Last Updated : 24 Apr, 2015 09:36 AM

 

Published : 24 Apr 2015 09:36 AM
Last Updated : 24 Apr 2015 09:36 AM

அர்மீனிய இனப்படுகொலையின் நூறாண்டுகள்

15 லட்சம் அர்மீனியர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் தருணம் இது!

முதல் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பு ஆட்டோமன் பேரரசில் 20 லட்சம் அர்மீனியர்கள் இருந்தார்கள். 1922-ல் அர்மீனியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழே போய்விட்டது. இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 15 லட்சம் அர்மீனியர்கள் இறந்திருக்கிறார்கள்.

முதல் உலகப் போர் காலத்தையும் அதற்குப் பிந்தைய காலத்தையும் பற்றி டேவிட் ஃப்ராம்கின் எழுதிய ‘எ பீஸ் டு என்டு ஆல் பீஸ்’ என்ற வரலாற்று நூல் மிகவும் புகழ்பெற்றது. அதில் அவர் இப்படி எழுதியிருப்பார்: ‘எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத் காரமும் அடி உதையும்தான். கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் மலைகள், பாலைவனங்கள் வழியாக உணவு, நீர், ஒதுங்க இடம் ஏதுமற்ற நிலையில் உடனடியாக விரட்டப்பட்டனர். கடைசியில், லட்சக் கணக்கான அர்மீனியர்கள் உயிரிழந்தார்கள் அல்லது கொல்லப்பட்டனர்.’

இனப்படுகொலை என்பதற்கான ஆங்கிலச் சொல் ‘ஜெனோஸைடு’ (genocide). இந்தச் சொல்லை உருவாக்கியவர் ரஃபேல் லெம்கின் என்ற போலீஷ்-யூதப் பின்னணி கொண்ட வழக்கறிஞர். அர்மீனிய இனப்படுகொலை குறித்து அவர்தான் விசாரணை மேற்கொண்டார். ‘ஜெனோஸைடு’ என்ற சொல்லை அவர் உருவாக்கியது 1943-ல்தான். நாஜி ஜெர்மனி மற்றும் யூதர்களைக் குறித்த புத்தகத்தில் அவர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பார்.

ஆட்டோமன் அழிவின் தொடக்கம்

துருக்கியர்களைப் பொறுத்தவரை 1915-ல் நடந்தது, ஒரு காலத்தில் வல்லாதிக்கமாக இருந்த பேரரசின் அழிவின் தொடக்கமே. அர்மீனியப் படுகொலை தொடர்பாக வரலாற்றாசிரியர்கள் சொல்வதையும் இனப்படுகொலை என்ற சொல்லையும் துருக்கியர்கள் ஏற்பதில்லை. அர்மீனியர்களை அழிப்பதற்கான திட்ட மிட்ட நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அவர்களுடைய வாதம். இன்றைய துருக்கியைப் பொறுத்தவரை இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதென்பது சட்டப்படி குற்றம். துருக்கி தேசியத்தை அவமானப்படுத்தும் செயல் அது.

அர்மீனிய இனப்படுகொலைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதை, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க அர்மீனியச் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அர்மீனிய இனப்படுகொலையை பிரான்ஸ் கண்டித்ததை அடுத்து, அந்த நாட்டுடனான ராணுவத் தொடர்பைத் துண்டித்துக்கொண்டது துருக்கி. மிகவும் கோபாவேசமாக எதிர்வினையும் ஆற்றியது. 2007-ல் இதுகுறித்து ஒரு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட நிறைவேறும் கட்டத்தில் இருந்தது. அமெரிக்காவின் முக்கியமான கூட்டாளிகளில் துருக்கியும் ஒன்று என்பதாலும், இராக் போரின்போது வான்வழியாகச் சென்ற ராணுவத் தளவாடங்களில் 70% துருக்கியின் இன்சிர்லிக் ராணுவ விமானத் தளத்திலிருந்துதான் சென்றன என்பதாலும், ஜார்ஜ் புஷ் நிர்வாகம் அந்த மசோதாவை வாபஸ்பெறச் செய்தது.

