Published : 25 May 2014 10:34 AM
Last Updated : 25 May 2014 10:34 AM

மரபிலிருந்து எழுந்த புரட்சியாளர்

19-ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் செயல்பட்டு தமிழின் நவீன காலச் சிந்தனைப் போக்குக்கு தொடக்க நிலை பங்களிப்புகளை வழங்கியவர்களுள் ஒருவர் அயோத்திதாசர் (1845 - 1914). அயோத்திதாசர் மறைந்து நூறாண்டை எட்டும் தருணத்தில்,1990-களில்தான் அவரது எழுத்துகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டன. 1880முதல் சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிய அவர் 1907-ம் ஆண்டு தொடங்கி 1914-ம் ஆண்டு வரையிலும் நடத்திய வார ஏடான ‘தமிழன்’ என்கிற இதழில் எழுதிய எழுத்துக்களின் தொகுப்பு மட்டுமே அவரின் சிந்தனைகளாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவர் பெயரும் அவரது அரசியல் பங்களிப்பும் இதுவரை ஒரளவே விவாதிக்கப்பட்டுள்ளன. அவருடைய சிந்தனைகள் விரிவான அளவுக்கு விவாதிக்கப்படவோ விமர்சனபூர்வமாகச் சூழலோடு பொருத்தப்படவோ இல்லை.

அவரது எழுத்துகளில் சமூகம், பண்பாடு, அரசியல் போன்றவை தனித்தவையாக இல்லாமல் ஒன்றோடொன்று பிணைந்து வெளிப்படுகின்றன. ஆனால், அவர் எழுத்துகளில் இதுவரை உடனடித் தேவைக்கான அரசியல் முழக்கங்கள் கண்டெடுக்கப்பட்டு அவற்றை அடிப்படையாக வைத்து எளிய எதிர்வுகளை அமைத்து விவாதிப்பது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதேபோல, நம்முடைய அறிவுமுறைக்குப் பழக்கமான நவீன கல்விப்புலச் சட்டகங்களுக்குள் இருந்து கொண்டு அவர் பேசும் பண்பாடு மற்றும் மரபு சார்ந்த விஷயங்களை உரிய அளவில் புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது என்பதும் அவர் பரவலாக வாசிக்கப்படாமைக்குக் காரணமாகும்.

ஆங்கிலேயர் ஆதரவு

அயோத்திதாசரை வாசிக்க நுழையும் யாரையும் முதலில் அவருடைய தீவிர ஆங்கில அரசுசார்பு கொஞ்சமாவது சங்கடப்படுத்தும். இந்த வகையில் அவரை காலனியத்தின் முற்றுமுழுதான ஆதரவாளர் என்று சொல்லிவிடக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அயோத்திதாசர் தொடங்கி அம்பேத்கர் வரையிலான ஒடுக்கப்பட்டோர் தலைவர்கள்பற்றி இந்த வகை மதிப்பீடுகளே மேலோங்கியிருக்கின்றன. ஆங்கிலேயர் உருவாக்கிய நிர்வாக முறை, அதில் பங்கேற்ற சுதேச சாதிகளின் அதிகாரம், தேச உருவாக்கம் ஆகியவை செல்வாக்கு அடைந்திருந்த நிலையில் ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்து அரச ஆதரவைக் கைக்கொள்ளும் போக்கை தேசப்பற்று மற்றும் தேசத்துரோகம் என்கிற எதிர்வுகளைக் கொண்டு மட்டுமே எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், அயோத்திதாசரின் ஆங்கிலேயர் ஆதரவு அரசியல் தேவை சார்ந்ததே தவிர சமூகம் மற்றும் பண்பாட்டுப் பார்வையில் காலனியம் உருவாக்கிய சிந்தனை முறைக்கு வெளியிலிருந்தே தம் சிந்தனைகளை அவர் அமைத்துக்கொண்டார்.

