Published : 14 May 2015 08:49 AM
Last Updated : 14 May 2015 08:49 AM

உள்ளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் தலிபான்கள்!

மற்றுமொரு வலைப்பதிவர் கொல்லப்பட்டிருக்கிறார் வங்க தேசத்தில். இந்த ஆண்டில் இப்படி நிகழும் மூன்றாவது படுகொலை இது. முதலில் அவிஜித் ராய். அடுத்தது வஷிகுர் ரஹ்மான். இப்போது அனந்த விஜய் தாஸ் (33). வங்க தேசத்தின் சில்ஹெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனந்த விஜய் தாஸ். மதச்சார்பற்ற கருத்தாளரான இவருக்கும் அவிஜித் ராய்க்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அவிஜித் ராய் தொடங்கிய வலைப்பதிவில்தான் ஆனந்த விஜய் தாஸ் தொடர்ந்து எழுதிவந்தார். இருவருமே வங்க தேசத்தில் தலையெடுத்துவரும் மத அடிப்படைவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்கள். இருவருமே அடிப்படைவாதிகளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மொழி அடிப்படையில் பாகிஸ்தானிலிருந்து தனி நாடாகப் பிரிந்த வங்கதேசத்தில் மத அடிப்படைவாதம் சமீப காலமாக வேகமெடுத்து வருவது துணைக் கண்டத்தில் கவலைக்குரிய விஷயமாகிவருகிறது. தொடர்ச்சியாகச் சிறுபான்மையினர் மீதும் நடுநிலையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இருந்தும், அரசும் காவல் துறையும் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனம் காட்டிவருகின்றன. அவிஜித் ராய் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, உடனிருந்த அவரது மனைவியும் தாக்குதலுக்கு உள்ளாகிப் படுகாயமடைந்தார். இன்றுவரை அரசுத் தரப்பில் யாருமே தன்னைச் சந்திக்கவில்லை என்று அவிஜித் ராயின் மனைவி கூறுவது மேலும் அதிர்ச்சியூட்டுகிறது.

இந்த ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று என்று சொல்லப்பட்டாலும் கணக்கில் வராத கொலைகள் இன்னும் அதிகம் இருக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதற்கு முன்னதாக ஹுமாயூன் ஆசாத், ரஜீப் ஹைதர், சகோர்-ரூணி போன்ற நடுநிலையாளர்களும் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான தங்கள் நிலைப்பாடுகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் வங்கதேசம் தலிபான்கள் தேசமாக ஆகிவிடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது.

மத அடிப்படைவாதத்தோடு அரசியல் குழப்பங்களும் கைகோத்துக் கொண்டு வங்கதேசத்தைக் குலைத்துவருகின்றன. பிரதமர் ஷேக் ஹசினாவுக்கும் அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கும் இடையிலான அரசியல் போரில் இதுவரை இந்த ஆண்டு மட்டும் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக அங்குள்ள மனித உரிமை அமைப்பு சொல்கிறது. இவையெல்லாமே வங்கதேசத்தைக் குழப்பமான ஒரு எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

துணைக் கண்டத்தின் சாபக்கேடாக மதவாதம் தலையெடுத்திருப்பதை ‘தி இந்து’ தனது தலையங்கத்தில் (03.03.2015) ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருப்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வங்கதேசத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் சிறுபான்மையினர் மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் முன் எப்போதும் இல்லாத வகையில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் தாக்குதல்கள் தொடுக்கப் படுகின்றன. இந்தத் தருணத்தில் பாகிஸ்தானில் ஓடும் பேருந்தை நிறுத்தி பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டதில் இஸ்மாயிலி என்ற சிறுபான்மைப் பிரிவினர் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் தகவல் நம்மை மேலும் அயர்ச்சியடையச் செய்கிறது.

எல்லாவற்றுக்குப் பிறகும் மிக முக்கியமான ஒரு பாடத்தைத் துணைக் கண்டம் கற்றுக்கொள்ளவில்லை. மத அடிப்படைவாதத்துக்கு எதிராகச் செயலூக்கமுள்ள எதிர் நடவடிக்கைகள் அரசிடமிருந்து வந்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். பாராமுகமாக இருந்தால், மத அடிப்படைவாதத்தை என்ன செய்வதென்றே தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தானின் நிலைதான் துணைக் கண்டத்தின் மற்ற நாடுகளுக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x