Last Updated : 25 May, 2014 09:03 AM

 

Published : 25 May 2014 09:03 AM
Last Updated : 25 May 2014 09:03 AM

இலங்கைப் பிரிவினையை எதிர்க்கிறோம்!: பா.ஜ.க. வியூகத்தைச் சொல்கிறார் ஆர்.எஸ்.எஸ். சேஷாத்ரி சாரி

மோடி படை பெரியது. அதன் ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைசர்’-ன் முன்னாள் ஆசிரியர். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழர். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து…

பா.ஜ.க-வின் வெற்றியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கைப் பற்றிச் சொல்லுங்களேன்?

ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையும் அமைப்புரீதியிலான பலமும்தான் இதில் முக்கியப் பங்குவகித்தன. கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி சொல்வதில்லை. அதேபோல், பொதுநல அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., நாட்டின் நலன் காக்கும் கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டதை விட அதிகமாக எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க-வின் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் களமிறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள் என்பது தவறான செய்தி.

மக்களவைத் தேர்தலில் வீசியது, காங்கிரஸின் எதிர்ப்பு அலையா? அல்லது மோடி அலையா?

தேர்தலின் தொடக்கம் என்பது காங்கிரஸின் எதிர்ப்பு அலையாக இருந்தது. இந்த எதிர்மறை அலை, பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்ட பின் மோடி அலையாக- நேர்மறை அலையாக மாறியது. ஒருவேளை காங்கிரஸ் எதிர்ப்பு அலை மட்டும் இருந்திருந்தால் பா.ஜ.க. அல்லாத மற்ற கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் வென்றிருக்க வேண்டும் இல்லையா. பா.ஜ.க-வால் மட்டுமே காங்கிரஸைத் தோற்கடிக்க முடியும் என்பதும், மோடிதான் வேண்டும் என்பதும் வாக்காளர்களின் விருப்பமாக இருந்திருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களும் பா.ஜ.க-வுக்கு வாக்களித்ததாகவும், உ.பி-யில் மட்டும் எதிர்த்து வாக்களித்ததாகவும் கருதப்படுகிறது. இதற்கு பா.ஜ.க. என்ன சொல்கிறது?

பா.ஜ.க. ஒரு இந்துக் கட்சி, மோடி ஒரு மதவாதி என காங்கிரஸ் தவறான பிரச்சாரத்தைச் செய்தது. ஆனால், மோடி தன் பிரச்சாரத்தில் முன்னிறுத்திய, ஒவ்வொரு குடி மகனுக்கும் வளர்ச்சி என்பதை முஸ்லிம்களும் நன்றாகப் புரிந்துகொண்டனர். பா.ஜ.க-வால் தமக்கு லாபம் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டவர்களில் முஸ்லிம்களும் உண்டு. இதில், அனைத்து முஸ்லிம்களும் முழுமனதாக மோடியை ஏற்றுக்கொண்டார்கள் என சொல்ல முடியாது. அப்படி ஏற்காதவர்களில் உ.பி. முஸ்லிம்கள் சற்று அதிகம் அவ்வளவுதான்.

பா.ஜ.க. வெற்றிக்காகப் பாடுபட்ட ஆர்.எஸ்.எஸ். அதன் ஆட்சியில் பங்குகொள்ளாமல் இருக்க முடியுமா?

முடியும். ஒரு தனிமனிதன் விரும்பும் தன்மானம், கவுரவம் என்பது இந்த தேசத்துக்கும் இருக்க வேண்டும். அவற்றை ஒரு அரசால்தான் தர முடியும். அதற்காக, மக்களுக்கும் அரசுக்கும் இடையில் ஒரு பாலமாக ஆர்.எஸ்.எஸ். இருக்கும். இதற்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது அவசியமில்லை.

ஆனால், பா.ஜ.க-வின் தலைவர்களும் எம்.பி-க்களும் அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வட்டமிடுவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றனவே?

இப்படி ஆர்.எஸ்.எஸ். மீது ஈடுபாடு உள்ளவர்கள் அதன் அலுவலகம் வருவது புதிய விஷயமல்ல. தோல்வி அடைந்த போதும் அவர்கள் வந்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்குத்தானே தவிர அமைச்சரவையில் இடம்பிடிப்பதற்காக அல்ல.

மன்மோகன் அரசில் சோனியா காந்தி குடும்பம் வகித்த பங்குக்கும், மோடி அரசில் ஆர்.எஸ்.எஸ். வகிக்கவிருக்கும் பங்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

மன்மோகன் அரசு 10, ஜன்பத்தின் அரசாக இருந்தது. அதை மன்மோகன் அரசு என்று சொல்வதற்கு அத்தாட்சியாக எதுவும் இல்லை என்பதை அவரது உதவி அதிகாரியாக பணியாற்றிய பாரூ எழுத்து மூலமாகப் பதிவுசெய்துவிட்டார். ஆனால், மோடி அரசு அப்படி இருக்காது. எந்த விதமான தவறும் செய்யக்கூடிய நிலைமையில் இல்லாத மோடி அப்படித் தவறிழைத்தால் ஆர்.எஸ்.எஸ். தட்டிக்கேட்கும், சுட்டிக் காட்டும். அவருக்கு ஆலோசனை சொல்ல, பா.ஜ.க-விலேயே ஒரு அரசியல் ஆலோசனைக் குழு உள்ளது.

