Published : 30 May 2015 10:19 AM
Last Updated : 30 May 2015 10:19 AM

எத்தனை காயப்படுத்துகிறோம் நாம்...

மனுஷ்ய புத்திரனின் ‘நாற்காலிக்கும் சக்கர நாற்காலிக்கும் நடுவே…’ என்ற வேதனை ததும்பும் உள்ளக் குமுறலை வாசித்து வருந்தினேன். பார்வையற்றவரான ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் மூத்த உதவி ஆசிரியர் கரிமெல்லா சுப்பிரமணியத்தை பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி மாத இதழுக்காகச் சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் செய்யும்போது, அவர் ஒரு செய்தியைக் குறிப்பிட்டார்.

விமான நிலையங்களில் ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் உடல் ஊனமுற்றோர் விமானத்தில் ஏற உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஊனமுற்றோர் சங்க அகில இந்தியத் தலைவர் ஜாவேத் அபீதி வைத்தபோது, மத்திய அரசு அதை ஏற்கவில்லை. பிரச்சினையை அவர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். அரசுத் தரப்பில் அதற்கு எதிராக வாதிட்டவர் மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி. மிகச் சில மனிதர்களுக்காகப் பெருந்தொகையை ஓர் அரசு செலவழிக்க முடியாது என்பது அவரது தரப்பு வாதம். அரசைக் கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், அந்த வசதியை உடனே செய்து தர உத்தரவிட்டது.

வேடிக்கை என்னவெனில், தமக்கு மூட்டு வலி ஏற்பட்டு சிகிச்சைக்கு விமானப் பயணம் செய்ய வந்தபோது அந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்ட இருவரில் ஒருவர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய். மற்றொருவர் மறுத்து வாதிட்ட அதே வழக்கறிஞர் சோலி சொராப்ஜி!

இங்கிலாந்து நாடு போன்ற சில தேசங்களில் பேருந்து முதற்கொண்டு கட்டிடங்கள் வரை அனைத்தும் ஊனமுற்றோர் சிக்கலின்றிப் பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன. நமது நாட்டிலோ உடலியல்ரீதியாகத் தவிப்போரை உளவியல் ரீதியாகவும் எத்தனை காயப்படுத்துகிறோம். மாற்றங்களுக்குப் போராடுவோம்.

- எஸ்.வி. வேணுகோபாலன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x