Last Updated : 26 Jun, 2015 10:14 AM

 

Published : 26 Jun 2015 10:14 AM
Last Updated : 26 Jun 2015 10:14 AM

நெருக்கடி நிலை இருண்ட காலத்தில்... நாடு சிறையானபோது சிறை என்னவானது?

கடந்த 1975 ஜூன் 25 நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை 1976 ஜனவரி 31 வரை தமிழ்நாட்டில் பெரிதாக உணரப்படவில்லை என்பதே உண்மை. தமிழ்நாடும் குஜராத்தும் நெருக்கடி நிலையின் தாக்கம் இல்லாத இரு தீவுகளாக விளங்கின - பிரதமர் இந்திரா காந்தி இப்படித்தான் வருந்திச் சொன்னார்.

கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகுதான் நெருக்கடி நிலை தமிழ்நாட்டைச் சுட்டது. நாட்டைச் சிறைக் கூடமாக்கிய நெருக்கடி நிலை தமிழகச் சிறைகளில் ஏற்படுத்திய தாக்கம் இரு விதமானது. அரசியல் விழிப்புப் பெற்ற சிறைபட்டோர் நெருக்கடி நிலையின் ஜனநாயக மறுப்புத் தன்மை குறித்துக் கவலையுற்றபோதே, சாதாரண சிறைக் கைதிகள் முதலில் அக்கறையற்று இருந்தனர், திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது அதை வரவேற்றனர். இது பெரும்பாலும் வெளியுலக எதிர்வினையின் பிரதிபலிப்பு என்றே சொல்லலாம்.

பொய் வழக்குக்குத் துணைபோன மிசா

அப்போது நானும் என் தோழர்களும் திருச்சி மத்தியச் சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்தோம். எங்களைத் தவிர ‘நக்சல்’ வழக்குகளில் சிறைபட்ட தோழர்கள் தமிழகச் சிறைகளில் எல்லாம் சேர்த்து ஒரு நூறு பேர் இருக்கக்கூடும். அந்நேரம் வழக்குகளில் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட நக்சல்கள் உடனே மீண்டும் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறைவைக்கப்பட்டார்கள். சிறைத் தண்டனை முடிந்து விடுதலையானவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார்கள். வழக்கமாக இந்த மீள்கைதுக்குப் பொய் வழக்குகளைப் பயன்படுத்திவந்த காவல்துறைக்கு இப்போது மிசா சட்டம் வசதியாகிவிட்டது.

நெருக்கடி நிலைக் காலத்தின் கொடுஞ்சட்டமாகிய மிசாவைத் தமிழ்நாட்டில் முதன்முதலாகப் பயன்படுத்தியது திமுக ஆட்சிதான் என்பதொரு முரண்நகை. அதிமுகவைச் சேர்ந்த ஜேப்பியாரை மிசாவில் கைது செய்து இந்திரா அரசுக்குக் கணக்குக் காட்டியது திமுக ஆட்சி. இது தவிர, பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்களுக்கு எதிராக இந்தியப் பாதுகாப்பு விதிகள் (DIR) ஏவப்பட்டன (ஒரு நினைவுக்காக, இதே சட்டத்தின் படிதான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் கருணாநிதி பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்). பெருஞ்சித்திரனாரோடு திமுகவைச் சேர்ந்த முரசொலி அடியாரும் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்டார். இவர்கள் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற முழக்கத்தோடு தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. அது பெரியார் கொள்கையே தவிர, அண்ணா கொள்கையன்று என்பது கருணாநிதியின் விளக்கம்.

இந்த முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், நெருக்கடிநிலைப் பெருவெள்ளம் தமிழகத்துள் நுழைய விடாமல் திமுக ஆட்சி அணைபோட்டு நின்றதை ஏற்கத்தான் வேண்டும். திமுக ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாளே சிறைக் கதவுகள் அரசியல் கைதிகளுக்கு அகலத் திறந்தன. இவர்களில் பெரும்பாலானோர் திமுகவினர். பழைய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இவர்களில் பலர் மிசா சட்டத்தின்படி தடுப்புக் காவல் சிறையில் வைக்கப்பட்டனர். திருச்சி சிறையில் நூறு பேர் வரை இருந்திருக்கலாம். ஒவ்வொரு மத்தியச் சிறையிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் மிசா கைதிகள் இருந்தனர்.

