Published : 11 Jun 2015 10:23 AM
Last Updated : 11 Jun 2015 10:23 AM

ஒரு நதியின் வாக்குமூலம்: கேரளம் சென்று திரும்பும் பவானி!

பவானி ஆறு தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியானாலும் தனது ஓட்டத்தின் கொஞ்சத் தொலைவிலேயே கேரளத்துக்குள் புகுந்துவிடுகிறது. தமிழகம், கேரளம் என்ற எல்லை எல்லாம் ஆற்றுக்குக் கிடையாது. அது, தன்போக்கில் இயல்பாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

மாநிலங்களின் எல்லையைப் பிரித்த போது, பாம்புபோல் வளைந்து செல்லும் பவானி ஆற்றின் மீது எல்லைக்கோட்டை நேராக இழுத்துவிட்டனர். இதனால், ஆறு அந்தப் பக்கம் கொஞ்சம் தள்ளிப் போய்விட்டது என்பதுதான் உண்மை. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே இரு மாநிலங்களுக்கு இடையே நீடிக்கிறது ஒரு பிரச்சினை. அதை, பிறகு பார்க்கலாம்.

மேல் பவானி அணையிலிருந்து வெளி யேறும் பவானி ஆறு, தென்மேற்கில் அமைதிப் பள்ளத்தாக்கை ஒட்டிப் பாய்ந்து அட்டப்பாடி பள்ளத்தாக்கில் உள்ள முக்காலி என்ற இடத்தில் சேக ரமாகிறது. கேரள மாநிலம் அது. அங்கிருந்து 120 டிகிரி கோணத்தில் வட கிழக்காக அரை வட்டமடிக்கும் பவானி, அட்டப்பாடி வனத்தில் சுமார் 22 கி.மீ. வரை பயணித்து அத்திக்கடவு என்ற வனப் பகுதியில் மீண்டும் தமிழகத்துக் குள் பாய்கிறாள். அதற்காக நாம் பவானிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இருவாச்சிகளுக்கு மறுவாழ்வு

கோவையிலிருந்து மஞ்சூர் செல்லும் வழியில் இருக்கிறது அத்திக்கடவு வனம். அத்திக்கடவு பவானி ஆற்றின் வனப் பகுதிக்கென்று ஒரு சிறப்பு இருக் கிறது. நம் நாட்டில் கிரேட் இந்தியன் இருவாச்சி, மலபார் இருவாச்சி, மலபார் கிரே இருவாச்சி, சாம்பல் இருவாச்சி என நான்கு வகை இருவாச்சிப் பறவைகள் (Hornbills) இருக்கின்றன. மஞ்சள், வெள்ளை, கருப்பு வண்ணங்களில் நீண்ட அலகுகள் மற்றும் இறகுகளுடன் பார்க்க ஓரளவு பெரிய உருவம் கொண் டவை இந்தப் பறவைகள். இதன் இறகுகளுக்கு சர்வதேச கடத்தல் சந்தையில் பெரும் மதிப்பு உண்டு. இந்தியாவில் இவை பெரும்பாலும் வேட்டையாடப்பட்டுவிட்டன. அதனால், அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தப் பறவைகள், அழியும் ஆபத்திலுள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு வகை இருவாச்சிகளும் வசிக்கும் அரிதான ஒரு பகுதி அத்திக் கடவு. குறிப்பாக, கிரேட் இந்தியன் இருவாச்சி மற்றும் மலபார் இருவாச்சி ஆகிய இரு வகை பறவைகளை யும் இங்கே எப்போதும் பார்க்க முடியும். காரணம், பவானி. ஆற்றங் கரைக்கே உரிய மரங்களான நீர் மத்தி, ஆல் அத்தி, வேலம், நாவல், புங்கன், கருப்பாலை, இலுப்பை ஆகிய மரங்கள் இங்கே நிறைந்திருக்கின்றன.

