Last Updated : 11 May, 2015 09:55 AM

 

Published : 11 May 2015 09:55 AM
Last Updated : 11 May 2015 09:55 AM

நம் கல்வி... நம் உரிமை... ஆதிதிராவிடர் பள்ளி உருவாக்கிய அரசு மருத்துவர்!

முழுக்க முழுக்க அரசுப் பள்ளி வளர்த்தெடுத்த பிள்ளை அன்புக்குமார். தேனி மாவட்டம், தி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தாய் தந்தை முத்துலட்சுமி - தங்கம் இருவருமே விவசாயக் கூலிகள். ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் படித்தவர். இன்றைக்கு ஆண்டிப்பட்டி ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர். வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். ஊரில் அத்தனை சந்தோஷமாகப் பேசுகிறார்கள் அன்புக்குமாரைப் பற்றி. “எல்லாமே எங்க பள்ளிக்கூடம் தந்ததுதான் சார் என் வாழ்க்கையில” என்று ஆரம்பித்தார் அன்புக்குமார்.

வீடு தேடி வந்த ஆசிரியை

“கஷ்டமே தராத பள்ளிக்கூடம் அது. ஆனா, அதுக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவேன். அப்பா போயிட்டாருன்னு தெரிஞ்சதும் பள்ளிக்கூடத்துலேருந்து தப்பிச்சி ஓடிருவேன். அப்பாவும் அம்மாவும் தோட்டத்துக்குப் போயிடுவாங்கங்கிறதால வீட்டுல போய் ஒளிஞ்சுக்கிடுவேன். சில சமயம் அப்படியே தூங்கிடுவேன். ஒழுங்கா பள்ளிக்கூடம் வராட்டா, கனவில் பூதம் வரும்னு டீச்சர் பயமுறுத்தியும் பிரயோஜனமில்லை.

அதுவே வழக்கமாகிட்டதால, அதுக்கு முடிவு கட்டுறதுக்காக வேண்டி ஒருநாள் காலையிலேயே ஒண்ணாப்பு டீச்சர் அரசம்மா எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. ‘உங்க பய கொஞ்ச நேரம்கூட பள்ளிக்கூடத்துல இருக்கிறதில்லை. ஒரே ஓட்டமா வீட்டுக்கு வந்திடுறான்’னு அம்மாகிட்ட சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் எங்கே தப்பிக்க? பள்ளிக்கூடம் ஒழுங்கா போக ஆரம்பிச்சேன்.

ஒண்ணாப்புல இருந்து பள்ளிக்கூடம் போனாலும், படிக்க ஆரம்பிச்சது என்னவோ மூணாப்புல இருந்துதான். காரணம் பொன்ராஜ் சாரும், மாரிமுத்து சாரும் வைத்த போட்டிகள். ‘பசங்களா இன்னைக்கு யாரு நல்லா படிக்கிறீங்களோ அவங்களுக்கு பிரைஸ்’ என்று சொல்லுவார்கள். சொன்ன மாதிரியே, சொந்த கைக்காசைப் போட்டு ஏதாவது பரிசுப் பொருள் வாங்கித்தந்திடுவாங்க. பொதுவாவே எங்க பள்ளிக்கூடத்துல யாரும் படிபடின்னு படுத்த மாட்டாங்க. ஆனா, நல்லா ஊக்கப்படுத்துவாங்க.

அஞ்சாம் வகுப்பு முடிச்ச எல்லோரையும், பக்கத்துலேயே இருந்த ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில சேர்த்துக்கிட்டாங்க. எங்க பள்ளிக்கூடத்துல ஒரு நல்ல பழக்கம். காலையில் நடக்கும் பிரேயரப்ப, ஏதாவது ஒரு பையனைப் பத்தி வாத்தியார்கள் புகழ்ந்து பேசுவது வழக்கம். அப்படி யாருடைய பெயரையாவது மேடையில சொல்லிட்டாங்கன்னா, அந்த வாரம் பூராம் அவன்தான் ஹீரோ. 8-ம் வகுப்பு படிச்சப்ப ரவி சார், ‘அன்புக்குமாரோட கையெழுத்து ரொம்ப நல்லாயிருக்கு. அவன் நிச்சயமாக பெரிய ஆளா வருவான்’னு மேடையேறிச் சொன்னார். எல்லோரும் கைதட்டினார்கள்.