வழக்கமான விசாரணைக் கைதிகளோடும் தண்டனைக் கைதிகளோடும் ஒப்பிடுங்கால் தடுப்புக் காவல் கைதிகள் என்ற முறையில் மிசா கைதிகளுக்குச் சிறப்பான வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டன. நல்ல உணவு, நாள்தோறும் புலால் அல்லது நெய், புகை பிடிக்க உதவித்தொகை, புகை பிடிக்காதோர்க்கு விவா அல்லது ஹார்லிக்ஸ். ஒவ்வொரு கொட்டடியிலும் மின்விசிறி. நாற்காலி, மேசை, வாரந்தோறும் திரைப்படம். இல்லத்தார், உறவினர்களுடன் வசதியான நேர்காணல். குடும்பத்தினருக்கு மாதாந்திர உதவித்தொகை. குற்றச்சாட்டோ வழக்கு விசாரணையோ இல்லாத தடுப்புக் காவல் சிறை என்பதால் இத்தனை வசதிகள், சலுகைகள்!

திருச்சிராப்பள்ளிச் சிறையைப் பொறுத்தவரை அப்போதிருந்த கண்காணிப்பாளர் 1965-ல் மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஓராண்டு காலத்துக்கு மேல் கடலூர் சிறையில் தடுப்புக் காவலில் இருந்தபோது அங்கு பொறுப்பில் இருந்தவர். அதிலும் அனந்த நம்பியார் மிசாவில் திருச்சி சிறைக்கு வந்த பின் மிசா கைதிகளுக்கான மதிப்பு உயர்ந்துவிட்டது.

மிசா கைதிகள் சார்பில் அதிகாரிகளுடன் பேசுவதற்கும் மற்ற தேவைகளுக்கும் தாழை மு.கருணாநிதி ‘மேயர்’பொறுப்பு வகித்தார். பொதுவாகச் சொன்னால் மார்க்சிஸ்ட், நக்சலைட், ஆர்எஸ்எஸ் மிசா கைதிகள் சிறை வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர். திமுகவில் துறவி இளங்கோ ஒரு கையெழுத்து ஏட்டினைத் தொடங்கி மிசா கைதிகளிடையே சுற்றுக்கு விட்டார். மா. மீனாட்சிசுந்தரம் போன்றவர்கள் கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பொழுதைக் கழித்தனர்.

எப்போது சிறை வாழ்க்கை முடிந்து விடுதலை கிடைக்கும் என்ற அளவோடு பெரும்பாலான மிசா கைதிகளின் அரசியல் அக்கறை சுருங்கிவிட்டது. சிலர் எழுதிக்கொடுத்து விடுதலை வாங்க அணியமாக இருந்தனர். சிலர் வாங்கியும்விட்டனர். எப்போது நெருக்கடி நிலை முடிவுக்கு வரும் என்று மார்க்சிஸ்ட் தலைவர்களிடம் திமுகவினர் கேட்பதுண்டு. விரைவில் என்பது அனந்த நம்பியாரின் நம்பிக்கை. இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பது பாரதிமோகனின் கணிப்பு. நம்பியாரைச் சுற்றித்தான் எப்போதும் கூட்டம்!

வலையில் விழ மறுத்த மீன்கள்

திமுகவிலிருந்து விலகுவதாக எழுதிக்கொடுத்தால் விடுதலை என்று தன் சிறைத் தொடர்புகளைப் பயன்படுத்தி மிசா கைதிகளுக்குத் தூது விட்டுக்கொண்டிருந்தவர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எம். கல்யாணசுந்தரம். அவரது பாசிச எதிர்ப்பு அக்கறையின் வெளிப்பாடோ என்னவோ! அவரது வலையில் விழ மறுத்த மீன்களும் உண்டு.

சென்னை மத்தியச் சிறை தவிர, வேறு எந்தச் சிறையிலும் அவர்கள் மோசமாக நடத்தப்படவோ கொடுமைப்படுத்தப்படவோ இல்லை. இந்திய அளவிலேயே நெருக்கடி நிலைக் கால சிறைக் கொடுமைகளில் படுமோசமானவை என்றால், சென்னை சிறைக் கொடுமைகளைத்தான் சொல்ல வேண்டும். சிட்டிபாபுவுக்கு விழுந்த மரண அடி, ஸ்டாலின் மீது நிகழ்ந்த கோரத் தாக்கு, ஆற்காடு வீராசாமி, நீலநாராயணன் போன்றவர்களுக்கு நிகழ்ந்த கொடுவதை... சொல்லொண்ணாக் கொடுமைகள்! சிறைக்குள் அரிபட், சிவாஜி, சிட்டிபாபு, முரசொலி மாறன் போன்ற மிசா கைதிகளின் போராட்டத் துணிவும், வெளியே திமுக தலைவர் கருணாநிதியின் அழுத்தமான நகர்வுகளும், அப்போதைய உள்துறைச் செயலர் சுப்ரமணியத்தின் நேர்மையான தலையீடும்தான் சிறைக் கொடுமைகளை இந்த அளவோடு நிறுத்தின!

