Published : 27 May 2015 10:42 AM
Last Updated : 27 May 2015 10:42 AM

மோடி 365° - மோடிக்குப் பிறகு பிரளயம்தானா?

ஃபிரான்ஸ் மன்னர் 15-ம் லூயி இப்படிச் சொன்னதால் மிகவும் பிரபலமடைந்தார், “எனக்குப் பிறகு பிரளயம்தான்”. பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கத்தின் ஓராண்டு ஆட்சி நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் முன்கண்ட மேற்கோளை மோடி சற்றே திருத்தி, “நான் வருவதற்கு முன்பு சூனியம் இருந்தது; எனக்குப் பிறகோ பிரளயம்தான்” என்று சொல்வதுபோல் இருக்கிறது. அவர் பதவிக்கு வருவதற்கு முன்பு அயல்நாடு வாழ் இந்தியர்களெல்லாம் இந்தியாவில் பிறந்ததற்கே “வெட்கப்பட்டார்கள்” என்று இந்த மாதத்திலேயே வெளிநாட்டு மண்ணில் இரண்டு முறை சொல்லியிருக்கிறார் மோடி.

ஆறு தசாப்தங்களாக அடுத்தடுத்த அரசுகளால் சிதைவடைந்துபோயிருந்த இந்தியாவை மோடிதான் புனரமைத்துக்கொண்டிருக்கிறார் என்று இந்த ஓராண்டு காலத்தில் நமக்கு வெறுப்பேற்றும் அளவுக்கு எத்தனை முறை சொல்லப்பட்டிருக்கும். அந்தோ, அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆறாண்டு கால தேஜகூ ஆட்சி மறக்கப்பட்ட வரலாறாக ஆக்கப்பட்டதே!

சாதாரண இந்தியக் குடிமக்கள் இதுவரை போராடிப் பெற்றிருந்த ஏதோ கொஞ்சம் உரிமைகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தும் முயற்சிகள்தான் இந்த ஓராண்டில் நிகழ்ந்திருக்கின்றன என்பது தெளிவு. இந்த அரசு பின்னுக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி, சமூக நலத்திட்டங்கள், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் நலனுக்கான திட்டங்கள் போன்றவற்றுக்கான நிதியை வரவு-செலவுத் திட்டத்திலிருந்து பெருமளவில் குறைத்திருக்கிறார்கள்.

மூன்று புதிய சவால்கள் இந்தியாவுக்கு முன்னும் இந்திய மக்கள் முன்னும் எழுப்பப்பட்டிருக்கின்றன: நவதாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விடாப்பிடியாக முன்னெடுத்தல், மதப் பிரிவினைவாதத்துக்குக் கொம்புசீவி விடுவதன்மூலம் இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளின் மீது தாக்குதல் நிகழ்த்துதல், சர்வாதிகார ஆட்சியை நோக்கி மெதுவாக ஆனால், உறுதியாகச் செல்லுதல். இவற்றில் கடைசியாகச் சொல்லப்பட்டது, ஜனநாயக அமைப்புகளைச் சேதப்படுத்துவதிலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் புனிதமாகக் கருதப்படும் நடைமுறைகளை மீறுவதிலும் கண்கூடாகத் தெரிகிறது.

பொருளாதாரச் சவால்கள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பின்பற்றிய நவதாராள மயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை தேஜகூ அரசு மூர்க்கமாக முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெருநிறுவனங்கள் கையிருப்புகளைக் குவித்து வைத்திருக்கின்றன. இது, வேலையில்லாத் திண்டாட்டத்தை நோக்கி இந்தியாவை இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது. இதெல்லாம் போதாதென்று அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறியிருக்கிறது.

விவசாயிகளின் துயரம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து முதன்முறையாக ஒட்டுமொத்த விளைநிலங்களின் பரப்பு வெகுவாகக் குறைந்திருந்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. விவசாய இடுபொருட்களின் விலை கிடுகிடுவென்று ஏறியிருக்கும் அதே நேரத்தில், மானியங்களின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகக் கடனுக்கு மேல் கடன் வாங்கித் திருப்பிக் கட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் விவசாயிகள். தொழிலாளிகளின் நிலை மட்டும் என்ன வாழ்கிறதாம்? மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்போது ஊதிய விகிதம் 10% இருக்கிறது. இதுவே 1990-1991-ல் 25% இருந்தது.

மறுபுறம் பார்த்தால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகிக்கொண்டே இருக்கிறார்கள். 2011-ல் வெளியிடப்பட்ட பட்டியலில் 100 கோடி அமெரிக்க டாலர்கள் வைத்திருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 55. இப்போதோ 100. இவர்கள் 100 பேரின் மொத்த சொத்து 34,600 கோடி டாலர்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் முதல் 10 இடங்களில் இருப்பவர்களின் சொத்து மதிப்பு 2000-ல் 36.8% ஆக இருந்தது. 2014-ல் அது 49% ஆக அதிரடியாக உயர்ந்திருக்கிறது. ‘நல்ல காலம் வரும்’ என்று வாக்களிக்கப்பட்டதல்லவா, பெரும்பாலான மக்களுக்கு அது மாயை என்ற நிலையிலிருந்து துர்க்கனவாக மாறியிருக்கிறது.

மதப்பிரிவினைவாதம்

அரசின் ஆசிர்வாதத்துடன் மதப்பிரிவினைவாதமும் எந்நேரமும் கொதிநிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. நவீன, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியக் குடியரசை சகிப்புத்தன்மையற்ற ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றுதல் என்ற செயல்திட்டத்தை நோக்கி ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக சென்றுகொண்டிருக்கிறது. ‘கர் வாப்ஸி’ என்ற பெயரில் நிகழ்த்தப்படும் மதவாதப் பிரச்சாரம், வெவ்வேறு மதத்தினருக்கு இடையில் நடைபெறும் திருமணத்தை ‘லவ் ஜிகாத்’ என்று பெயரிட்டு ஒடுக்கும் செயல் போன்றவற்றோடு வரலாற்றின் இடத்தில் புராணங்களையும் தத்துவத்தின் இடத்தில் மதத்தையும் வைப்பதற்காக வெறித்தனமான முயற்சிகளும் நடைபெறுகின்றன. இவற்றின் விளைவுகள்தான் பாடத்திட்டங் களையும் ஆய்வு நிறுவனங்களையும் காவிமயமாக்குவதற்கான முயற்சிகளெல்லாம். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இப்படியான வெறுப்பு அரசியலில் ஈடுபடுவோர் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

ஒட்டுமொத்த வாக்குகளில் வெறும் 31% மட்டுமே பெற்றிருந்தாலும் மக்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு கிட்டத்தட்ட 50 சட்டங்களை பாஜக தரைமட்டமாக்கியிருக்கிறது, நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு உள்ளாக்காமலேயே. நாடாளுமன்ற விவாதம் என்பது எல்லா சட்ட முன்வைப்புகளையும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்துவதைக் குறிக்கிறது. இந்த நிலைக்குழு, நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சியிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டிருப்பது. இப்படிச் செய்வது மசோதாக்களையெல்லாம் மெருகூட்டவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ திருத்தி உருவாக்கவோ ஏதுவாகிறது.

15-ம் லூயியின் வாக்கு, பிரெஞ்சுப் புரட்சியை முன்கூட்டியே கணித்ததாகப் பலரும் நம்புவார்கள். அதேபோல் தனக்கு முந்தைய இந்தியாவை சூனியமாகச் சித்தரிக்க மோடி முயல்வது எதில் கொண்டுபோய் விடும் என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

- சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x