Published : 16 May 2014 07:21 AM
Last Updated : 16 May 2014 07:21 AM

தேவை வங்கித் துறை சீர்திருத்தம்

புதிதாகப் பதவியேற்கவிருக்கும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டியவற்றில் முதல் வரிசையில் இருப்பது வங்கித் துறைச் சீர்திருத்தம். புதிய அரசு மேற்கொள்ளவிருக்கும் வளர்ச்சித் திட்டங்களானாலும் சமூகநலத் திட்டங்களானாலும் வங்கிகள் வழியாகத்தான் அவை மக்களைப் போய்ச்சேரும் என்பதே இதற்கு முக்கியக் காரணம்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் பங்கு மதிப்பு 50%-க்கும் குறைவாக இருக்க வேண்டும், சிங்கப்பூரில் உள்ள ‘டுமா செக்' என்ற நிதி முதலீட்டு நிறுவனத்தைப் போல இந்தியாவிலும் ‘வங்கி முதலீட்டு நிறுவனம்' ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல பரிந்துரைகளை அளித்திருக்கிறது வங்கித் துறைச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக ரிசர்வ் வங்கி நியமித்த குழு. வெளிநாட்டு வங்கிகளுடன் போட்டியிட வசதியாக அரசுத் துறை வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு வங்கித் துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்கள். இப்போது மாநிலங்களவையில் கட்சிகளுக்குள்ள வலுவைப் பார்க்கும்போது, பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்கூட இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது சாத்தியம் அல்ல என்றே தோன்றுகிறது.

வங்கி முதலீட்டு நிறுவனம் என்ற கோட்பாட்டைப் புதிய அரசு ஏற்றால், வங்கிகள் மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடும். அரசுத் துறை நிறுவனங்களின் நிர்வாகிகள் குழுவில் அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் ஆதரவு பெற்ற அதிகாரிகள் இடம்பெறுவது குறையும். வங்கிச் சேவைகளில் அணுகுமுறை, முன்னுரிமை தர வேண்டிய துறைகள் போன்றவற்றை அது முடிவு செய்யும். வங்கிகளில் அரசு முதலீடு செய்துள்ள பணத்தை அது பாதுகாத்துப் பெருக்கும்.

‘உரிமையாளர்' என்கிற நிலையிலிருந்து ‘முதலீட்டாளர்' என்ற நிலைக்கு அரசு மாறும்போது அரசுக்குப் பதில் சொல்லும் கடமை வங்கிகளுக்கு ஏற்படுகிறது. நிதி லாபகரமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதா, வங்கியின் செயல்பாடுகள் முறையாக நடக்கின்றனவா என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு அதிகமாகிறது.

அரசுத் துறை வங்கிகளில் வாராக் கடன் அளவு 10% ஆக உயர்ந்திருப்பதுதான் தற்போதைய அச்சத்துக்குக் காரணம். கடனுதவி வழங்குவதில் அரசின் வற்புறுத்தலாலும் வங்கி மேலாளர்களின் அனுபவக் குறைவு, அலட்சியம் போன்றவற்றாலும் வாராக்கடன் அளவு அதிகரித்துவருகிறது. வங்கிகளைச் சீரமைக்கவும் சர்வதேச அரங்கில் போட்டியிடவும் அதிக முதலீடு தேவைப்படுகிறது. இதற்கு வங்கி முதலீட்டு நிறுவனம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகிறது. இதைப் புதிய அரசு பரிசீலித்தே தீர வேண்டும் என்கின்றனர் வங்கிகள் வட்டாரத்தினர்.

அரசு வங்கிகள் அதிகச் சுயாதிகாரத்துடன் செயல்பட வேண்டும், அரசுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கிகளை இணைத்து சேவையை விரிவுபடுத்துவதுடன் வெளிநாடுகளிலும் சேவையைத் தொடங்க வேண்டும் என்றெல்லாம் வங்கித் துறையைச் சீரமைக்க நியமிக்கப்பட்ட குழுக்கள் முன்பே வலியுறுத்தியுள்ளன. புதிய அரசு இவற்றையெல்லாம் பரிசீலித்து விரைந்து முடிவெடுப்பது அவசியம். வங்கிகளின் ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் நலன் மட்டுமல்ல, வங்கிகளின் நலனையும் கருத்தில்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x