற்று எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது. மதரசாக்களில் நவீன பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும், மதரசாக் கல்வி வெளியில் உள்ள பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் படிப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்கும் முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவான கருத்துக்களே உள்ளன.

முஸ்லிம்களின் விருப்பம்

அதிகரித்துவரும் புதிய கல்வி, அவற்றுடன் இணந்த வேலைவாய்ப்பு ஆகியவற்றின் பயன்கள் தம் பிள்ளைகளையும் சென்றடைய வேண்டும் என்பதே முஸ்லிம்களின் விருப்பமாக உள்ளது. பழைய மதரசாக் கல்விமுறையில் வேலைவாய்ப்பு என்பது மத நிறுவனங்களுக்குள்ளேயே சுருக்கப்பட்டுவிடுவதால், முஸ்லிம்கள் பெரும்பாலும் பிள்ளைகளைப் பொதுவான கல்வி நிறுவனங்களிலேயே சேர்க்க விரும்புகின்றனர். சச்சார் அறிக்கை நான்கு சதவீதத்துக்கும் குறைவான முஸ்லிம் மாணவர்களே பழைய மாதிரியான மதரசாக்களில் பயில்கின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

எனினும், இன்று மகாராஷ்டிர அரசு இப்படியான ஓர் அறிவிப்பைச் செய்துள்ளது ஏன் முஸ்லிம்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

யார் இதைச் செய்கிறார்கள், அவர்கள் வேறு எதையெல்லாம் செய்துவருகிறார்கள் என்பதோடு இணைந்த பிரச்சினை இது. மாட்டுக்கறியின் மீதான தடை, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை அளிப்பதை நிறுத்துதல், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து ஆகியவற்றின் பின்னணியில், மதச்சார்பின்மையை வெளிப்படையாக எதிர்க்கும் ஒரு அரசு இதைச் செய்யும்போதுதான்

`என்ன நோக்கத்துக்காக இதை இப்போது செய்கிறீர்கள்?' என்கிற கேள்வி எழுகிறது.

சர்ச்சையில் மதரசாக்கள்

மதரசாக்கள் என்பன தீவிரவாதிகளை உருவாக்கும் பயிற்சிக் களமாக இருக்கின்றன எனச் சகட்டுமேனிக்கு விமர்சித்தவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள். மதரசாக்களையே மூட வேண்டும் எனவும் அவர்களது கிளை அமைப்புகள் சில அவ்வப்போது கோரிக்கை வைக்கின்றன. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது (மே 6, 2012), நிதி உதவி கோரி மதரசாக்கள் அரசுக்கு விண்ணப்பித்தபோது, அவற்றை மாநில அரசுகள் பரிந்துரைப்பதற்கு முன்னதாக அவற்றின் பின்புலங்களை ஆராய வேண்டும் என மத்திய மனித வளத்துறை மாநில அரசுகளுக்கு ஆணை ஒன்றை அனுப்பியது. அப்போதும் இப்படி ஒரு சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.

எனவே, இன்று மகாராஷ்டிர அரசு இப்படியான ஒரு ஆணையைப் பிறப்பித்தவுடன் இது தம் அடையாளத்தையே சிதைக்கும் நடவடிக்கையாக இருக்குமோ என்கிற அச்சம் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுவது இயல்பு. 96% முஸ்லிம் மாணவர்கள் பொதுக் கல்விக்கே முன்னுரிமை அளிக்கும்போது, ஏன் இன்னும்கூட 4% முஸ்லிம் மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் பழைய மாதிரியான மதரசாவுக்கே அனுப்ப நேர்கிறது?

இதற்குப் பின் பல காரணங்கள் உள்ளன. சச்சார் அறிக்கை இவற்றுக்கும் பதிலளிக்கிறது. மதக் கலவரம், மத வெறுப்பு ஆகியன மிகுந்துள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளைத் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர். இந்திய அளவில் முஸ்லிம்களில் பெரும்பாலோர் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் கட்டப்படுவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் இருத்த வேண்டும்.

