Last Updated : 05 May, 2015 08:47 AM

 

Published : 05 May 2015 08:47 AM
Last Updated : 05 May 2015 08:47 AM

ஊசித்தட்டுப் பாட்டு தெரியுமா?

ஊசித்தட்டு நாடகங்கள், ஊசித்தட்டுப் பாடல்கள் தமிழக வரலாற்றில் வெளிச்சம் விழாத பிரதேசங்கள்!

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியபோது படித்தவர்களும் நடுத்தரவர்க்கத்தினரும்கூட எதிர்த்தனர் என்பது வரலாறு. கல்கத்தாவில் ரயில் அறிமுகப்படுத்தப் பட்டபோது தண்டவாளத்தில் பல்லக்குகளை வைத்து எதிர்ப்புத் தெரிவித்ததற்குப் பின்னணி உண்டு. அதுபோலவே அங்கே மருத்துவக் கல்லூரி ஆரம்பித்த போதும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஆவேசமாய் எதிர்த்தனர்.

தமிழகத்தில் 1900-1931 வரை மவுனப் படம் வெளிவந்தபோது தீவிர இலக்கிய வாசகர்களோ கலைவிமர்சகர்களோ படித்த உயர் அதிகாரிகளோ சினிமாவைக் கண்டுகொள்ளவில்லை. சில இடங்களில் எதிர்ப்பும் உண்டு. இவர்கள் நாடகத்தின் மறு வடிவம் சினிமா என்பதைக் கூட ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர்.

இந்தக் காலகட்டத்தில் மதுரையை மையமாகக் கொண்ட நாடக சபாக்கள் கொடிகட்டிப் பறந்தன. இவற்றின் தாய்வீடாக மதுரை இருந்தது. அப்போதும் மதுரையில் மவுனப் படங்கள் திரையிடப்பட்டன. இந்தப் படங்களுக்கு விளக்கம் கொடுக்கத் திரையின் அருகே ஒருவர் இருப்பார். பெரும்பாலும் நாடக நடிகராகவோ பின்பாட்டுக்காரராகவோ அவர் இருப்பார். அவர் மவுனப் படங்களுக்குக் கொடுத்த விளக்கம்கூட மதுரை ஸ்பெஷல் நாடக பாணியில்தான் இருந்தது.

இசைத்தட்டுகளில் நாடகங்கள்

இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ சபா, சமரச சன்மார்க்க நாடக சபை எனப் பல நாடக சபாக்கள் இருந்த காலத்தில் - தமிழ் சினிமா பேசும் படமாக உருப்பெற்ற காலத்தில் - நாடகங்களை இசைத்தட்டுகளில் பதிவுசெய்து வெளியிடும் முயற்சியில் கொலம்பியா நிறுவனமும் வேறு சில நிறுவனங்களும் ஈடுபட்டன. அப்போது கிராமபோன் அறிமுகமாகிவிட்டது. பாடல்களைக் கேட்பதற்கு மட்டும் இசைத்தட்டுகள் என்ற நிலைமாறி, நாடகங்களைக் காதால் கேட்கலாம் என்றும் விளம் பரத்துடன் இவை வந்தன. இசைத்தட்டுகள் சுழலும்போது ஊசியில் பட வேண்டும் அப்போதுதான் ஒலி எழும்பும். இதனால், கிராமங்களில் கிராமபோனை ‘ஊசித்தட்டுப் பாட்டு’ என்றும் சொன்னார்கள்.

அந்தக் காலத்தில் சென்னையில் இயங்கிய ஹட்சின்ஸ் கம்பெனி, சரஸ்வதி ஸ்டோர்ஸ், ஒர்ஸ் கொலம்பியா ஹவுஸ், ஹிஸ் மாஸ்டேர்ஸ் வாய்ஸ், ஷைனிங் ஸ்டோர்ஸ் ஸொசைட்டி, சாரதா சங்கம், ட்வின் கம்பெனி என 12-க்கும் மேற்பட்ட கிராமபோன் கம்பெனிகள் நாடகத் தட்டுகளை வெளியிட்டன. இந்தக் கம்பெனிகள், குரல் கொடுப்பதற்காகத் தனி நாடகக் குழுக்களையும் வைத்திருந்தன.