கொடுமைகளுக்கான சான்று

இஸ்மாயில் ஆணையத்தின் விசாரணை அறிக்கை இந்தக் கொடுமைகளுக்கு அழுத்தந்திருத்தமான ஆவணச் சான்று. சிட்டிபாபுவின் டைரி, கயிலைமன்னன் எழுதிய ஒன்பதாம் பிளாக் போன்ற நூல்கள், நான் எழுதிய கம்பிக்குள் வெளிச்சங் களின் இறுதிப் பகுதி.. இந்தக் கொடுமைகளைப் பற்றி கருப்பும் வெள்ளையுமாக எத்தனையோ பதிவுகள்! ஆனால், இந்தக் கொடுமைகளுக்காக அதிமுக ஆட்சியும் திமுக ஆட்சியும்கூட யாரையும் தண்டிக்க முற்படவில்லை என்பது மனித உரிமைகளுக்கும் சிறைப்பட்டோரின் பாதுகாப்புக்கும் மனித கண்ணியத்துக்கும் அழியாக் கறையாகவே தங்கிவிட்டது.

பொதுவாகச் சொன்னால், சென்னை சிறைக் கொடுமைகளின்போது துன்புற்ற மிசா கைதிகளின் பால் சாதாரணக் கைதிகள் பரிவு காட்டவில்லை என்பது மட்டுமன்று, சிலர் தண்டனைக் காவலர்கள் என்ற முறையில் மிசா கைதிகள் மீதான தாக்குதலில் ஈடுபடவும் செய்தார்கள் என்பது வருத்தத்துக்குரிய உண்மை. திமுக ஆட்சிக் கால சிறைத் துறை மீதான வெறுப்பை அவர்கள் இப்படி வெளிப்படுத்தினார்கள்! இதுகுறித்து சிட்டிபாபுவே தனது டைரிக் குறிப்பில் வருந்தி எழுதியுள்ளார்.

பரபரப்பான மிசா கூடம்

திருச்சி சிறையில் உள்ளே இருந்த மார்க்சிஸ்ட்டுகளுக்கும் வெளிக் கட்சிக்கும் இடையே தொடர்பாளர்களாக நானும் தோழர் லெனினும் செயல்பட்டுவந்தோம். இவ்வகையில் மிசா கைதிகள் அனைவருமே கமுக்கமான வெளித் தொடர்புகளுக்கு எங்களைத்தான் நம்பியிருந்தார்கள். திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கு எதிராக மக்களவையில் ஏ.கே. கோபாலன் ஆற்றிய உரை அப்போதைய பத்திரிகைத் தணிக்கை காரணமாக ஏடேறாத நிலையில், நாங்கள் ரகசியமாக அதை உள்ளே வரவழைத்துச் சுற்றுக்கு விட்டபோது மிசா கூடமே பரபரப்பாயிற்று.

சென்னை சிறைக் கொடுமைகள்பற்றிய செய்தி உடனே எங்களுக்குக் கிடைத்து நாங்கள் மிசா கைதிகளுக்கு அதை அறியத் தந்தபோது திமுக முக்கியத் தலைவர்கள் அதை நம்ப மறுத்தனர். நேர்காணலில் அவர்களின் குடும்பத்தினரே வந்து உறுதி செய்த பிறகுதான் ஏற்றுக்கொண்டனர். சென்னைக் கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏதாவது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட், ஆர்எஸ்எஸ் கைதிகள் வலியுறுத்திய போதும் திமுக தலைவர்கள் பெரிதும் தயங்கினர். நெருக்கடி நிலையின் அச்சுறுத்தல் உச்சத்தில் இருந்த நேரமல்லவா?

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நெருக்கடி நிலை இடைநிறுத்தம் செய்யப்பட்டு மிசா கைதிகள் அணியணியாக விடுதலை பெற்றுச் சென்றார்கள். ஓராண்டுக்கு மேற்பட்ட சிறைப் பட்டறிவோடு வெளியேறிய அவர்கள் அந்த நாட்களை - நாட்டை இருட்சிறையாக்கிச் சிறைக்குள் அறிவு வெளிச்சம் தந்த அந்த நாட்களை - மறக்க மாட்டார்கள் என்றுதான் நினைத்தோம். நினைத்தபடி பெரும்பாலும் நடக்கவில்லையே! விடுதலையானபோது அவர்களுக்குத் திறந்தது மர வாயில்! அவர்களைப் பொறுத்த வரை ‘மற’ வாயில்!

நினைவு உரிமை காக்கும்! மறதி அடிமை காக்கும்!

-தியாகு,தலைமைக் குழு உறுப்பினர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், ஆசிரியர், தமிழ்த் தேசம்.

தொடர்புக்கு: thozharthiagu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x