Last Updated : 03 Jun, 2015 10:16 AM

4  

Published : 03 Jun 2015 10:16 AM
Last Updated : 03 Jun 2015 10:16 AM

வெண்புள்ளிகளுக்கு முற்றுப்புள்ளி!

வெண்புள்ளிகள் என்பது ஒரு நிறக் குறைபாடு, வியாதி இல்லை!

எல்லா இடர்ப்பாடுகளையும் முற்பிறவியோடும் விதியோடும் சம்பந்தப்படுத்தும் சமுதாயத்தை நாம் என்னவென்று நொந்துகொள்வது?

“என் வீட்டில் எனக்குத் தனித் தட்டு, தனிப் படுக்கை, தனி அறை, நான் பயன்படுத்தும் எதையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் பயன்படுத்தும் எதையும் நான் பயன்படுத்தக் கூடாது. காரணம், எனக்கு வெண்புள்ளிகள் இருக்கின்றன. என்னுடைய சம்பாத்தியத் தில்தான் குடும்பமே நடக்கிறது. அதனால்தான் எனக்கு

வீட்டில் தங்கிக்கொள்ளச் சிறப்புச் சலுகை வழங்கப் பட்டுள்ளது. இல்லாவிட்டால் என்னை வீட்டை விட்டே விரட்டியிருப்பார்கள்” - மாநகரப் போக்குவரத்துக் கழகத் தில் பணிபுரியும் 42 வயதான நடத்துநரின் குமுறல் இது.

‘‘என்னுடைய பெற்றோரைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. வெண்புள்ளிகளை எதிர்கொள்ளப் பெற்றோர் எனக்கு அளிக்கும் ஊக்கம், அக்கறை என்னைத் திக்குமுக்காடச் செய்கிறது. இத்தகைய பெற்றோரைப் பெற்ற நான் கொடுத்துவைத்தவள்” - மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரியும் இளம்பெண்ணின் பெருமிதம் இது.

ஒரு பக்கம் ஒதுக்குதல், இன்னொரு பக்கம் அதீத அக்கறை. இந்த இரண்டு உச்சபட்ச அணுகுமுறைகள்தான் வெண்புள்ளிகள் உள்ளவர்கள் சந்தித்துவரும் அன்றாட அனுபவங்களின் இரு மையங்கள்.

உண்மையில், வெண்புள்ளிகள் இருப்பவருக்கு உதவ வேண்டுமானால் நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? இவை இரண்டுமே தவறு. தானும் பிறரைப் போல் இயல்பானவன் (ள்) என்ற உண்மையை வெண்புள்ளிகள் உள்ளவர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில், புரிந்துகொள்ளும் வகையில் நமது அணுகு முறை அமைய வேண்டும். அதுவே சரியானது.

தொட்டாலும் வராது

அரை குறை தகவல்கள் ஆபத்தானவை என்பார்கள். வெண்புள்ளிகள் விஷயத்தில் இது ஆயிரம் மடங்கு உண்மை.

“அப்பா, அவர் மட்டும் ஏன் இவ்வளவு கலராக இருக் கிறார்”- எட்டு வயது மகள் தன் தந்தையிடம் கேட்டாள்.

‘‘அவருக்கு வெண்குஷ்டம். ( வெண்புள்ளிகளைத்தான் அவ்வாறு கூறினார் ). அதனால்தான் அப்படி இருக்கிறார்’’- இது தந்தையின் பதில்.

இந்த உரையாடல் நடைபெற்றது ரயிலில். எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை, என்னைச் சுட்டிக் காட்டி கேட்ட கேள்விக்கு அவருடைய தந்தை சொன்ன பதில்தான் நீங்கள் மேலே படித்தது. இதைக் கேட்டு நான் மவுனமாக உட்கார்ந்திருந்தேன். என்னுடைய நிறத்தால் ஈர்க்கப்பட்ட அந்தக் குழந்தை என்னைத் தொட முயற்சித்தது. ‘‘தொடாதே, தொட்டால் உனக்கும் வந்துவிடும்’’ என்று தந்தை போட்ட கூச்சலில் ரயிலில் இருந்த அனைவரின் கவனமும் எங்கள் பக்கம் திரும்பியது. ‘‘அய்யா, தொடுபவர்களுக்கெல்லாம் வெண்புள்ளிகள் வரும் என்று உங்களுக்கு யார் சொன்னது?’’ என்று நான் அவரைக் கேட்டேன்.

