Published : 09 Jun 2015 09:58 AM
Last Updated : 09 Jun 2015 09:58 AM

ஒரு நதியின் வாக்குமூலம்: துடிக்கிறாள் படியளக்கும் பவானி!

கங்கையோ காவிரியோ பவானியோ- ஓர் ஆறு என்றால் அதன் முழுப்பதம், ஆறு மட்டுமல்ல; அந்த ஆற்றில் வசிக்கும் உயிரினங்கள், ஆற்றை ஆதாரமாகக் கொண்டுள்ள வனங்கள், வன உயிரினங்கள், ஆற்றங்கரையோர மனிதச் சமூகங்கள் எல்லாம் சேர்ந்தவையே. ஓர் ஆறு பல்லுயிர் வளமையாக இருந்தால் மட்டுமே இவை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

நீர் மின் திட்டங்களுக்காக ஆற்றில் பெரும் அணைகளைக் கட்டுவது, ஆற்றின் போக்கை திசை மாற்றுவது, தொழிற்சாலை ரசாயன, சாயக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகளை ஆற்றில் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், இன்று இந்தியாவில் பல ஆறுகள் இறந்துவிட்டன. உயிருள்ள ஆறுகள் (Perennial River) அருகிவிட்டன. பல இறந்து கொண்டிருக்கின்றன. ஆற்றங்கரையில் தோன்றிய மனித நாகரிகங்களான சிந்து சமவெளியின் ஹரப்பா, பண்டைய மொசபடோமிய சுமேரியர்கள், அமெரிக்காவின் மாயா, அனாசாஜி, வடஅமெரிக்காவின் ஹோகோகம் ஆகியவை ஆற்றின் அழிவையொட்டியே அழிந்தன என்பது வரலாறு. தமிழகத்தில் பவானியும் தாமிரபரணியும் மட்டுமே உயிருள்ள நதிகள் என்று பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், அது பழம் பெருமை. உண்மையில், அவற்றின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அவை, மூச்சுத் திணறி செத்துக் கொண்டிருக்கின்றன. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இரு ஆறுகளும் கூவத்தைப்போல, நொய்யலைப்போல இறந்து போகும். ஓர் ஆற்றின் அழிவு என்பது அதன் அழிவு மட்டுமல்ல; நமது அழிவும்தான்.

பவானி எப்படி இருக்கிறது? பவானியைக் காக்க என்ன செய்யலாம்? பிரச்சினைகள் என்ன? தீர்வுகள் என்ன? என்று அறிவதற்காக மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில், பவானியின் நதிமூலம் தொடங்கி சமவெளியில் அது காவிரியில் கலக்கும் கூடுதுறை வரை நதியின் ஊடாக, நதிக்கரை வனங்கள் ஊடாக, நதிக்கரை மனித நாகரிக சமூகங்கள் ஊடாக ஊர்ந்திடும் குறும் பயணத் தொடர் இது. ஒரு நதியின் வாக்குமூலம்...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,700 மீட்டர் உயரம். நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சரிவின் மீது ஏறிக் கொண்டிருக்கிறோம். ஊட்டி யிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலை வில் இருக்கும் அவலாஞ்சி வனம் அது.

கோடையிலும் பனி போர்த்தியிருக் கிறது வனம். நடுங்க வைக்கிறது குளிர். ஆங்காங்கே அடர்த்தியான சோலைக் காடுகள். இடையே ஆளுயர புல்வெளிக் காடுகள். உச்சியைப் பார்க்க முடியாத அளவுக்கு சுமார் 200 அடி உயரத்துக்கு ஓங்கி வளர்ந்திருக்கின்றன மரங்கள். லேசாக ஊடுருவும் சூரியனின் கதிர்கள் பட்டு அரிய வகைக் காளான்கள் நீலம், சிவப்பு என பல வண்ணங்களில் ஒளிர்கின்றன. நடக்கும்போது கால்களில் ஏறி சத்தமில்லாமல் ரத்தம் குடிக்கின்றன அட்டைகள். சத்தம் கேட்டு மிரண்டு ஓடுகின்றன கடமான்கள். தரைப் பொந்துகளிலிருந்து தலையை நீட்டி, உள்ளிழுத்துக் கொள்கின்றன காட்டுப் பன்றிகள்.

தூரத்து மலைச்சரிவில் செந்நாய் கூட்டம். தமிழகத்தில் அருகிவிட்ட நரிகளை இங்கே காணமுடிவது ஆச்சர் யமே. மிக அரிய உயிரினமான மர நாய் குடும்பத்தைச் சேர்ந்த இலிங்கன் (Nilgiri Marten) இங்கே வசிக்கின்றன. தவிர, யானைகள், புலிகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வசிக்கும் ஓரிட வாழ்விகளுக்கான புகலிடமாக இருக்கிறது அவலாஞ்சி வனம்.

தண்ணீர் பிரதேசம்!