நடக்கவிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியா? பா.ஜ.க-வின் ஆட்சியா?

பா.ஜ.க. எண்ணுவதுபோல், அது தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கும்போதும், தே.ஜ.கூ. ஆட்சியாக இருக்க வேண்டுமென்று அது விரும்புவதையே ஆர்.எஸ்.எஸ். வரவேற்கிறது. இதில், பா.ஜ.க. நல்லாட்சிக்காகப் பத்து அடிகள் எடுத்து வைத்தால், அதனுடன் கூட்டணிக் கட்சி களும் பத்து அடிகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டின் பிரச்சினைகளை நாம் தீர்க்க முடியும்.

இது தே.ஜ.கூ. ஆட்சி எனில், மோடி பதவியேற்புக்கு சார்க் நாட்டு ஆட்சித் தலைவர்களை அழைக்க பா.ஜ.க. தனித்து முடிவெடுத்தது ஏன்?

இது பா.ஜ.க-வின் தன்னிச்சையான முடிவு அல்ல. அடுத்து, இனிவரும் நாட்களில் வெளியுறவு விவகாரங்கள் எப்படி இருக்க வேண்டும் எனவும், இந்த நாட்டின் சக்தியை எப்படி உபயோகப்படுத்த முடியும் என்பதற்கும் ஆதாரமாக விடுக்கப்பட்டதுதான் இந்த அழைப்பு. இந்த விஷயத்தை, தமிழகத்தில் ராஜபக்சேவின் வரவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு மெல்லமெல்லப் புரியவைப்போம். அவர்கள் புரிந்துகொண்டால் நாட்டுக்கு நல்லது.

ராஜபக்சேவைத் தவிர்த்திருக்க முடியாதா?

எப்படி முடியும்? சார்க் நாடுகளை அழைக்கும்போது இலங்கை அல்லது பாகிஸ்தானை மட்டும் வர வேண்டாம் என்று கூற முடியுமா? இந்தியாவுக்கு எதிரி நாடு கிடையாது என்பது எங்கள் கருத்து. அனைவரிடமும் நேசக்கரம் நீட்டவே இந்தியா விரும்புகிறது.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகளை அணுகுவதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசம் என்ன?

இந்தியா-இலங்கையின் உறவு என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகளை கொழும்பு, உண்மையாகவும் சுமுகமாகவும் தீர்க்கும் என பா.ஜ.க. கருதுகிறது. மேலும், இதற்காக அந்த அரசு முயற்சிப்பதாகவும் நம்புகிறது. இதற்கு கொழும்பு மற்றும் புதுடெல்லிக்கு, தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த நாம் கால அவகாசம் தருவது அவசியம். ஆனால், எதிர்பாராதவிதமாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், ஐ.மு.கூ. அரசு இலங்கையிலிருந்து வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் சில குழுக்களின் வலையில் விழுந்து, தவறாக வழிகாட்டப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே இடைவெளி அதிகரித்துவிட்டது.

அப்படியெனில், ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா நடுநிலைமை வகித்திருக்கக் கூடாது என்கிறீர்களா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அந்தத் தீர்மானத்தில் இந்தியா நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். அதேசமயத்தில், இலங்கைக்குச் சாதகமாக வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த நடவடிக் கைகள் மூலம், அந்தப் பிரச்சினை கொழும்பு-புதுடெல்லி-இலங்கைத் தமிழர்கள் ஆகிய தரப்புக்கு இடையில் மட்டும் இருந்திருக்கும். இப்போது, அந்தப் பிரச்சினையில் மற்ற உலக நாடுகளும் தலையிட வாய்ப்பாகிவிட்டது. இந்தத் தீர்மானத்தால், தமிழர்களின் பிரச்சினை உலகமயமாகிவிட்டது. இனி இதில், அநாவசியமாகப் பிரச்சினைகள் வருமே ஒழிய அவற்றைத் தீர்ப்பது கடினம். இதைத்தான், வடமாகாணத்தின் முதலமைச்சரான விக்னேஸ்வரனும், “இந்தப் பிரச்சினை என்பது வட மாகாணத்துக்கும், இலங்கை அரசுக்கும் உட்பட்ட தாகும் எனவும், இதில், தமிழக அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கக் கூடாது” எனவும் கூறியிருக்கிறார். இப்போது, உலக நாடுகளும் தலையிடுவதற்குக் காரணமாக ஐ.மு.கூ. அரசு இருந்துவிட்டது. இந்த அணுகுமுறைதான் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான வித்தியாசம்.

ஐ.நா. தீர்மானத்துக்கு முன்பாகத் தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர்கள் தம் தலைமையிடம் கேட்டபோது, அதன் தேசியத் தலைவர்கள் வெளிப்படையாக வந்து கருத்து சொல்லாதது ஏன்?