இசைத்தட்டு நாடகங்களின் உரையாடல்களை ஸ்பெஷல் நாடக வசனகர்த்தாக்களும் கதாகாலட்சேபக் காரர்களும்தான் எழுதினார்கள். இவர்களில் முக்கிய மாக பிரம்ம மாங்குடி சிதம்பர பாகவதரின் சீடர் திருப்பூந்துருத்தி டி.ஆர். விஸ்வநாத அய்யர் (ஹரிகதாகாலட்சேபக்காரர்) சிதம்பரம் சி.டி. குஞ்சிதபாதம் பிள்ளை, பி.சி. வடிவேலு நாயக்கர் (நாவலாசிரியர்) எஸ். முத்தையா பாகவதர் போன்றோரைக் கூறலாம்.

கிராமபோன் கம்பெனிகளில் ஹட்சின்ஸ் கம்பெனியும் கொலம்பியா கம்பெனியும்தான் அதிக நாடகத் தட்டுகளை வெளியிட்டன. (60-க்கு மேல் பட்டியல் உள்ளது) ஒரு நாடகத்துக்கு 4 முதல் 7 தட்டுகள் இருக்கும். நல்லதங்காள் நாடகம், உத்தர ராமாயணம் போன்ற சிலவற்றுக்கு ஏழு தட்டுகள்.

நாடகத் தட்டுகளை வெளியிட்ட கம்பெனிகள், நாடகத்தின் உரையாடலைத் தனித்தனிப் புத்தகமாகவும் வெளியிட்டன. இப்படி வெளியிடப்பட்ட புத்தகங்களே 50-க்கும் மேல் உள்ளன. இப்புத்தகங்களில் நாடகத்தில் குரல்கொடுத்த நடிகர்களின் பெயர்கள், நாடக ஆசிரியர் களின் புகைப்படம், நாடகக் காட்சிகளின் வரைபடங்கள், நாடக விளம்பரங்கள், அந்தக் காலத்தில் புகழ்பெற்ற பாடகர்கள், இசைக் கலைஞர்களின் படங்கள் (ராஜரத்தினம் பிள்ளை, எம்.எஸ். சுப்புலட்சுமி) போன்றவை இருந்தன.

தட்டு நாடகங்களுக்கென்று தனியாகப் பாடல்கள் எழுதுபவர்களும் இருந்தார்கள். ஒரு நாடகத்தில் 7 முதல் 19 பாடல்கள் வரை இருந்தன. நாடகங்களுக்குக் குரல் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் மதுரை சபா நடிகர்களே. 1930 - 35 ஆண்டுகளில் தனிக் கச்சேரி களின் விளம்பரங்களில் ஹட்சின்ஸ் கம்பெனி நாடகப் புகழ் என்றோ வேறு கம்பெனியின் புகழ் என்றோ போடுவது சாதாரணமாயிருந்தது.

இந்த நாடகங்கள் எல்லாமே ‘புராண’ இதிகாசங்களைத் தழுவியவை. புகழேந்திப் புலவர் பேரில் உள்ள அம்மானைக் கதைகளைத் தழுவிய நாடகங்களும் உண்டு. கற்பனையான சரித்திரக் கதைகளும் மாயா ஜாலக் கதைகளும் உண்டு. சதி அனுசுயா, பக்தப் பிரகலாதா, மாயாபஜார், சுபத்ரா பரிநயம், திரௌபதி மான சம்ரட்சணம், நல்லதங்காள் ஆகிய நாடகங்கள் அதிகம் விற்பனையானவை.

புவின் கம்பெனி நல்ல சமாரியன், பவுல், ஏழை லாசருக்கு மோட்சம், கிறுஸ்துவின் ஜனனம் என்னும் விவிலியக் கதைகள் தட்டு நாடகங்களாக வெளியிடப் பட்டன. இந்த நாடகங்களில் பாடல்களைப் பாடிய சேலம் சாமுவேல் சந்திரசேகர், ஞானசேகர், ஆர். ஜோசப் போன்றோர் கர்நாடக சங்கீதம் முறையாகப் படித்தவர்கள். இவர்கள் தனிக் கச்சேரிகளுக்கும் சென்றவர்கள்.