‘‘இல்லை எதுக்கு ரிஸ்க்?’’ என்று நழுவினார்.

விழிப்புணர்வு இல்லாததே பிரச்சினை

அந்தத் தந்தையின் மீது எந்த வருத்தமும் இல்லை. அவரைப் போன்றவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்னும் பேசாமலேயே, தங்கள் வெறித்த பார்வைகளால் வெண்புள்ளிகள் உள்ளவர்களை நெருப்பில் தள்ளு பவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், அவர்களுக்கெல்லாம் எந்த உள்நோக் கமும் கிடையாது; ஒரே பிரச்சினை அறியாமை; அவர்களுக்கு விழிப்புணர்வு கிடையாது என்பதுதான்.

வெண்புள்ளிகள் என்பது ஒரு நிறக் குறைபாடு. அவ்வளவுதான். வியாதிகூட இல்லை. ஆனால், சமூகத்தின் அறியாமைப் பார்வை அவர்களை ஒரு கடுமையான நோயாளி மனோபாவத்துக்குத் தள்ளிவிடுகிறது. தங்களுக்கு உள்ள வெண்புள்ளிகளை மறைத்துக் கொள்வதற்காக எவ்வளவு செலவிடவும், எந்த மருந்தை உட்கொள்ளவும் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் தெரியுமா? இதனால்தான், பல பணப் பிசாசுகள் ‘20 மணி நேரத்தில் வெண்புள்ளிகளை மறைக்கி றோம்’ என்ற பெயரில் எதைஎதையோ விற்றுக் காசாக்குகின்றன. விளைவு, ஒரு பக்கம் பணவிரயம்…

இன்னொரு பக்கம் வெண்புள்ளிகள் அதிகமாவதோடு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பக்க விளைவுகள். இதனால், வெண் புள்ளிகள் உள்ளவர்கள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

ஒரு நல்ல செய்தி

வெண்புள்ளி உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தியைத் தந்திருக்கிறது மத்தியப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ). இழந்த தோலின் நிறத்தை மீண்டும் கொண்டுவரும் மூலிகை மருந்து ஒன்றை அது கண்டறிந்தது. முற்றிலும் மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் எதுவும் இல்லாத மருந்தாகக் கண்டறியப்பட்ட அதன் பெயர் ‘லுகோஸ்கின்’.

சில உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 400 நாட்கள் தொடர்ந்து அந்த மருந்தை உட்கொண்டுவந்தால், வெண்புள்ளிகள் மறைந்து தோலின் பழைய இயல்பான நிறம் திரும்புகிறது.

இதேபோல, வெண்புள்ளி உள்ளவர்கள் எதிர்கொள்ளும் திருமணப் பிரச்சினைகளுக்கெல்லாமும்கூட இன்றைக்கு முடிவு வந்துவிட்டது. வெண்புள்ளிகள் உள்ளவர்கள் எவ்வளவு படித் திருந்தாலும், எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களுக்குத் திருமணம் ஒரு சவால் என்று கூறப்பட்ட காலம் உண்டு. இன்றைக்கெல்லாம் ஊருக்கு ஊர் வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கான சுயம்வரங்கள் நடக்கின்றன.

ஆக, எதுவுமே இப்போது பிரச்சினை இல்லை. ஆனால், இந்தச் செய்திகளையெல்லாம் சமூகத்திடம் யார் கொண்டுசெல்வது? வேறு வழியில்லை; வெண்புள்ளி உள்ளவர்களேதான் இந்தச் செய்திகளைச் சமூகத்திடம் கொண்டுசெல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும்

இரு செய்திகள்:
1. வெண்புள்ளிகள் ஒரு நோய் அல்ல; அது நிறக்குறைபாடு.
2. அறிவியல்ரீதியாக அது தீர்க்கக் கூடியது.

நண்பர்களே, வெண்புள்ளிகள் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே சுமையாகச் சுமந்து திரிந்த காலம் முடிந்துவிட்டது. நம்முடைய வேதனைகளுக்கு முடிவுக்காலம் வந்துவிட்டது. ஆனால், நாம்

உரக்கப் பேசினால்தான் இதெல்லாம் ஊருக்குத் தெரியும்!

- கே.உமாபதி
செயலாளர்,
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம், இந்தியா
தொடர்புக்கு: leucodermafree@yahoo.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x