சமணமும் பௌத்தமும்

அயோத்திதாசர் 1898-ல் மதம் மாறியபோது கிறித்தவம் போன்ற ஐரோப்பிய மதத்தை அல்லாமல் பௌத்தம் என்கிற உள்ளூர் மதத்தைத் தேர்ந்தெடுத்தார். தாழ்த்தப்பட்டவர்கள் கிறித்தவராகவோ மகமதியராகவோ மாறிவிடலாம் என்று அரசாங்கத்துக்கு அறிக்கை அளித்த சீனிவாச ராகவ அய்யங்காருக்கு 1898 ஜுனில் அயோத்திதாசர் எழுதிய கடிதம் மூலம் மதமாற்றம்பற்றி அவர் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாட்டை அறியலாம். பௌத்தம் என்பதில்கூட அன்றைக்கு ஐரோப்பியர் கண்ணோட்டத்தில் உருவான நவீன மறைஞான நோக்கிலோ இலங்கை பௌத்த சங்கங்களின் நிறுவனவாத விளக்கங்களிலோ ஈடுபாடு கொள்ளாமல் முழுக்கத் தமிழ்த் தரவுகளிலிருந்தே விளக்கங்களை அமைத்துக் கொண்டார். அந்த வகையில் நவீன அரசியல் சிந்தனையாக வெளிப்பட்ட சாதிபேதம் மறுப்பு என்கிற அணுகு முறைக்குத் தமிழ் மரபிலிருந்தும் நவீனத்துக்கு முந்தைய அடித்தள சாதிகளின் கலக மரபுகளிலிருந்தும் கூறுகளைக் கண்டெடுத்து இணைப்பைத் தந்தார். இதற்கு அவரிடமிருந்த இலக்கிய அறிவு கைகொடுத்தது.

பௌத்தம் பற்றிய அவருடைய விளக்கங்களில் மணிமேகலை, வீரசோழியம், சித்தர் பாடல்கள், நிகண்டுகள் உள்ளிட்ட எழுத்துப் பிரதிகள் மட்டுமல்லாது சடங்குகள், பழமொழிகள், மருத்துவத் தகவல்கள் உள்ளிட்ட மக்கள் வழக்காறுகள் போன்றவையும் இடம்பெற்றன. தமிழ் மொழியும் இலக்கியமும் அறியாத ஒருவரால் பௌத்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது என்பது அவரின் நிலைப்பாடு. பௌத்தம் மட்டுமல்லாது ஏதோவொரு பிரதேசத்தில் தோன்றி உலகின் பல பகுதிகளுக்குப் பரவிய எந்த சமயமும் அந்தந்தப் பகுதிகளின் சூழல் அடையாளம் சார்ந்து உள்வாங்கப்படுவதும் பின்பற்றப்படுவதும் நடக் கிறது. அவ்வாறுதான் தமிழ்ப் பகுதி சார்ந்து அவரால் பௌத்தம் விளக்கப்பட்டது. சமயம்பற்றிப் பேசினாலும் இன்றைய நிறுவனமயமான மதத்தின் கண்கொண்டே அதைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், அயோத்திதாசரின் விளக்கங்களில் வெகுஜன மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாகப் புழங்கியிருந்த சடங்குகள், தெய்வங்கள், கதைகள் போன்றவை இடம்பெறுகின்றன. படையெடுப்புகள், அரச ஆதரவு சார்ந்து மட்டுமே வரலாற்றில் சமயங்கள் செல்வாக்கு பெற்றிருக்க முடியும் என்று சொல்லும் நவீன வரலாற்று நூல்கள் இந்தியாவில் பௌத்தம் அழிந்துவிட்டதாகவே கருதுகின்றன. ஆனால், அயோத்திதாசர் வெகுமக்களிடம் புழங்கிவந்த சமய மரபுகள் உடனடியாக அழித்துவிட்டிருக்க முடியாது என்று கருதி மக்களின் வாழ்வில் சமண, பௌத்த மரபுகள் வேறு பெயர்களில் உலவத்தான் செய்யும் என்றார். அந்த வகையில் காதுவடித்தல், மொட்டைபோடுதல் போன்ற சடங்குகள், தெய்வங்களின் பெயர்கள் ஆகியவற்றை பௌத்தப் பின்னணியில் அயோத்திதாசர் விளக்குகிறார். அயோத்திதாசரின் இத்தகைய விளக்கங்களுக்குப் பிந்தைய சான்றாக மயிலை சீனிவேங்கடசாமி எழுதிய ‘பௌத்தமும் தமிழும்’ (1940) என்கிற புகழ்பெற்ற நூல் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தனித்துவப் பார்வை