அதுக்குப் பிறகு நாம சாதாரணமான ஆள் இல்லைன்னு எனக்கே தன்னம்பிக்கை வந்துச்சி” என்று கூறும் அன்புக்குமார் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 462 மதிப்பெண்கள் பெற்றார். அவர் அதிக மதிப்பெண் எடுக்கக் காரணம், கணித ஆசிரியர் சத்யநாராயணா. அதுவரையில் இஷ்டப்பட்ட நேரத்தில் இஷ்டப்பட்ட பாடத்தைப் படித்துக்கொண்டிருந்த அன்புக்கு, திட்டமிட்டுப் படிப்பது எப்படி என்று சொல்லித்தந்தவர். அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தால், கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்ததுடன், மற்ற பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றார் அன்பு.

ரெபர் பண்ணி சொல்றேன்பா...

“11-ம் வகுப்பில் பர்ஸ்ட் (கணிதம், உயிரியல்) குரூப்புல சேந்தேன். வகுப்புல உட்கார்ந்த உடனேயே, உயிரியல் ஆசிரியர் ரவி சார் என்னைய கூப்பிட்டு அனுப்பினார். பிரேயர் கூட்டத்தில் என் பெயரை உச்சரித்து உற்சாகப்படுத்தினாரே அதே ரவி சார். என்னையப் பார்த்ததும் அவர் சொன்ன முதல் வார்த்தை, ‘தம்பி, நீ என் பாடத்துல ஒரு மார்க்கூட குறையக் கூடாது. அப்படிக் குறைஞ்சா நான் பாடம் நடத்துற விதத்துல ஏதோ குறை இருக்கிறதாத்தான் அர்த்தம். எந்த சந்தேகம்னாலும் கேளு நான் சொல்லித்தாரேன்’ என்றார்.

அவர் பாடம் நடத்துற விதமே, ஆர்வத்தைத் தூண்டுறதா இருக்கும். ஒரு கேள்வியைக் கேட்டு அந்தக் கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும்னு எங்கள யோசிக்க வெச்சிட்டுத்தான் பாடத்துக்குள்ளேயே போவார். பசங்களும் ரொம்ப ஆர்வமா கவனிப்பாங்க. சில நேரத்துல பாடத்துக்குச் சம்பந்தமே இல்லாத கேள்வியெல்லாம் கேட்போம். ‘அது அவுட்ஆப் சிலபஸ்’ன்னு மழுப்பாம, ‘எனக்கு பதில் தெரியலையேப்பா. ரெபர் பண்ணிட்டு வந்து சொல்றேன்’னு சொல்லுவார். மறுநாள் மறக்காமல் அதற்கு பதில் சொல்லிவிட்டுத்தான் பாடத்தையே ஆரம்பிப்பார்.

11-ம் வகுப்பு கணக்குப் புத்தகம் கொசகொசன்னு ஒரு மாதிரியா இருந்துச்சி. 10-ம் வகுப்பில் நூத்துக்கு நூறு எடுத்திருந்தாலும், இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் கணக்கு ஆர்வமே போயிருச்சி. மறுபடியும் கணக்கு மேல ஆர்வம் வர வெச்சது கணக்கு டீச்சர் ஜோஸ்பின் நிர்மலா ராணிதான். இப்படி தமிழ் சண்முகவேல் அய்யா, ஆங்கிலம் ராஜேந்திரன் சார், இயற்பியல் மாரிமுத்து சார், வேதியியல் வெங்கடேசன் சார்ன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாணியில் பாடம் நடத்தினாங்க.

முக்கியமான விஷயம் என்னென்னா, பன்னெண்டாப்புலகூட நல்லாப் படிக்கிற பசங்களுக்கு ஸ்பெஷல் கோச்சிங் கொடுக்கல. எல்லாத்துக்கும் ஒண்ணுபோலத்தான் பாடம் நடத்துனாங்க. படிக்க கஷ்டப்படுற பசங்க மேல மட்டும் கொஞ்சம் கூடுதலா கவனம் செலுத்துனாங்க.

