Published : 19 May 2014 07:55 AM
Last Updated : 19 May 2014 07:55 AM

காங்கிரஸ் மீண்டெழும்!

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவல்ல, பிரமிக்க வைக்கும் மிகப் பெரிய வெற்றியை நரேந்திர மோடி அடைந்துள்ளார். இந்திய அரசியல் மரபின்படி அவரை நான் பாராட்டியாக வேண்டும்; தேர்தலை அதிபர் பதவிக்கான தேர்தலைப் போல அவர் மாற்றிவிட்டார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

அனைவரின் மிகவும் தீவிரமானதும் ஆக்ரோஷமானதுமான தேர்தலை நேர்மையாகச் சந்தித்தோம் என்பதைச் சொல்லிக் கொள்வதில் ஒரு காங்கிரஸ்காரன் என்ற வகையில் பெருமிதம் அடைகிறேன். 125 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்தக் கட்சி, பல்வேறு முறை மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் நடந்த தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது; தோல்வியைத் தழுவிய சந்தர்ப்பங்களில் தவறுகளைத் திருத்திக்கொண்டு, மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 2014-ல் ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வியிலிருந்தும் கட்சி எழும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

ஆத்ம பரிசோதனையும் சீர்திருத்தங்களும்

2004 முதல் 2014 வரையில் காங்கிரஸ் கட்சி இரண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் 21 சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக் கிறது. இவையனைத்துமே சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கின் தலைமையில்தான் நிகழ்ந்திருக்கின்றன. காங்கிரஸ் வென்றதிலாகட்டும் தோற்றதிலாகட்டும் இந்த மூவரும் முன்னின்று கட்சியை வழிநடத்தாமல் இருந்ததில்லை, பொறுப்பை விட்டுவிட்டு ஓடி ஒளிந்ததுமில்லை. வெற்றியைப் போலவே தோல்வியும் கூட்டாக எடுக்கப்படும் முடிவுகளால் கிட்டுவது.

காங்கிரஸை எப்படிச் சீர்திருத்த வேண்டும் என்பதில் ஒவ்வொரு காங்கிரஸ்காரரிடமும் ஒரு பட்டியல் இருக்கும். என்னுடைய பட்டியல் இதோ:

மற்றெல்லா தேசியக் கட்சிகளையும் மாநிலக் கட்சி களையும்விட, காங்கிரஸ் கட்சியில் திறமையானவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். மூத்த தலைவர்கள் நிலையிலும் இடைநிலைத் தலைமையிலும் உள்ள இவர்கள்மீது நம்பிக்கை வைத்து இவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதில்தான் கட்சி தவறுகிறது. கட்சியில் முதியவர்களும் வேண்டும் இளைஞர்களும் வேண்டும். ஒவ்வொருவரையும் நன்கு ஆராய்ந்து, பரிசீலித்துத் தகுதி, திறமை, நேர்மை உள்ளவர்களைத் தேர்வுசெய்து அவர்களைக் கடைசி வரை ஆதரிக்க வேண்டும். கட்சிக்கு விசுவாசமாக இருக்கிற தொண்டர்களுக்கு, ‘தாங்கள் மதிக்கப்படுவோம்' என்ற உணர்வு வர வேண்டும். அப்போதுதான் இது நம்முடைய கட்சி என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும்.

தற்காலிகப் பயன்பாட்டுக்காகவும் சந்தர்ப்ப வாதத்துக்காகவும் சொந்த ஆதாயத்துக்காகவும் கூட்டணி சேர வரும் கட்சிகளிடம் ‘மிகவும் எச்சரிக்கையாக' இருக்க வேண்டும். கட்சி மீதும் கட்சித் தலைமை மீதும் சேற்றை வாரி இறைத்துவிட்டு, சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் கூட்டணியில் இடம்பெற்று உயர் பதவிகளை அனுபவிக்கும் தோழமைக் கட்சிகளைப் பார்த்து வெறுப்படையாத காங்கிரஸ்காரர்களே இல்லை. ஆர்ப்பாட்டம் செய்வோருக்குப் பதவி தருவதும் அமைதியான தொண்டர்களை அலட்சியப்படுத்துவதும் கூடாது. விசுவாசமாகவும் அக்கறையாகவும் செயல்படும் தொண்டர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

சில பிரச்சினைகளில், கட்சிக்குள் அனைத்துத் தரப்பினரிடமும் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும். கட்சியின் உயர் நிலையில் உள்ள ஓரிருவரிடம் மட்டும் கேட்டு முடிவெடுப்பது நல்லதல்ல. தங்களுடைய சுயநலனுக்காகச் செயல்படும் அவர்களுடைய யோசனைகளால் ஏற்படும் விளைவுகளுக்குக் கட்சி பொறுப்பேற்க நேரிடுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது, இரண்டாவது ஆட்சிக் காலத்திலும், தேர்தல் சமயத்திலும் இப்படி நடந்துள்ளது. கட்சித் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரின் ஒப்புதலைப் பெறாமலேயே சில காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த முடிவின் ஆழமும் தோற்றமும் தெரியாமலேயே அவற்றை ஆதரித்துப் பேசும் நிலை கட்சிக்கு ஏற்பட்டது.

பத்தாண்டுகள் ஒரு கூட்டணி தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு அதன்மீது சலிப்பு ஏற்படும் என்பதைத் தெரிந்துகொண்டு, 2013-வது ஆண்டின் நடுப் பகுதியிலிருந்தே நல்ல தோழமைக் கட்சிகளை அடையாளம் காணும் பணியைத் தொடங்கியிருக்க வேண்டும். மாநிலங்களின் நியாயமான கோரிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை அடையாளம் கண்டு கூட்டணியில் சேர்த்திருக்க வேண்டும்.

மாநிலங்களில் வலுவான காங்கிரஸ் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் வளரவும் தங்களுடைய செல்வாக்கை நிலைநிறுத்தவும் அனுமதிக்க வேண்டும். மோகன்லால் சுகாடியா, சவாண், பிரதாப் சிங் கெய்ரோன் போன்ற அப்போதைய தலைவர்களும் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, தருண் கோகோய் போன்றவர்களும் இதற்கு நல்ல உதாரணங்கள். வலுவான கரங்களும் கால்களும் உடலைப் பலவீனப்படுத்திவிடாது. மாநில அளவில் தலைவர்கள் வளர்வதால் தங்களுடைய செல்வாக்கு போய்விடுமோ என்று அஞ்சிய சில மத்தியத் தலைவர்கள், அவர்களைப் பற்றி மேலிடத்தில் பற்றவைத்து யாரையும் வளரவிடாமல் தடுத்துவிட்டனர்.

‘நம்மைவிட்டால் யாருமில்லை' என்ற இறுமாப்பு கூடவே கூடாது. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் ‘தகுந்த மாற்று' உண்டு. அந்த மாற்றத்தை எப்படித் தேர்வுசெய்கிறீர்கள், எப்படி ஆதரிக்கிறீர்கள், எப்படி வளர்த்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. காங்கிரஸ் கட்சி இதைப் போன்ற நெருக்கடியான பல தருணங்களைச் சந்தித்திருக்கிறது. அதிலிருந்து முன்பைவிட வலுவாகவும் திடமாகவும் வளர்ந்திருக்கிறது. எனக்குச் சந்தேகமே இல்லை - ஆம், நம்மால் முடியும்!

- அபிஷேக் மனு சிங்வி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகைத் தொடர்பாளர். தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x