Published : 18 May 2015 08:45 AM
Last Updated : 18 May 2015 08:45 AM

சீன - இந்திய உறவின் முக்கியத்துவம்

மூன்று நாட்கள் பயணமாக சீனாவுக்கு வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை, சீனா - இந்தியா இடையிலான உறவுகளில் மட்டு மல்லாமல், பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிபர் ஜி ஜின்பிங்கின் சொந்த மாகாணமான சீனாவின் வட மேற்கு மாகாணமான ஷான்ஜியின் தலைநகரான ஜியானிலிருந்து தனது சீன சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் மோடி. கடந்த செப்டம்பரில் இந்தியா சென்றிருந்த அதிபர் ஜி ஜின்பிங், மோடியின் சொந்த ஊரான அகமதாபாதிலிருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார். வழக்கமான நடை முறையில் அல்லாத இந்த ‘சொந்த ஊர்’ அரசு நடைமுறை, இரு நாடுகளும் தங்களுக்கிடையில் கலாச்சாரப் பரிமாற்றங்களை அதிகரிப்பதிலும் இரு தலைவர்களுக்கு இடையிலான நட்பை வலுப்படுத்துவதிலும் உறுதியுடன் இருப்பதை உணர்த்துகிறது.

இந்தியப் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியத் தலைநகரான புது டெல்லிக்குச் செல்லாமல், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு முதலில் சென்றார் அதிபர் ஜி ஜின்பிங். இதற்குப் பதில் மரியாதை செலுத்தும் வகையில் ஜியான் நகரில் தரையிறங்க மோடி முடிவுசெய்தார்.

வரலாற்றைப் பார்த்தோமானால், 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியும் பயணியுமான யுவான் சுவாங், தனது இந்தியப் பயணத்தை ஜியான் நகரிலிருந்துதான் தொடங்கினார். அப்போது சீனாவின் டாங் வம்ச அரசின் தலைநகராக ஜியான் இருந்தது. இந்தியாவில் 16 ஆண்டுகள் தங்கி புத்த மத வேதங்களைச் சேகரித்தார் யுவான் சுவாங். மோடியின் மாநிலமான குஜராத்துக்கும் யுவான் சுவாங் சென்றிருக்கிறார் என்ற தகவல் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக இருந்துவரும் கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த பத்தாண்டுகளாக வளர்ந்துவரும் இருதரப்பு உறவு, இந்த இரண்டு பிராந்திய சக்திகளை ஒன்றுக்கொன்று ஈர்க்கச் செய்திருக்கிறது. கடந்த பத்தே ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு ரூ. 44 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 4.4 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ. 6.3 லட்சம் கோடியாக இது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-லிருந்து இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளராக சீனாதான் இருக்கிறது. சீனா இறக்குமதி செய்யும் நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கிகள் நிறுவப்பட்டதில் இந்தியாவும் சீனாவும் முக்கியப் பங்கை வகித்தன.

இத்தனை இருந்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆரோக்கியமானதாகவும் பல காலம் நீடிக்கக்கூடிய தாகவும் வைத்திருப்பதில் சீனாவும் இந்தியாவும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், வர்த்தக நிலைப்புத் தன்மையின்மை, குறைந்த அளவிலான நேரடி முதலீடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியிருக்கிறது.

இந்தியத் தொழில்துறை மற்றும் உள் கட்டமைப்புப் பணிகளுக்கான முதலீடு இன்னும் 5 ஆண்டுகளில் ரூ. 1.26 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று கடந்த செப்டம்பரில் இந்தியா சென்றிருந்தபோது அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு வரும் மோடி தன்னுடன் 3 மாநில முதல்வர்களையும் அழைத்து வந்தார். உள்நாட்டு வளர்ச்சியில் அவர் கொண்டிருக்கும் அக்கறையை இது காட்டுகிறது.

இருநாடுகளுக்கும் இடையிலான ராஜாங்க ரீதியான தடைக்கல்லாகவும், சில சமயம் இருநாட்டு உறவு மேம்பாடு அடைவதற்குத் தடையாகவும் இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை. எனினும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கடைபிடிப்பதால், எல்லையில் இருநாடுகளும் ஒரு முறை கூடத் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளவில்லை என்பது ஆறுதலான விஷயம். அமைதி மற்றும் ராஜாங்கக் கொள்கையில் சீனாவும் இந்தியாவும் கவனம் செலுத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவில் மட்டுமல்லாமல் ஆசிய வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும்.

தமிழில்: வெ. சந்திரமோகன்.

- சீன நாளிதழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x