Last Updated : 29 Jun, 2015 09:48 AM

 

Published : 29 Jun 2015 09:48 AM
Last Updated : 29 Jun 2015 09:48 AM

நெருக்கடி நிலை - சாட்சியம்: இன்னொரு சுதந்திரப் போராட்டம்

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர். 1975 ஜூலை 4 அன்று குழித்துறை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் ஷாகா நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட 21 அமைப்புகள் தடை செய்யப்பட்டதாக வந்த வானொலி செய்தியைப் பக்கத்து வீட்டு நண்பர் பதற்றத்துடன் சொன்னர். உடனே, நாகர்கோவில் புறப்பட்டேன். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் ஆறு பேரைக் கைதுசெய்திருந்த காவல் துறை, ஏழாவதாக என்னைக் கைதுசெய்ய குழித்துறை சென்றிருந்தது. அதன் பிறகும் எப்படி நான் வீரபாகுவாகவே இருக்க முடியும்? ஆக, பாண்டியன் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 10 மாதங்கள் நெருக்கடி நிலையை எதிர்த்துத் தலைமறைவு இயக்கத்தை நடத்தினேன். பின்னர், வேலூரில் கைதுசெய்யப்பட்டு 11 மாதங்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டேன்.

நெருக்கடி நிலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பெரும் விலை கொடுத்தது. அமைப்பின் தலைவர் பாளாசாகேப் தேவரஸ் கைதுசெய்யப்பட்டு, எரவாடா சிறையில் அடைக்கப் பட்டார். நாடெங்கும் 25,000-க்கும் அதிகமான ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டன. இப்படி எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் கைதுசெய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கானோர் எந்த சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள் என்பது யாருக்குமே தெரியாது. கைதானவர்கள் மீது காவல் துறை நடத்திய கொடுமைகளைச் சொன்னால் குலை நடுங்கும். தலையைப் பிடித்து அழுத்தி, குனியச் செய்து முதுகில் முழங்கையால் குத்துவது, தோள்பட்டைகளைப் பின்புறமாக இழுத்து, நடுமுதுகில் முழங்காலால் இடிப்பது, தரையில் கால் நீட்டி உட்காரச் செய்து நாற்காலியோடு கட்டிப்போட்டுவிட்டு உள்ளங்கால்களில் பிரம்பால் விளாசுவது, நாற்காலியில் அமர்வது போன்ற நிலையில் மணிக் கணக்காக வளைந்து நிற்கச் செய்வது, சக்கையாக அடித்து நொறுக்கித் தள்ளாடச் செய்த பிறகு, அடிபட்டவரின் சிறுநீரையே குடிக்கச் செய்வது - இதெல்லாம் நாடு முழுவதும் மிசா கைதிகளைக் கையாள அன்றைய காவல் துறை கற்றுவைத்திருந்த சில கலைகள்.

வளர்ந்த மன உறுதி

அரசின் அராஜகங்களை எதிர்ப்பவர்களின் மன உறுதியைக் குலைக்கவே இந்தக் கொடூரங்களைக் காவல் துறையினர் கையாண்டனர் என்றாலும், உண்மையில் அவை மன உறுதியை மேலும் வலுவாக்கவே செய்தன. நாடு முழுவதும் நடைபெறும் அராஜகங்கள், அவற்றை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள்பற்றிய செய்திகள், ரகசியப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு, பத்திரிகைகளெல்லாம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், உண்மையான நிலவரத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் இந்த ரகசியப் பிரசுரங்கள் பெரும் பங்காற்றின.