அர்மீனியர்களும் துருக்கியர்களும்

ஆட்டோமன் பேரரசின் மன்னர்தான் இஸ்லாமிய சமூகத்தின் கலீபாகவும் இருந்தார். கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகத்தினர் தங்கள் மத, சமூக, சட்டபூர்வக் கட்டமைப்பைப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டார்கள். ஆனால், கூடுதல் வரி உள்ளிட்ட பாரபட்சமான நடவடிக்கைகளுக்கும் அடிக்கடி அவர்கள் ஆளாக்கப்பட்டார்கள்.

கிழக்கு அனடோலியாவில் அதிகமாகச் செறிந்திருந்த அர்மீனியர்களில் பலரும் வணிகர்களாகவும் தொழிலதிபர் களாகவும் இருந்தார்கள் என்றும், பல வகைகளில் துருக்கியர்களைவிடவும் அவர்களது வாழ்க்கை வளமாக இருந்தது என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். துருக்கியர்கள் பெரும்பாலும் சிறு விவசாயிகளாகவும், குறைந்த சம்பளம் பெறும் கீழ்நிலை ஊழியர்களாகவும் சிப்பாய்களாகவும் பணிபுரிந்தார்கள்.

20-ம் நூற்றாண்டு தொடங்கியது. ஒரு காலத்தில் பரந்து விரிந்திருந்த ஆட்டோமன் பேரரசின் எல்லைப் பகுதிகள் நொறுங்க ஆரம்பித்தன. வடக்குப் பகுதியில் இருந்த கிறிஸ்தவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டது சரிவின் தொடக்கம். 1912-1913-ல் பால்கன் போர்களில் பெரும் நிலப்பரப்பை ஆட்டோமன் பேரரசு இழந்திருந்தது. டமாஸ்கஸ் தொடங்கி உலகமெல்லாம் இருந்த அரபு தேசியவாத அறிவுஜீவிகளுக்கிடையே அந்தக் காலத்தில் இதுதான் விவாதத்துக்குரிய விஷயமாக இருந்தது.

லட்சியத் துடிப்பும் கசப்பும் கொண்டிருந்த இளம் ராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய இளம் துருக்கியர் இயக்கம் 1908-ல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்தப் பேரரசை நவீனப்படுத்துவதும் வலுப்படுத்து வதும், பேரரசை ‘துருக்கிமய’ மாக்குவதும்தான் அவர் களுடைய நோக்கங்கள். ‘மூன்று பாஷாக்கள்’ என்று அழைக்கப்படும், சர்வ அதிகாரங்களும் பொருந்திய மும்மூர்த்திகள்தான் அந்த இளைஞர்களுக்குத் தலைமை தாங்கினார்கள்.

மார்ச் 1914-ல் இளம் துருக்கியர்கள் முதல் உலகப் போரில் ஜெர்மனிக்குத் துணையாக இறங்கினார்கள். பாக்கு நகரத்தைக் கைப்பற்றும் நோக்கில் கிழக்கு நோக்கி ரஷ்யாவுக்கு எதிராகத் தங்கள் தாக்குதலைத் தொடங்கினார்கள். அது பெரும் தோல்வியில்தான் முடிந்தது. சரிகமீஷ் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆட்டோமன் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

அந்தப் பகுதியில் இருந்த அர்மீனியர்கள் ரஷ்யாவுக்கு உடந்தையாகச் செயல்பட்டார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. அர்மீனியர்களை ‘ஐந்தாம் படை’ என்றும் தேசத்துக்கு அச்சுறுத்தல் என்றும் சித்தரித்து இளம் துருக்கியர் பிரச்சாரத்தைத் தொடங்கினர். அர்மீனிய தேசியவாதிகள் சிலர் கெரில்லாப் போரில் ஈடுபட்டதும் ரஷ்யாவுடன் ஒத்துழைத்ததும் உண்மை தான். 1915-ல் வான் நகரத்தைச் சிறிது காலம் அவர்கள் கைப்பற்றியும் வைத்திருந்தார்கள்.