அயோத்திதாசரின் இத்தகைய தனித்துவமான பண்பாட்டுப் பார்வைக்குக் காரணம் அவர் ஐரோப்பிய ஆய்வுலகச் சட்டகம் சாராமல் மரபான தமிழ்க் கல்வி பயின்றிருந்ததுதான். மேலும், அவர் ஒரு சிறந்த சித்த வைத்தியர். அவர் வைத்தியராய்ப் பேர்பெற்றவர் என்பதை திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்புகளில் குறிப்பிடுகிறார். இவ்வாறு மரபின் வேர்களிலிருந்து உருவாகிவந்த அவர் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்துவந்த நவீன மாற்றங்களையும் அவற்றை இங்கிருந்த பல்வேறு சமூகங்களும் உள்வாங்கிய முறையையும் கண்கூடாகப் பார்த்தார். இவ்விரண்டு நிலைகளிலிருந்தும் பிரதிபலிக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார். இரண்டு போக்கில் எந்த ஒன்றையாவது புறக்கணிப்பது அல்லது ஏற்பது என்ற நிலையில் அவர் இல்லை. இரண்டு போக்குகளின் தவிர்க்க இயலாத கூறுகளோடு உரையாடல் நடத்தினார் என்றே சொல்ல வேண்டும். நவீன காலத்தில் வலுப்பெற்ற சாதியாதிக்கத்தை எதிர்கொள்வதில் புதிய சிந்தனைக் கருவிகளும் நவீனத்துக்கு முந்தைய சமூகக் கூறுகளும் அவரிடம் இணைந்துகொண்டன.

ஒடுக்கப்பட்டோருக்குச் சார்பான குரல்கள்கூட வரலாற்றில் அம்மக்களிடமிருந்து ஆதிக்க சாதியினர் பறித்த அடையாளங்களை உரிமைகோராமல் ஒடுக்கப்பட்ட மக்களெல்லாம் வரலாற்றில் எதுவுமற்று இருந்தவர்கள் என்கிற தோற்றம் ஏற்படும்படி தான் ஒலிக்கின்றன. இந்த நிலைக்கு மாறாக பிராமணியத்துக்கு நிகரான-அடித்தள சாதிகளுக்குச் சொந்தமான ஆன்மிக மரபு ஒன்று அயோத்திதாசரால் இனம்காட்டப்பட்டது. அதுவே, பௌத்தம். அவருடைய பௌத்தம் புனித நூல்கள், குருமார்கள் என்று நிறுவனரீதியாக அமையாமல் மக்களின் அன்றாட வாழ்வின் சடங்குகள், வரலாற்று உரிமைகள் என்பதாக அமைந்திருந்தது.

பதிப்புகள் உருவாக்கிய வரலாறு

தமிழ் ஏடுகள் பலவும் அச்சுக்கு மாறிக்கொண்டிருந்த 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்து அதில் நடந்து வந்த குளறுபடிகளையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான தமிழ் வரலாற்றுத் தருணங்களையும் அயோத்திதாசர் பார்த்து வந்தார். 1812-ல் புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரி என்றறியப் பட்ட சென்னை கல்விச் சங்கத்தைத் தொடங்கி, தமிழ் ஏடுகள் பலவற்றை அச்சிட்ட எல்லிஸ் (1777 - 1819) என்ற ஆங்கிலேய அதிகாரியிடம் குறளையும் நாலடியாரையும் தந்து அச்சிடக் கோரியவர் தம் பாட்டனார் கந்தப்பன்தான் என்கிறார் அயோத்திதாசர். தொடக்க காலக் குறள் பதிப்புகளில் வள்ளுவர் பற்றிய பிறப்புக் கதை ஏதுமில்லாத நிலையில் 1830-களில் பதிப்பில் ஈடுபட்ட திருத்தணிகை சரவணபெருமாளையர் திருவள்ளுவர் பிராமண ஆணுக்கும் புலையர் இனப் பெண்ணுக்கும் பிறந்தார் என்கிற கதையைச் சிறிய அளவில் பின்னிணைப்பாக எந்த ஆதாரமும் இல்லாமல் சேர்த்தார். அவரது சகோதரர் விசாக பெருமாளையர் அடுத்துப் பதிப்பித்தபோது அதே கதையை சற்றே விரித்து நூலின் முதற்பகுதிக்குக் கொண்டுவந்தார். இந்தக் கதை அடுத்தடுத்த பதிப்புகளில் மீண்டும்மீண்டும் எடுத்தாளப்பட்டு உண்மை வரலாறாகிப்போனது என்று கூறி வள்ளுவர் வரலாறு அச்சுக் கலாச்சாரத்தினூடாக உறுதிப்பட்டது என்று அவர் எடுத்துக்காட்டுகிறார். அதுபோன்று பல்வேறு பதிவுகள் அவரிடமுண்டு. இன்றைக்கு, தமிழில் தாழ்த்தப்பட்டோரை இழிவுசெய்யும் பல்வேறு கதைகளும் இவ்வாறு பிற்காலங் களில் உண்டாக்கப்பட்டு உண்மையாக்கப்பட்டவை என்பது அவருடைய வாதம். காலனியம் நிலைபெற்றபோது எழுத்துப் பிரதிகளில் இருப்பதே உண்மையானவை என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதிகளின் இழிவும் பெருமையும் எழுத்தாக்கப்பட்டு நிறுவப்பட்டுவிட்டன. இதைப் பற்றிய விழிப்புணர்வு தமிழின் நவீனச் சிந்தனையாளர்களில் அயோத்திதாசரிடம்தான் துலக்கமாக வெளிப்படுகிறது.

