Published : 21 May 2015 08:15 AM
Last Updated : 21 May 2015 08:15 AM

காலனிய நடைமுறைகள் இன்னும் ஏன்?

ஆங்கிலேயர் நம்மிடமிருந்து விடைபெற்று ஏழு தசாப்தங்கள் ஆகியும் அவர்களின் நிழல் நம்மிடையே உலவிக்கொண்டிருப்பதன் உதாரணங்களில் ஒன்றுதான், சத்தீஸ்கர் மாவட்ட ஆட்சியர்களின் உடை தொடர்பாகச் சமீபத்தில் எழுந்திருக்கும் சர்ச்சை.

அண்மையில் சத்தீஸ்கர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை பஸ்தர் விமான நிலையத்தில் வரவேற்கச் சென்ற பஸ்தர் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா ‘முறைப்படி’ உடை அணிந்திருக்கவில்லை என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது சத்தீஸ்கர் மாநில அரசு. கூடுதலாகக் குளிர் கண்ணாடியையும் அவர் அணிந்திருந்ததாக அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. பேன்ட், சட்டை அணிந்திருந்த நிலையில், பிரதமரை வரவேற்ற தண்டேவாடா மாவட்ட ஆட்சியர் கே.சி. தேவ் சேனாபதிக்கும் இதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. முன்னவர் ஹரியாணாவின் குர்கான் நகரைச் சேர்ந்தவர். பின்னவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்.

பொதுவாகவே பிரதமர், ஆளுநர், குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் அணிய வேண்டிய உடைகுறித்து வரையறை உண்டு. ஆண்கள் பந்த்காலா எனும் உடை அல்லது கோட் அணிந்திருக்க வேண்டும். பெண் அதிகாரிகள் உறுத்தாத நிறத்தில் சேலையோ, சல்வார் கமீஸோ அணிந்திருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறையை மீறியதால்தான் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவிக்கிறது.

கட்டாரியாவிடமிருந்து இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக விளக்கம் வரவில்லை. எனினும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ்-அப் குழுமத்தில் தனிப்பட்ட முறையில் இதுதொடர்பாகப் பேசியிருக்கும் கட்டாரியா, “பஸ்தரில் மே மாதம் 40 டிகிரி செல்சியஸ் வெயில் அடிக்கும். எனவே, பிரதமர் வருகை தொடர்பான ஏற்பாடுகளைச் செய்யும் சமயத்தில் பந்த்காலா அணிவது சாத்தியமல்ல. தவிர, அலுவல்ரீதியான உடைதான் அணிந்திருந்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னாள் மற்றும் இந்நாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இவ்விஷயத்தில் கட்டாரியாவுக்கு ஆதரவாகத்தான் பேசிவருகிறார்கள். என்னதான் விதிமுறை என்றாலும், கோடைக் காலத்தில் பந்த்காலா உடை அணிய வேண்டும் என்று வலியுறுத்துவது சரியல்ல என்கிறார்கள் அவர்கள்.

இந்த நோட்டீஸ் மூலம் பணி நிமித்தமாக இருவருக்கும் பெரிய பாதிப்பு வரப்போவதில்லை. என்றாலும், இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பப்பப்பட்டிருப்பது தேவையற்றதே. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் நிறைந்த மாநிலமான சத்தீஸ்கரில் கட்டாரியாவும் தேவ் சேனாபதியும் மிகச் சிறப்பாகப் பணியாற்றுபவர்கள் என்று பெயரெடுத்தவர்கள். நயா ராய்ப்பூர் வளர்ச்சி ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றியபோது ராய்ப்பூரில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்தது உள்ளிட்ட பாராட்டுக்குரிய பணிகளுக்குச் சொந்தக்காரர் கட்டாரியா. இப்படிப்பட்ட எச்சரிக்கைகள் அவர்களைச் சோர்வடையச் செய்துவிடும் என்பதே உண்மை.

இந்த விவகாரத்தை மட்டுமல்ல; பட்டமளிப்பு விழாக்களில் அணிந்து கொள்ளப்படும் கோட்டுகள், நீதிமன்றங்களில் அனுசரிக்கப்படும் உடை விதிமுறைகளையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. இடம், வெப்பநிலை போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற விதிமுறைகளை இன்னும் நாம் கட்டிக்கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன? விதிமுறைகளை விட நடைமுறையும், சூழலும் முக்கியமல்லவா. இதைக் கருத்தில் கொண்டு, பொருந்தாத விதிமுறைகளை இப்போதாவது களைந்தெறிய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x