ஏப்ரல் 24, 1915

இந்தத் தேதியைத்தான் இனப்படுகொலை நாளாக அர்மீனியர்கள் குறித்துவைத்திருக்கிறார்கள். அந்த நாளில்தான் நூற்றுக் கணக்கான அர்மீனிய அறிவுஜீவிகள் சுற்றிவளைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, பிறகு படுகொலையும் செய்யப்பட்டார்கள். இதுதான் இனப்படுகொலையின் தொடக்கமாக அமைந்தது. இந்த இனப்படுகொலை 1917-வரை தொடர்ந்ததாகக் கருதப்படுகிறது. உண்மையில், 1915-க்கு முன்னதாக 1894, 1895, 1896, 1909 ஆகிய ஆண்டுகளிலும் அர்மீனியர் கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அதேபோல், 1920 மற்றும் 1923 ஆகிய ஆண்டுகளிலும் படுகொலை தொடர்ந்தது.

அமெரிக்காவின் மின்னிசொட்டா பல்கலைக்கழகத்தில் ‘யூத இன அழிப்பு, இனப் படுகொலை போன்றவை தொடர்பாக ஆய்வுகள் செய்யும் மையம்’ மாகாண வாரியாகவும் மாவட்டவாரியாகவும் தொகுத்த அர்மீனியர்களின் மக்கள்தொகைக் கணக்கு, ஆட்டோமன் பேரரசில் 1914-ல் 2,133,190 அர்மீனியர்கள் இருந்ததையும் 1922-ல் 3,87,800 அர்மீனியர்கள் மட்டுமே இருந்ததையும் காட்டுகிறது.

கொத்துக் கொத்தாகக் கொலை

அர்மீனியர்கள் கூட்டம் கூட்டமாகப் புதைக்கப் பட்டார்கள். படுகொலை செய்யப்படுவதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் சிரியா பாலைவனம் வழியாகச் சித்திரவதை முகாம்களுக்குக் கூட்டம் கூட்டமாகக் கொண்டுசெல்லப்பட்டனர். நடக்கச் சக்தியற்றும், வெயில் காரணமாகவும், பசியாலும் ஏராளமானோர் வழியிலேயே இறந்துவிட்டனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ விரிவாக எழுதியிருக்கிறது. 1915-ல் மட்டும் 145 கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. ‘படுகொலையை நிறுத்தும்படி துருக்கியை நோக்கி முறையீடு’ என்பது போன்ற தலைப்புகள் ஓர் உதாரணம். அர்மீனியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ‘திட்டமிட்டு நடத்தப்பட்டவை’ என்றும், ‘அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அரசால் நிகழ்த்தப்பட்டவை’ என்றும் ‘தி டைம்ஸ்’ இதழ் எழுதியது.

ஹென்றி மோர்கந்தா இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவரது நினைவுக் குறிப்புகளில் இப்படி எழுதியிருக்கிறார்: ‘அர்மீனியர்களை நாடு கடத்தும்படி துருக்கிய அதிகாரிகள் இட்ட உத்தரவு உண்மையிலேயே ஒட்டுமொத்தமாக ஒரு இனத்துக்கே விதிக்கப்பட்ட மரண தண்டனை உத்தரவுதான். அதிகாரிகளுக்கு இது நன்றாகவே தெரியும். என்னுடனான உரையாடல்களின்போது இந்த உண்மையை மறைப்பதற்கு அவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.’

1918-ல் ஆட்டோமன் பேரரசு சரணடைந்ததும் மூன்று பாஷாக்களும் ஜெர்மனிக்குத் தப்பி ஓடினார்கள். அங்கே அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், தலைமறைவாக இருந்த அர்மீனியர்கள் அந்த பாஷாக்களைப் பழிவாங்குவதற்காக ‘ஆப ரேஷன் நெமிஸிஸ்’ (பழிக்குப் பழி நடவடிக்கை) என்ற பெயரில் அமைப்பை உருவாக்கினார்கள். மார்ச் 15, 1921-ல் அந்த பாஷாக்களில் ஒருவர் பெர்லின் நகரில் பட்டப்பகலில் பலருக்கு முன்னால் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர் படுகொலைகளால் தனது மனநிலை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிபதியிடம் கொலையாளி இறைஞ்சினார். நீதிபதி ஒரு மணி நேரத்துக்கும் சற்று அதிக நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டார். இறுதியில் கொலையாளியை விடுதலை செய்தார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பு வாதம்தான் ‘ஜெனோஸைடு’சொல்லைக் கண்டுபிடித்த லெம்கினை அர்மீனிய இனப்படுகொலை விவகாரம் நோக்கி இழுத்தது.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x