பஸ்ட்கிளாஸ் ஏ 1

தட்டு நாடகங்கள் கேட்பவர்களை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதால் மூலக்கதை, பிறமொழிக் கலப்புபற்றியெல்லாம் அவர்கள் பெரிதும் கவலைப்படவில்லை. சரஸ்வதி ஸ்டோர்ஸ் வெளியிட்ட திரௌபதி மான சம்ரட்சணம் நாடகத் தட்டுக்கு அப்போது பெரும் வரவேற்பு இருந்தது. இதில் ஒரு காட்சியில் துரியோதனன் புதிய மாளிகை ஒன்று கட்டினான். அதன் திறப்பு விழாவுக்கு இந்தியாவில் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான். தனி விருந்தும் உண்டு; சாதிமத வேறுபாடில்லாத போஜன வசதி உண்டு என்றெல்லாம் விளம்பரப்படுத்தியிருந்தான். சாப்பாடு முடிந்ததும் துரியோதனன் ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்தான்.

துரியோதனன் - சாப்பாடெப்பெடி

சாஸ்திரிகள் - பொகு பரிஷ்காரம்

துரி - ஏமண்டி பந்துலுகாரு போஜன

மேலாகண்டி

பந்துலு - அம்ருதம், பலே போஜனம்

துரி - ஆச்சாரியரே ஊட்ட ஹேகே

ஆச்சாரியார் - பான சன்னாசி இத்து

துரி - நம்பூதிரி ஊணு எங்ஙனேயான

நம்பூ - வளர நன்னாயிட்டுண்டு

துரி - அய்யர்வாள் மீல்ஸ் எப்படி

அய்யர் - பஸ்ட்கிளாஸ் ஏ 1

தட்டு நாடகப் புத்தகங்களின் உள்அட்டை, பின் அட்டைகளில் கிராமபோன் விளம்பரம் படத்துடன் உள்ளது. நவநாகரீக லேபாய் கிராமபோன் 32 இஞ்சு உயரம், 20 இஞ்சு நீளம், 16 இஞ்ச் அகலம். விலை ரூ.230 மட்டுமே. விளம்பரத்தில் ‘கீழே குனிந்து தட்டில் ஊசியைப் பொருத்த வேண்டாம்’ என உள்ளது. கொலம்பியா கிராமபோன் (எண்.115) இரட்டை ஸ்பிரிங் விலை ரூ.110. டிவின் கம்பெனி போர்ட்டெபிள் கிராமபோன் ஐந்து வண்ணங்களில் விலை ரூ.55 கொலம்பியா கம்பெனி ஒரு ஸ்பிரிங் கிராமபோன் ரூ.33; 100 ஊசிகள் இலவசம். ஊமத்தம் பூ மாடல் ஹார்ன் கிராமபோன் விலை. ரூ.90 இந்த விளம்பரங்கள் எல்லாம் 1933-க்கு முன் வந்தவை.

தட்டுகள் பொருத்தப்பட்ட ஊசிக்குக்கூட விளம்பரம் உள்ளது. 200 ஊசிகள் அடங்கிய கண்ணைக் கவரும் பெட்டி விலை ரூ.1 தான். தமிழில் பேசும்படம் பரவலான பின்னர்கூட கிராமபோன் விளம்பரங்கள் வந்தன.

நாடகத் தட்டுகள் மட்டுமல்ல. மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு, எம்.எம். மாளவியா, ரங்கசாமி அய்யங்கார், ஈ. ராமசாமி முதலியார், ஆகாகான், பேகம்ஷா நவார் போன்றோரின் ஆங்கில, இந்தி, உருது, பேச்சுகளின் ஊசிப்பாட்டுத் தட்டுகள்கூட விளம்பரப் படுத்தப்பட்டன. ஒரு செட் தட்டுகள் விலை ரூ.4-தான் (1933).

ஊசித்தட்டு நாடகப் புத்தகங்களில் கே.பி. சுந்தராம்பாள், வீணை தனம்மாள், ராஜரத்தினம் பிள்ளை, டி.கே. பட்டம்மா, எம்.எஸ். சுப்புலட்சுமி என அன்றைய பிரபலங்களின் அருமையான படங்களும் இவர்களின் பாடல்கள் விவரமும்கூட விளம்பரமாக உள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான பகுதியின் சமூக, அரசியல், கலை வரலாற்றைப் பிரதி பலித்தவை இந்த ஊசித்தட்டுகள். அப்படி இருந்தும், வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுக்கு ‘ஊசித் தட்டுகள்’ என்ற பிராந்தியம் தவம் கிடப்பது, நம் சமூகம் வரலாற்றாய்வுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதன் அடையாளம்!

- அ.கா. பெருமாள்,

நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x