Published : 26 Jun 2015 09:07 AM
Last Updated : 26 Jun 2015 09:07 AM

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பட்டும்!

உச்சபட்சப் பாதுகாப்பில் உள்ள ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற வளாகத்துக்குள் கடந்த திங்கள்கிழமை தலிபான்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்திருக் கிறார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்தும் தலிபான்களின் பலம் இன்னும் குறையவில்லை என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர் மாளிகை, அமெரிக்க மற்றும் இந்தியத் தூதரகங்கள், காபூலில் உள்ள சர்வதேச உணவு விடுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கான ஓட்டெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போதே நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது சாதாரண விஷயமல்ல. நேட்டோ படையினர் முற்றிலும் வெளியேறிய பின்னர், ஆப்கன் ராணுவத்தால் தலிபான்களைச் சமாளிக்க முடியாது என்ற எண்ணம் இச்சம்பவத்தின் மூலம் வலுப்பெற்றிருக்கிறது.

ஆப்கன் பழங்குடியினரின் அரசியல் சூழலும், சட்ட ஒழுங்கற்ற ஆப்கன் கிராமப்புறங்களின் நிலையும், தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தலிபான்கள் சாதுரியமாகக் கையகப்படுத்தி யிருக்கும் போக்கும் தலிபான்களை வெல்ல முடியாத சக்தியாக மாற்றியுள்ளன. நிலைமை இப்படியே நீடித்தால் ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் மீண்டும் கைப்பற்றக்கூடும் எனும் அச்சம் எழுந்திருக் கிறது. தலிபானின் முந்தைய ஆட்சியின்போது லட்சக் கணக்கான ஆப்கன் பெண்கள் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில், மிக மோசமாக நடத்தப்பட்ட வரலாற்றை மறந்துவிட முடியாது.

தலிபான்களை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கிவிடலாம் என்று நினைத்த அமெரிக்கா, தொடர்ந்து தன் ராணுவத்தைத் தலிபான் களுக்கு எதிராக ஏவிவிட்டுக்கொண்டே இருந்தது. அமெரிக்கா செய்த மிகப் பெரிய தவறு அதுதான். அதற்குப் பதிலாக உள்கட்டுமானத்தை மேம்படுத்துதல், மறுசீரமைப்புப் பணியில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் அமெரிக்கா கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

ஆப்கன் அதிபரான அஷ்ரப் கனி, அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்வதாக உறுதியளித்து செப்டம்பர் 2004-ல் அதிபராகப் பதவியேற்றார். ஆனால், அவரது செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த ஒன்பது மாதங்களாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லாமலேயே ஆப்கானிஸ்தான் அரசு இயங்கிக் கொண்டிருந்ததுதான் இன்னும் மோசம். இப்படிப்பட்ட குளறுபடியான அரசியல் சூழலில், தேசியக் கட்டமைப்பு, பாதுகாப்புச் சிக்கல்கள், உள்நாட்டு விவகாரங்கள் ஆகியவற்றை ஒருசேரச் சீர்படுத்த சர்வதேசச் சமூகத்துடன் கைகோத்துப் பல்முனைத் திட்டங்களை ஆப்கன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஆப்கனில் வேரூன்றியுள்ள தலிபான்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். அதே நேரம், ஆட்டம் கண்டிருக்கும் ஆப்கன் பாதுகாப்புப் படைக்கு முட்டுக்கொடுத்து நிமிர்ந்து நிற்கச் செய்ய வேண்டும். இதற்கு சர்வதேசச் சமுதாயத்தின் ஒத்துழைப்பு தேவை. 1989-ல் ஆப்கன் மண்ணிலிருந்து சோவியத் ஒன்றியம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, மூன்றே ஆண்டுகளில் முகமது நஜிபுல்லாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் கோலோச்சத் தொடங்கினர். இதனால் உள்நாட்டுப் போர் மூண்டு ஆப்கன் ரத்த வெள்ளத்தில் மிதந்தது. அப்படி ஒரு வரலாறு மீண்டும் நிகழ அனுமதிக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x