Published : 07 Jul 2015 11:32 AM
Last Updated : 07 Jul 2015 11:32 AM

பாலியல் வழக்கில் சமரசம் கூடாது

பாலியல் வழக்கில் சமரசம் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருப்பது வரவேற்கக் கூடியது அல்ல. குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 320-ல் 56 குற்றங்களுக்குச் சமரசம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதில் 43 குற்றங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே சமரசம் செய்துகொள்ளலாம் என்றும்

13 குற்றங்கள் நீதிமன்ற அனுமதியுடன் சமரசம் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர மாநிலத்தில் மேலும் இரண்டு குற்றங்களும்

மத்தியப் பிரதேசத்தில் மேலும் நான்கு குற்றங்களும் சமரசம் செய்துகொளளலாம் என்று அந்த மாநில அரசுகள் சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளன. இவற்றில் நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே சமரசம் செய்துகொள்ளலாம் என்ற குற்றங்கள் பட்டியலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 497, (பிறன்மனை புணர்தல்) , 498 (திருமணமான பெண்ணைக் கடத்திச் செல்லுதல்) ஆகிய குற்றங்கள் அடங்கியுள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பிரிவு 497 குற்றத்துக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் குற்றவாளியுடன் சமரசத்துக்குத் தகுதியானவன் என்று கூறப்பட்டிருக்கிறது.

பிரிவு 498 குற்றத்துக்கு அந்தப் பெண்ணின் கணவனும் அந்தப் பெண்ணும் குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ளலாம். இந்த விஷயங்களில் எல்லாம் பெண்ணின் கண்ணியத்துக்கு எதிரானது எனக் கண்டுகொள்ளாத உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பது வியப்பாக உள்ளது. உச்ச நீதிமன்றங்கள் தத்துவார்த்த சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, யதார்த்த நடைமுறைபற்றிச் சிந்தித்தால் நல்லது. மேலும், சமரசம் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்ததே என்பதையும் மறந்துவிடக் கூடாது!

- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு), உலகனேரி,மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x