துணைக்கு வந்த ஆசிரியர்

கடைசியில் 1133 மதிப்பெண்கள் எடுத்து 2008-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவர்களில் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தேன். எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சி. 12-ம் வகுப்புக்குப் பிறகு எனக்கும், அந்தப் பள்ளிக்கூடத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காதுன்னு தெரியும். ஆனாலும் மேல் படிப்புக்கு விண்ணப்பிக்க என் ஆசிரியர்கள் எல்லோரும் போட்டி போட்டு உதவுனாங்க. மருத்துவ கவுன்சிலிங்குக்காக அப்பாவுடன் நான் கிளம்பியபோது, கணினி ஆசிரியர் சுரேந்திரனும் எங்களோடு சென்னை வந்துட்டார்.

7 நாட்கள் என்னோடு தங்கியிருந்து, வழிநடத்தி, தன்னம்பிக்கையூட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் போட்டுட்டுத்தான் ஊர் திரும்புனாரு. இத்தனைக்கும் எனக்குக் கணினி அறிவியல் பாடமே கிடையாது, அவர் எனக்குப் பாடம் எடுத்ததும் கிடையாது. ஆனாலும், என்னைய தன்னோட மாணவனாத்தான் பாவிச்சார். இப்படி எனக்கு எல்லாமே என்னோட ஆசிரியர்களும் பள்ளிக்கூடமும்தான் சார்” என்கிறார் அன்புக்குமார் நெகிழ்ச்சியாக.

அன்புக்குமாரோடு முடிந்துவிடவில்லை பயணம். எந்த விளம்பரமும் இல்லாமல், இவரைப் போலவே பல மருத்துவர்களையும் வழக்கறிஞர்களையும் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறது ஆதிதிராவிடர் நலப்பள்ளி.

மனிதாபிமானமுள்ள மருத்துவர்

2014 மார்ச் 14-ம் தேதி படிப்பை முடித்த இவர், கடந்த மார்ச் மாதம் மருத்துவ அலுவலராகப் பணியில் சேர்ந்துள்ளார். உள்ளூர் மக்கள் அன்புக்குமாரைக் கொண்டாடுகிறார்கள்.

“நான் பெரிசா எதுவும் செய்யலை. எங்க அம்மாவும் அப்பாவும் அரசாங்க ஆஸ்பத்திரியில சிகிச்சை பெறுபவர் கள்தான். அம்மாவுக்கு நீரிழிவு நோய் உண்டு. ஒருதடவை அவங்க ஒழுங்கா மருந்து சாப்பிடாம இருக்குறது தெரிஞ்சு, வருத்தப்பட்டேன். ‘தர்மாஸ்பத்திரியில கூட்டமா இருக்குப்பா, என்னால் நிற்கவே முடியலை’ என்றார். இப்படி அரசு மருத்துவமனைகளில் இருக்கும் சின்னச் சின்ன குறைகளைச் சொல்லுவார். அதே குறைகள் நான் வேலைபார்க்கிற மருத்துவமனையில் இருக்கக் கூடாதுங்கிறதில் கவனமாக இருக்கேன். அவ்வளவுதான்” என்கிற அன்புக்குமாரிடம் தான் மேலே வர பலரும் உதவியாக இருந்ததுபோல தானும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.

“இன்னைக்கு எங்க பள்ளிக்கூடம் - ஆசிரியர்கள் இல்லாட்டி நான் இல்ல. அதே மாதிரி மருத்துவக் கல்லூரியில் சேர பணமில்லாம தவிச்சபோது, முத்துநாகு என்கிற செய்தியாளர் நிறைய உதவிகளைச் செய்தார். அவரது வழிகாட்டுதலால்தான், அகரம் பவுண்டேஷன் உதவியை நாடினேன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, என் படிப்புச் செலவு முழுவதையும் அவங்களே ஏத்துக்கிட்டாங்க. இப்படி நிறைய உதவி எனக்குக் கிடைச்சிருக்கு. அதே மாதிரி நானும் நாலு பேருக்கு உதவியா இருக்கணும்கிறதுல உறுதியா இருக்கேன். என்ன வளர்த்தெடுத்த அரசுப் பள்ளிக்கூடம்கிற அமைப்பாகட்டும், இன்னைக்கு நான் வேலை பார்க்குற அரசு மருத்துவமனையாகட்டும், எதுக்கும் சளைச்சதில்லைன்னு நிரூபிக்கணும்னு நெனைக்கிறேன்!”

அன்புக்குமாரின் கண்களில் உறுதி தெரிகிறது.



- கே.கே. மகேஷ்,
தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x