நந்தன் யார்?

இதேபோல, அயோத்திதாசரால் காட்டப்படும் மற்றொரு பதிவும் முக்கியமானது. சைவ சமயக் கதைகளில் நந்தன் என்கிற தாழ்த்தப்பட்ட பண்ணையடிமை பக்தர் காட்டப்படுகிறார். ஆனால், அதற்கு நேர்மாறாக அயோத்திதாசர் நந்தனை பௌத்த மன்னன் என்கிறார். இது தொடர்பாக அவர் எழுதிய ‘இந்திரர் தேச சரித்திரம்’ என்கிற நீண்ட தொடரில் விவரிக்கிறார். 1910 முதல் ‘தமிழன்’ இதழில் தொடராக எழுதித் தொகுக்கப்பட்ட இந்நூலே ஒடுக்கப்பட்டோர் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாறாகக் கருதப்படுகிறது. நந்தன் மன்னன் என்கிற அவரின் இப்பதிவுக்குப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன. காலின் மெக்கன்ஸிக்காக 1798-ல் தஞ்சை வேதநாயக சாஸ்திரி தொகுத்து, தமிழ்நாடு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் வெளியிட்டுள்ள இடங்கை வலங்கை சரித்திரம் (1995) என்கிற நூலை உடனடியாகச் சான்றாகக் கூறலாம். அதாவது அடிமை, மன்னன் என்கிற இரண்டு பதிவுகளில் எது உண்மை என்பதைவிடவும் எது மட்டும் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது; எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதும், நம்முடைய மனமும் அறிவும் எதை ஏற்கின்றன என்பதும்தான் முக்கியம். இவ்விடத்தில்தான் சாதிய மனநிலையைக் கட்டமைப்பதில் கருத்தியலும் தேர்வும் பங்குவகிப்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்த வகையில் மொழியின் வழியாகப் படிந்து கருத்தியலாக மாறிவிடும் சாதியக் கருத்தியல் பற்றிய பதிவுகளையும் அயோத்திதாசர் விவாதித்திருக்கிறார். உண்மையில், தலித்துகள் பற்றிய இன்றைய சமூக மனப்பதிவு என்பது அவர்களின் எதார்த்தத்தைப் பார்த்து மதிப்பிடுவதைவிடவும் அவர்களின் ‘யதார்த்தம்’ என்னவாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புதான் அவர்களைப் பற்றிய வரலாறாகக் காட்டப்படுகிறது. ஒரு விஷயத்தை அரசியல்ரீதியாக மட்டுமே பார்ப்பது வெறும் பேச்சாகவும், நம் சிந்தனையை வடிவமைக்கும் பண்பாட்டுப் பார்வையில் பார்ப்பது சிந்தனையாகவும் அமைகிறது. அயோத்திதாசர் அரசியல்ரீதியாக மட்டுமின்றிப் பண்பாட்டுரீதியாகவும் பேசினார். இந்த வகையில் நினைவுகொள்ளவும் சூழலில் பொருத்திப் பார்க்கவும் அயோத்திதாசரிடம் ஏராளமான விஷயங்களுண்டு.

(மே 5 அயோத்திதாசர் மறைந்த நூற்றாண்டு நினைவுதினம். மே 20 அயாத்திதாசரின் பிறந்தநாள்)

- ஸ்டாலின் ராஜாங்கம், சமூக விமர்சகர், தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x