சச்சார் அறிக்கை

பெண்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதிகள் இல்லாமை, பள்ளிகளில் போதிய அளவில் பெண் ஆசிரியைகள் இல்லாமை, பாட நூல்களில் இந்து மதம் சார்ந்த கருத்துக்கள் புகுத்தப்படுதல், சரஸ்வதி வணக்கம் முதலியவற்றைப் பாடுவதைப் பள்ளிகளில் கட்டாயமாக்குதல் முதலானவையும் 4% மாணவர்கள் பழைய மாதிரியான மதரசாக்களைத் தேர்வுசெய்வதற்குக் காரணமாகிவிடுகின்றன என்கிறது சச்சார் அறிக்கை.

சச்சார் அறிக்கையின் பரிந்துரைகளில் ஒன்று, முஸ்லிம் மொஹல்லாக்களுக்கு (குடியிருப்புகளுக்கு) அருகில் அரசுப் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது. அதேபோல மதரசா பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மதரசாக் கல்வி முடிந்தவுடன் பொதுக் கல்வி முறையில் இடம் பெறுவதற்கேற்ப மதரசாக் களை

`மேல்நிலைக் கல்வி வாரியத்துடன்' (Higher Secondary Board) இணைப்பதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் என்பது சச்சாரின் இன்னொரு பரிந்துரை. அதேபோல உருது மொழி பேசும் பகுதிகளில் உருது மொழியை ஒரு பாடமாகக் கற்கும் வாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இப்பகுதியில் செயல்படும் அங்கன்வாடிகளிலும் உருது மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்கிறார் சச்சார்.

இந்த அடிப்படையான பிரச்சினைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இப்படி மதரசாக்களைக் கல்வி நிறுவனங்களாகவே ஏற்க மாட்டோம், இங்கு பயில்வோர் படிக்காதவர்களாகவே கருதப்படுவர் என்றெல்லாம் அதிரடி ஆணைகளைப் பிறப்பிப்பது இடுவது முஸ்லிம்கள் அந்நியப்படவே வழிவகுக்கும்.

முஸ்லிம்கள் பிற நாட்டு அறிவுச் செல்வங்களைப் புறக்கணிக்கிற பாரம்பரியம் கொண்டவர்களல்ல என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. கிரேக்கத் தத்துவங்கள், அறிவியல் கருவூலங்கள் எல்லாம் காலத்தால் அழிக்கப்பட்டபோது, முஸ்லிம் சிந்தனையாளர்களே அவற்றைப் போற்றிப் பாதுகாத்து, பின்னாளைய தலைமுறைகளுக்குக் கையளித்தனர் என்கிற வரலாற்றையும் நாம் மறந்துவிடலாகாது.

நவீன கல்வி அளிக்கும் பல்வேறுபட்ட புதிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளின் ஊடாகத் தாங்கள் ஆற்றல்படுத்தப்பட வேண்டும் (Muslim Empowerment) என்பதே இன்று முஸ்லிம் இளந் தலைமுறையின் விருப்பமாக உள்ளது என்பதை அரசு விவேகத்துடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ‘மதரசா நவீனமயமாக்கப்படுதல்’ என்பதன் மூலம் அரசு என்ன விரும்புகிறது என்பதை அது தெளிவாக்க வேண்டும். முஸ்லிம் கல்வி யாளர்கள், தேவ்பந்த் போன்ற கல்வி நிறுவனப் பேராசிரியர்கள் ஆகியோரை இணைத்து மதரசா சீர்திருத்தம் குறித்த ஒரு அறிக்கையை உருவாக்கி, அதை விவாதத்துக்கு உள்ளாக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படை பரஸ்பர நம்பிக்கைதான். சிறுபான்மை மக்களைப் பொருத்தமட்டில் அந்த நம்பிக்கையை உருவாக்குவதில் அரசுக்குத்தான் முதன்மையான பங்கு உள்ளது!

- அ. மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்,

- தொடர்புக்கு: professormarx@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x