Last Updated : 07 Apr, 2015 09:32 AM

 

Published : 07 Apr 2015 09:32 AM
Last Updated : 07 Apr 2015 09:32 AM

ஒரு பிடி மண் 2: நிலமும் சட்டமும்

தனது நிலத்தைப் பாழ்படுத்தும் ஒரு நாடு தன்னையே பாழ்படுத்திக்கொள்கிறது. - ராங்கிளின் ரூஸ்வெல்ட்

இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். இன்னமும் காலனியாதிக்கச் சட்டங்கள் பல உயிருடனேயே இருக்கின்றன. அவற்றில் பல மக்கள் விரோதச் சட்டங்கள். ஆங்கிலேய அரசு நம்முடைய மக்களை ஒடுக்குவதற்கும் நம்முடைய வளங்களைச் சூறையாடுவதற்கும் வசதியாக உருவாக்கப்பட்ட சட்டங்கள்.

மிகச் சிறந்த உதாரணம், 1800-களில் பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய வனச் சட்டங்கள். காலங்காலமாக நம்முடைய வனங்கள் அங்கு வசிக்கும் பழங்குடி மக்களின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்தது. நாட்டின் எல்லைகள் மாறலாம், ஆட்சி மாறலாம், மன்னர்கள் மாறலாம்; ஆனாலும் வனத்தில் பழங்குடிகளுக்கு இருந்த உரிமைகளைப் பெரும்பாலான மன்னர்கள் அங்கீகரித்தே ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு இந்திய வனங்களில் உள்ள வளங்கள் தேவைப்பட்டது. அதற்கான சட்டங்களை உருவாக்கியபோது, வனங்கள் முழுவதும் அரசாங்கத்துக்குச் சொந்தம் என்று சட்டங்களை உருவாக்கினார்கள். அதாவது, வனங்களில் உள்ள ஆதாரங்கள் முழுவதற்கும் ஆங்கிலேய அரசும் ஆங்கிலேய அரசு அனுமதித்த நிறுவனங் களும் சொந்தக்காரர்கள் ஆனார்கள்.

இப்படி நடந்தபோது 3 பெரிய மாற்றங்கள்/பாதிப்புகள் உருவாயின.

1. அதுவரை வனம் யாருக்குச் சொந்த மானதோ, அந்த உரிமை பறிக்கப்பட்டது.

2. அவர்களுக்கு வன ஆதாரங்களில் உள்ள உரிமை பறிக்கப்பட்டது.

3. முக்கியமாக, அவர்கள் இனி ஆக்கிரமிப் பாளர்கள்.

கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கொடூர முறைக்கு முடிவு கட்டப்பட்டது, ‘பழங்குடிகள் மற்றும் இதர வனவாசிகள் பாதுகாப்பு உரிமைச் சட்டம்-2006’ மூலம். புதிதாகத் திருத்தி எழுதப்பட்ட இந்த வனச் சட்டத்துக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு.

ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நம்முடைய பழங்குடிகளுக்கு நாம் அநீதி இழைத்திருக்கிறோம் என்பதை ஒப்புக்கொண்டு பதிவுசெய்திருக்கும் சட்டம் இது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்றால் என்ன?

பிரிட்டிஷ் காலத்தில் இப்படி நிலங்களைக் கையகப்படுத்தக் கொண்டுவரப்பட்ட மோசமான சட்டமே 1894-ல் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம். அன்றைய ஆங்கிலேயர் ஆட்சிக்கு வசதியாக, ‘அரசின் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் நிலங்களை எந்தத் தடையுமின்றிக் கையகப்படுத்தலாம்’ என்று சொல்லும் சட்டம் இது. விவசாயிகள்/ நில உரிமையாளர்கள் நலனைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத சட்டம்.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நடந்த நல்ல காரியங்களில் ஒன்று, இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. ‘நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு, மறுகுடியமர்வுச் சட்டம்-2013’ என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் நீண்ட காலமாக ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் சூறையாடப்பட்ட விவசாயிகள் / பழங்குடிகள் வலியுறுத்திய பல விஷயங்களுக்குக் காது கொடுத்தது.

இதன்படி,

1. இப்படியான நிலக் கையகப்படுத்தலின் போது, வளமான சாகுபடி நிலங்களுக்கு விலக்கு கிடைத்தது.