ஒரு காலத்தில் கேரளத்தின் முக்காலி தொடங்கி பவானி சாகர் (கீழ் பவானி அணை) அணை வரை பவானி ஆற்றின் இருபுறமும் இந்த மரங்கள் ஏராளமாக இருந்தன. காலப்போக்கில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இங்கு மட்டுமே கொஞ்சம் மரங்கள் எஞ்சியிருக்கின்றன. இரு வாச்சிப் பறவைகளின் உணவு மற்றும் இரை ஆதாரங்கள் அந்த மரங்கள்தான். அந்த மரங்களின் பழங்களை சாப்பிட்டு, விதைப்பரவல் செய்வதன் மூலம் பவானி ஆற்றுக்கும் வனத்துக்கும் நன்றிக் கடன் செலுத்துகின்றன இரு வாச்சிப் பறவைகள்.

பவானி ஆறு அத்திக்கடவிலிருந்து பில்லூர் அணைக்குச் சென்று, கிழக்கு திசையில் சமவெளியை நோக்கிப் பாய் கிறது. சரி, பவானியின் வளத்துக்கு என்ன காரணம்? அதன் துணை ஆறுகள் தான். பெயர் வைக்கப்படாத 12 சிற் றோடைகள் மற்றும் குந்தா, பைக்காரா, கல்லாறு, மோயாறு, சிறுவாணி, கொடுங்கரைப்பள்ளம் ஆகிய துணை ஆறுகளால் உருவானது பவானி. இவற் றில் மிக முக்கியமானவை மோயாறு மற்றும் சிறுவாணி.

தித்திக்கும் சிறுவாணி

சிறுவாணி ஆறு கோவையின் மேற்கு பகுதியிலுள்ள, மேற்குத் தொடர்ச்சி மலையின் முத்திக்குளம் அருவிக்கு சற்று மேலே உற்பத்தியாகிறது. அது கேரளத்துக்குச் சொந்தமான பகுதி. அங்கிருந்து கீழ் நோக்கிப் பாயும்போது சிறுவாணியுடன் பாம்பாறு, பட்டியாறு, சோலையாறு, யானையாறு மற்றும் சில சிற்றோடைகள் இணைந்து கொள் கின்றன. இந்த ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து, கோட்டத்துறை அருகே கூலிக்கடவு என்ற இடத்தில் பவானி யுடன் சங்கமிக்கிறது.

முதன்முதலில் கோவையின் குடிநீர் பஞ்சத்தை தீர்த்தது சிறுவாணி தண் ணீர்தான். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் சி.ஆர். இளங்கோவன் ‘தி இந்து’-விடம் கூறும்போது, “1889-ம் ஆண்டில் கோவையைச் சேர்ந்த பத்திரி கையாளர் எஸ்.பி. நரசிம்மலு நாயுடு என்பவர்தான் முதன்முதலில் முத்திக் குளம் அருவித் தண்ணீரை கோவைக்கு கொண்டு வரலாம் என்று மலை உச்சிக்குச் சென்று ஆய்வு நடத்தினார். இதற்காக, 1892-ல் அரசு பொறியாளரையும் நியமித்தது. அவர் களும்கூட திட்டம் சாத்தியம் இல்லை என்று கைவிரித்துவிட்டனர். 1921-ம் ஆண்டு கோவை நகராட்சிக்கு சி.எஸ்.ரத்தினசபாபதி தலைவரான பிறகு, இதற்கான பணிகள் முடுக்கிவிடப் பட்டன. ஒருவழியாக முத்திக்குளம் அருகே சிறுவாணி அணையைக் கட்டி 1929, ஏப்ரல் 29-ம் தேதி சிறுவாணி தண்ணீர் கோவைக்கு கொண்டு வரப்பட்டது” என்றார்.

கோவைக்கு எவ்வளவு குடிநீர்?

சிறுவாணி அணையிலிருந்து கோவை மாநகராட்சியின் 32 வார்டுகள், மாநக ராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட கோவைப்புதூர், வடவள்ளி, குனிய முத்தூர், கவுண்டம்பாளையும், குறிச்சி, வீரகேரளம் மற்றும் புறநகர்ப் பகுதி களான போளுவாம்பட்டி, பூளுவப்பட்டி, சாடிவயல், மாதம்பட்டி, பேரூர், காருண்யா நகர், ஆலாந்துறை, செம் மேடு, காளம்பாளையம் ஆகிய பகுதிக ளுக்கு நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் வீதம் சிறுவாணி தண்ணீர் குடிநீராக விநியோகிக்கப்படுகிறது.

(பாய்வாள் பவானி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x