தமிழில் ‘போராட்டம்’ எனவும், ஆங்கிலத்தில் ‘ஸ்ட்ரகிள்’ என்றும் இரண்டு ரகசியப் பிரசுரங்கள் தொடர்ந்து விநியோகிக் கப்பட்டன. இவற்றை அச்சிடுவதும் சரி, விநியோகிப்பதும் சரி மிகுந்த சவாலாக இருந்தது. விஷயம் வெளியானால் சிறைவாசமும் சொத்துக்கள் முடக்கமும் உறுதி. ஆனாலும் பல இடங்களில் துணிச்சலுடன் இப்பணியில் பலர் ஈடுபட்டனர். அச்சகத்தின் முகப்பில் இந்திரா காந்தியின் பிரம்மாண்டமான படத்தை வைத்துவிட்டு, ரகசிய பிரசுரங்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அச்சிட்டனர். 21 மாதங்களில் சுமார் 10 லட்சம் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடுவதற்காக எதிர்க் கட்சிகள் இணைந்து ‘லோக சங்கர்ஷ சமிதி’ (மக்கள் போராட்டக் குழு) அமைக்கப்பட்டது. இதன் தலைவராக மொரார்ஜி தேசாயும், செயலாளராக ஜனசங்கத்தின் தலைவர் நானாஜி தேஷ்முக்கும் செயல்பட்டனர். நானாஜி தேஷ்முக் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் பெருமுயற்சியால் லோக சங்கரஷ சமிதி மூலம் நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டம் 1976 நவம்பர் 14-ம் தேதி தொடங்கியது. கைதானால் ஜாமீன் இல்லை; எப்போது விடுதலை என்று தெரியாது என்ற நிலையிலும், நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் கைதானார்கள். அதில் 30,000 பேர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 52 ஊர்களில் 124 குழுக்களாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். 1,008 பேர் கைதானார்கள். நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கிடைத்த சிறைச்சாலை வாய்ப்பைப் பயிற்சி முகாம்களாக மாற்றிக்கொண்டனர். சிறைகளில் தினசரி யோகாசனம், உடற்பயிற்சிகள், கீதை வகுப்பு என எல்லாம் அரசு செலவிலேயே நடந்தன.

வைகோவின் சோகம்

கொடுமைகளுக்கு நடுவிலும் சிறைகளில் பல சுவாரசியங்களுக்குப் பஞ்சமிருக்காது. பாளையங்கோட்டை சிறையில் என்னோடு வைகோ, ஆற்காடு வீராசாமி, ஆர்.டி.சீதாபதி உள்ளிட்டோர் இருந்தனர். வைகோ சிறந்த கைப்பந்தாட்ட வீரர். எல்லா நாட்களிலும் உற்சாகமாக விளையாடுபவர், புதன்கிழமை மட்டும் விளையாட வர மாட்டார். காரணம், அன்றுதான் வைகோவின் மனைவி அவரைக் காண வருவார். அந்தப் பிரிவின் சோகம் அவரிடம் நாள் முழுக்க இருக்கும். ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் ரங்கசாமியின் உறவினர் பொன்.பரமகுரு சிறைத் துறை ஐ.ஜி-யாக இருந்தார். அவர் ரங்கசாமியைச் சந்தித்து ‘‘நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து விலகுவதாகக் கடிதம் தந்தால் விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதனை ஏற்க மறுத்ததால், 21 மாதங்கள் சென்னை சிறையில் அடைக்கப் பட்டிருந்தார் ரங்கசாமி. கன்னியாகுமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் முத்துசாமி மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் போது கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை சிறைக்கு மணக்கோலத்திலேயே வந்து மணமக்கள் ஆசி பெற்றனர். இப்படி எவ்வளவோ விஷயங்கள்!

ஒருவகையில், நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டம் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சர்வ அதிகாரங்கள் கொண்ட இந்திரா காந்தியின் அசுர சக்திக்கும், மக்கள் சக்திக்கும் நடைபெற்ற போர் அது. ஆனால், இறுதி வெற்றி மக்கள் சக்திக்குத்தான் கிடைத்தது. எந்தவொரு போராட்டத்திலும் இறுதி வெற்றி மக்கள் சக்திக்குத்தான் என்பதை இன்னொரு முறை உணர்த்திய சந்தர்ப்பம் அது!

வீரபாகு,ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ‘விஜயபாரதம்’ வார இதழின் ஆசிரியர். எழுத்தாக்கம்: எம்.சரவணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x