2. ஓரிடத்தில் நிலத்தைக் கையகப்படுத்தும் போது, அங்குள்ள விவசாயிகளுக்கு, சமூகத்துக்கு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளையும் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்படக் கூடிய இழப்புகளையும் பற்றி ‘சமூகத் தாக்க மதிப்பீடு’ செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தலின்போது இந்த மதிப்பீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. நிலம் கையகப்படுத்துதல், அரசு - தனியார் திட்டங்களுக்கானது என்றால், 70% நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்; தனியார் திட்டங்களுக்கானது என்றால், 80% நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

4. கையகப்படுத்தப்படும் நிலம் நகர்ப்புறத்தில் இருந்தால், அரசு சந்தை மதிப்பீடுபோல் இரு மடங்கு தொகை நில உரிமையாளருக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். கிராமப் புறத்தில் இருந்தால், நான்கு மடங்கு தொகை இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

மோடி அரசு கொண்டுவரும் முக்கியமான மாற்றங்கள்

1. இந்தச் சட்டத்தில் 5 துறைகள் சார்ந்த நிலக் கையகப்படுத்தலின்போது, விதிவிலக்கு அளிப்பதாகச் சொல்கிறது மோடி அரசு. பாதுகாப்புத் துறை சார்ந்து, தொழில் துறைக்கு, வீடமைப்புத் திட்டங்களுக்கு, கிராமப்புற அடித்தளக் கட்டமைப்புக்கு, சமூக அடித்தளக் கட்டமைப்புக்கு. இந்த 5 துறைகள் சார்ந்தும் நிலம் கையகப்படுத்தும்போது, கையகப்படுத்தப்படும் நிலம் விளைநிலமா, தரிசா என்பதைக் கணக்கில் கொள்ளத் தேவை இல்லை. அதுபோலவே, இந்த 5 பிரிவுகளுக்குத் தேவைப்படும் நிலங் களைக் கையகப்படுத்தும்போது, அரசோ நிறுவனங்களோ தனிநபர்களோ நில உரிமை யாளர்களில் 80% பேரின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை.

2. சமூகத் தாக்க மதிப்பீட்டு நடைமுறை ஒட்டுமொத்தமாக ரத்து.

3. நிலத்தைப் பறிகொடுத்தவர்கள் நீதிமன்றத் துக்குப் போக முடியாது.

4. இந்தச் சட்டம் கண்டுகொள்ளத் தவறிய வேறு 13 சட்டங்களின் கீழ் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கும் இனி, புதிய சட்டப்படி இழப்பீடு கிடைக்கும் (மோடி அரசு கொண்டுவரும் மாற்றங்களில் விவசாயிகளுக்கு ஆதரவான ஒரே பிரிவு இதுதான்).

வாரிச் சுருட்டும் 5 துறைகள்

இங்கே கவனிக்க வேண்டிய அம்சம், அரசு குறிப்பிடும் 5 துறைகள் வார்த்தை அளவில் மட்டுமே வெறும் 5 துறைகள் என்பதுதான். உதாரணமாக, பாதுகாப்புத் துறை என்பதன் கீழ் என்னென்ன நோக்கங்களுக்கெல்லாம் நிலங் களைக் கையகப்படுத்தலாம் என்றால், தேசியப் பாதுகாப்புக்காக, படைகளுக்காக, ராணுவப் பயிற்சிக்காக, ஆயுத - தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக, இவையெல்லாம் தொடர்பான அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்காக என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி ஒரு துறையின் கீழ் மட்டுமே பாதுகாப்பு எனும் பெயரின் கீழ் எண்ணற்ற திட்டங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தலாம். பாதுகாப்பு என்பது தேச நலனோடு சம்பந்தப்பட்டது. நிலங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால், ஏனையவை அப்படிப்பட்டவையா?

தொழில் துறை என்று கூறப்படும் ‘தனியார் துறை’அப்படிப்பட்டதா? வீடமைப்புத் திட்டங்கள் என்று கூறப்படும் ‘ரியல் எஸ்டேட் தொழில்’ அப்படிப்பட்டதா? அடித்தளக் கட்டமைப்பு என்று கூறப்படும் துறையின் கீழ் சாலைகளில் தொடங்கி எண்ணெய்-நிலவாயுக் குழாய்ப் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள் என்று எல்லாவற்றையும் கொண்டுவந்துவிட முடியுமே; இவற்றில் பங்கேற்கவுள்ள தனியார் நிறுவனங்கள் எல்லாம் அப்படிப்பட்டவையா? இப்படி விரிந்துகொண்டே போகும் நூற்றுக் கணக்கான திட்டங்களும் அப்படிப்பட்டவையா?

அரசு நினைத்தால், ஆகப் பெரும்பாலான திட்டங்களை - கிட்டத்தட்ட எந்த ஒரு திட்டத்தையும் இந்த 5 துறைகளின் கீழ் கொண்டுவந்துவிட முடியும். தங்கள் வாழ்வைச் சூனியமாக்கும் ஒரு திட்டத்துக்கு எதிராக ஒரு கிராமத்தின் அத்தனை விவசாயிகளும் எதிர்த்து நின்றாலும், தங்கள் விளைநிலங்களை அவர்கள் பறி கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால், அது எப்படி மக்கள் நலச் சட்டமாக இருக்க முடியும்? முதலில் அது எப்படி ஜனநாயகபூர்வமான சட்டமாக இருக்க முடியும்? இதனால்தான் நாட்டின் பெரும்பாலான விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மோடி அரசு கொண்டுவரும் நிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்க் கின்றன. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வருகிறது மோடி அரசு. ஏன்?

(நிலம் விரியும்…)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x