மலைச் சரிவுகளில், பாறை இடுக்குகளில் தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் சிறு அருவிகள், சிற்றோடை கள் சலசலக்கின்றன. நடக்கும்போது பதியும் பாதக் குழியில் ஊற்றெடுக்கிறது தண்ணீர். பூமிக்குள் ஓடும் நீரோட்டம் அது. தண்ணீர் சூழ்ந்த பிரதேசத்தில் இருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. உலகின் மிகத் தூய்மையான, தரமான, சுவையான தண்ணீர் அது. கிட்டத்தட்ட பவானியின் நதிமூலத்தை அடைந்துவிட்டோம்.

இதேபோன்ற பல்லுயிர் வளமை நிறைந்த புவி அமைப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி- முக்குருத்தி தொடங்கி அமைதிப் பள்ளத் தாக்கின் எல்லை வரை பவானியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகள் நீள்கின்றன. இந்தியாவில் மிகவும் அதிகமாக மழை பெய்யும் பகுதிகளில் இதுவும் ஒன்று. யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமான நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலமும் இங்கேதான் இருக்கிறது.

இங்கே பல இடங்களில் மனிதன் புக முடியாத- மலை உச்சியின் அடர் வனங்களில் பயணிக்கும் பவானி, ஊட்டி யிலிருந்து அவலாஞ்சிக்கு செல்லும் மலைப் பாதையில் ஓரிடத்தில் பாறை களுக்கு இடையே துள்ளி வெளியே வருகிறாள். அங்கே ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. பவானியம்மன் கோயில். யார் கட்டியது? எப்போது கட்டப் பட்டது? என்பதற்கான தரவுகள் இல்லை. அவலாஞ்சி அல்லது மேல் பவானி அணையை கட்டியபோது பொறியாளர் ஒருவர் கோயிலைக் கட்டினார் என்கிறார்கள். அந்த வழியாகச் செல்பவர்கள் கோயிலில் வழியும் தண்ணீரை தொட்டுக் கும்பிட்டு அதையே தீர்த்தமாக குடிக்கிறார்கள், தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சுமார் அரை கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் பவானியின் மீது அவ்வளவு பக்தி மக்களுக்கு!

எப்படி உருவாகிறாள் பவானி?

உலகில் இருவகை மழைக் காடுகள் இருக்கின்றன. ஒன்று, வெப்ப மண்டல மழைக் காடுகள் (Temperate Rain Forest). மற்றொன்று, மித வெப்ப மண்டல மழைக் காடுகள் (Tropical Rain Forest). நிலநடுக்கோட்டுக்கு வடக்கே 23.50 கடக ரேகை வரை தெற்கே 23.50 மகர ரேகை வரை அமைந்துள்ள பகுதியே மித வெப்ப மண்டலம். நமது மேற்குத் தொடர்ச்சி மலைகள் அந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளன.

வட இந்தியாவில் பாயும் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா எல்லாம் இமயமலையின் பனி உருகுவதால் உற்பத்தியாகின்றன. ஆனால், பவானி மட்டுமின்றி தென்னிந்தியாவின் அத்தனை நதிகளுக்கும் ஆதாரம் மித வெப்ப மண்டல மழைக் காடுகளில் இருக்கும் சோலைக் காடுகளும் புல்வெளிக் காடுகளும்தான். சொல்லப் போனால் தென்னிந்தியாவின் மொத்த உயிர் ஆதாரங்களும் இந்தக் காடுகளில்தான் அடங்கியிருக்கின்றன.



அவலாஞ்சி வனத்தில் நரி, காட்டுப் பன்றி மற்றும் கடமான்கள். | படம்: சுதா|

சோலைக் காடுகளும் புல்வெளிக் காடு களும் ஒன்றுக்கொன்று நெருக்க மான தொடர்புடையவை. பொதுவாக, சமவெளிப் பகுதிகளைவிட மலை உச்சிகளில் மழைப் பொழிவு பல மடங்கு அதிகம். திடீர் திடீரென்று காட்டு வெள்ளம் பெருக்கெடுக்கும். அதன் வேகம் நம் கற்பனைக்கு எட்டாதது. அந்த நேரங்களில் எல்லாம் மலை உச்சிகளிலிருந்து கட்டற்றுப் பாயும் வெள்ளத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி, சமவெளியைக் காக்கும் இயற்கை அரண்களாக விளங்குகின்றன புல்வெளிக் காடுகள்.

சோலைக் காடுகளின் தாவரங்கள், மரங்களின் வேர்ப்பகுதிகளில் உள்ள பிரத்தியேகமான கடற்பஞ்சு போன்ற அமைப்பு, நீரை உறிஞ்சி, தங்க ளுக்குள் தேக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கசிய விடு கின்றன. இயற்கையான சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு முறை இது. இவையே மலைச் சரிவுகளிலும் பாறை இடுக்குகளிலும் கசிகின்றன. ஆயிரக் கணக்கான நீர்க் கசிவுகள் ஒன்று சேர்ந்து நூற்றுக்கணக்கான சிற்றோடை களாகவும் அருவிகளாகவும் உருவெடுக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து உருவாகிறது ஆறு. இப்படிதான் பவானியும் உருவாகிறாள்.

(பாய்வாள் பவானி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x