Published : 01 Jun 2015 09:33 AM
Last Updated : 01 Jun 2015 09:33 AM

மோடி 365° - மோடியின் முதலாண்டு எப்படி?- மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்

உலகில் வாழும் மக்களில் 17% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால், பல்வேறு நோய்களால் வாழும் மக்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டாலோ, மக்கள்தொகை விகிதத்தைவிட அது அதிகம். உதாரணமாக, தொழுநோயாளிகளில் 68%, காசநோயாளிகளில் 30% பேர் இந்தியர்கள். பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களில் 20% பேர் இந்தியாவில்தான் இறக்கின்றனர். தடுப்பூசிகளின் மூலம் தடுக்கப்படக்கூடிய நோய்களால் உலகில் இறக்கும் குழந்தைகளில் 26% குழந்தைகள் இந்தியக் குழந்தைகள். ஒவ்வொரு நாளும் இங்கு 160 பெண்கள் கர்ப்பம் தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு 7.6 லட்சம் பச்சிளங்குழந்தைகள் பிறந்த 28 நாட்களுக்குள்ளேயே இறந்துவிடுகின்றன. அதேசமயம், இது உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் வாழும் நாடு. ஆக, இந்திய அரசு சுகாதாரத் துறையில் செயல்பட வேண்டிய வேகமும் தீவிரமும் அதிகம். ஏழை எளிய மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும் எனில், அதற்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வது அவசியம்.

பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சுகாதாரத் துறையைப் பற்றி நிறையப் பேசியிருந்தது. ஆனால், செய்ததோ குறைவு. முன்னதாக, மன்மோகன் சிங் அரசு 2014 -15 இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கிய நிதியில் 20%-ஐ (ரூ. 2,500 கோடியை) ஆட்சிக்கு வந்ததுமே குறைத்தது மோடி அரசு. பின்னர், அது உருவாக்கிய பட்ஜெட்டிலும் ரூ. 6,000 கோடியைக் குறைத்தது. 2014-15-ல் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 39,238 கோடி. 2015-16-ல் இது ரூ. 33,152 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது நமது சுகாதாரத் துறைக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கும்.

ஒருபுறம், இப்படிப் பொதுமக்களின் சுகாதாரத்தில் தன்னுடைய பங்களிப்பைக் குறைத்துக்கொள்ளும் அரசு, மறுபுறம் மக்கள் மருத்துவத்துக்காகச் செலவிடும் தொகையும் உயர வழிவகுக்கிறது. அதாவது, மருத்துவத்தைக் காப்பீட்டு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கும் நடவடிக்கைகளைத் தூக்கிப் பிடிக்கிறது. உதாரணமாக, முன்னதாக, ரூ.15,000 பிரிமியம் செலுத்தினாலே, மருத்துவக் காப்பீட்டுக்கான வருமான வரிவிலக்கு வழங்கப்பட்டது. இப்போதோ அது ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. பிரிமியத் தொகை அதிகரிக்கவும் மக்கள் கூடுதல் செலவை நோக்கி நகரவும் இது வழிவகுக்கும். இதேபோல, தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. திட்டத்தை ஒழித்து, அதற்கு மாற்றாக தனியார் காப்பீட்டை ஊக்கப்படுத்த மத்திய அரசு முயல்கிறது (1.86 கோடி தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்த 7.21 கோடிப் பேரும் பயனடையும் திட்டம் இ.எஸ்.ஐ.).

மோடி அரசின் `தேசிய நல்வாழ்வுக் கொள்கை 2015' மக்கள் விரோதக் கொள்கைகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, அரசாங்கமே நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்குப் பதில், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதியை அதிகரிக்க தனித் தீர்வை வரி (செஸ்) வசூலிக்க இது பரிந்துரைக்கிறது. இதெல்லாம் எரியும் பிரச்சினையில் எண்ணெய் ஊற்றும் செயலாக அமையும்.

அதேபோல, மருந்து விலை நிர்ணய தேசிய ஆணையத்தின் விலை நிர்ணய அதிகாரம் பறிக்கப் பட்டிருக்கிறது மிகத் தவறான முடிவு. 509 மருந்துகளின் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது மக்களைப் பெரும் பாதிப்பில் தள்ளும். தொடர்ந்து, இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர முயல்வது, நமது மருந்து உற்பத்தி நிறுவனங்களைப் பெரிதும் பாதிக்கும். இந்தியாவில், 70%-க்கும் மேலான மருத்துவ உபகரணங்களை ரூ. 10 கோடிக்கும் குறைவான முதலீட்டில் இயங்கும் சிறிய நிறுவனங்களே உற்பத்தி செய்கின்றன. இந்நிலையில், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவு நமது இந்திய நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதோடு, இத்துறையைப் பெருநிறுவனங்களின் கைகளுக்குக் கொண்டுசென்றுவிடும்.

இந்தியாவில் 80% புறநோயாளிகள் சேவையும் 60% உள்நோயாளிகள் சேவையும் தனியார் மருத்துவத் துறையால்தான் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மூன்றாம் நிலை உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை முழுமையாகத் தனியார்மயமாக்கிடவும், அரசு மருத்துவ மனைகளின் பல்வேறு சேவைகளை வெளிக்கொணர்வு மூலமாக வழங்கவும் பாஜக அரசின் தேசிய நலவாழ்வுக் கொள்கை 2015 வலியுறுத்துகிறது. கூடவே, இப்போது 14% ஆக இருக்கும் தனியார் மருத்துவத் துறையின் வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளில் 21% ஆக அதிகரிக்க அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். இதன் விளைவுகளையெல்லாம் நினைத்தால் பெரும் அச்சமும் கவலையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மோடி அரசின் முதலாண்டில் சுகாதாரத் துறையில் நடந்திருக்கும் சந்தோஷமான செயல்பாடு என்றால், அனைத்து மாநிலங்களிலும் ‘எய்ம்ஸ்’ போன்ற மருத்துவமனைகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கையைச் சொல்லலாம். எண்ணற்ற மக்களுக்கு இது நல்வாழ்வு அளிக்கும். இந்த மருத்துவமனைகளில் ஒன்று தமிழகத்தில் அமையவிருப்பது இரட்டை மகிழ்ச்சி தருவது!

- டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்,

தொடபுக்கு: daseindia2011@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x