கருத்து கூறினார்கள். அது பரவலாகச் செய்திகளில் வரவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு காஷ்மீர் ஒரு பெரிய உதாரணம்; பலஸ்தீனமும் ஒரு நல்ல உதாரணம். இதுபோல், பல பிரச்சினைகள் இந்த உலகத்தில் உலகமயமாக்கப்பட்டு அவை, தீர்க்கப்படாமலேயே உள்ளன. எனவே, இந்தப் பிரச்சினை இலங்கைத் தமிழர், இலங்கை அரசு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே தீர்க்கப்படுவதுதான் சிறப்பாக இருக்கும். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை அவர்களின் முக்கியமான விருப்பங்களின் பேரில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நாம் இலங்கையில் பிரிவினையை எதிர்க்கிறோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம்.

இந்த விளக்கத்தைத் தேர்தலுக்கு முன்பாக அளித்திருக்கலாமே?

எங்கள் விளக்கத்தைப் பொதுமக்கள் கவனத்துக்குக் கொண்டுசெல்வதைத் தமிழகத்தின் அரசியல் சாதுர்யவான்கள் தடுத்துவிட்டனர். இது நம் அரசியல் அமைப்பின் ஒரு குறைபாடு.

சார்க் நாடுகளின் ஆட்சித் தலைவர்களுக்கான அழைப்பு மூலம் பா.ஜ.க. சொல்லும் செய்தி என்ன? இந்தியா ஒரு வல்லரசு என்கிறீர்களா? மோடி அதன் முடிசூடா சக்ரவர்த்தி என்கிறீர்களா?

இது உலகின் எந்த நாடுகளுக்கும் கிடைக்காத ஜனநாயகத் தின் வெற்றி. இதில், அதிக அளவில் வாக்களிப்பு நடைபெற்று ஒரே கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதை, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் உலகத்துக்கும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இந்த ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைக்கும் எனவும், அதுதான் நாட்டுக்கான சிறந்த வளர்ச்சி என்பதையும் உலகத்துக்கு உணர்த்த சார்க் நாடுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

இதுபோல், உலகத்தில் எங்குமே நடைபெறாதபடி ஒரு பதவியேற்பு விழாவை நடத்துவதன் பின்னணியில் இருப்பது யார்?

இதை மோடியே பல ஆண்டுகளாகச் செய்ய எண்ணி வந்தார். இது அவருடைய பெரிய மற்றும் முக்கிய முயற்சி ஆகும்.

யூ.ஆர். அனந்தமூர்த்தி பிரச்சினையில் உங்கள் கருத்து?

அனந்தமூர்த்தி, ஏதோ ஒரு அவசரகதியில் அளித்த விமர் சனம் என அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார். எனவே, அந்தப் பிரச்சினையைத் தொடராமல் அத்துடன் விட்டுவிடவே நாம் எண்ணுகிறோம். அனந்தமூர்த்திக்கு பா.ஜ.க-வின் கொள்கை களை எதிர்க்கவும், மோடியை விமர்சிக்கவும் உரிமை உள்ளது. ஆனால், விமர்சனங்களின் எல்லைகளை அவர் மதிக்க வேண்டும்.

மோடிக்கு விசா அளிக்க மறுத்த அமெரிக்கா இப்போது முன்வந்திருப்பது குறித்து உங்கள் கருத்து?

2002 அல்லது அயோத்தி விஷயங்கள் என்பவை நம் உள்நாட்டு விவகாரங்கள் ஆகும். தனிப்பட்ட சிலர் மற்றும் என்.ஜி.ஓ-க்கள் இந்த பிரச்சினைகளை அமெரிக்காவிடம் எடுத்துச்சென்றது தவறு. இதை ஏற்று அமெரிக்காவும் அப்படிச் செய்திருக்கக் கூடாது. அதை அப்போதும் கூறினோம், இப்போதும் கூறுகிறோம். இதை அவர்கள் உணர்ந்து நம்மிடம் நட்புக்கரம் நீட்டினால் அதை ஏற்க நாம் தயாராக இருக்கிறோம். அதேபோல், தேவயானி வழக்கிலும் அமெரிக்கா நடத்திய விசாரணை தவறானது . எனவே, மோடி மற்றும் தேவயானி விஷயங்களில் அமெரிக்கா செய்தது தவறு என்பதை எழுத்துபூர்வமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

பாகிஸ்தானில் உள்ள தாவூதை இந்தியா பிடிப்பது சாத்தியமா?

கண்டிப்பாக சாத்தியம், தாவூது இந்தியாவால் மட்டு மல்லாமல், பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகளாலும் தேடப்படும் குற்றவாளி. அவர், சர்வதேசத் தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கிறார். அவருக்குச் சர்வதேசத் தீவிரவாத நிதியளிப்பில் முக்கியப் பங்கு உள்ளது. தாவூதைப் பிடிக்க உலக நாடுகளின் ஒருமித்த முயற்சி தேவை.

- ஆர்.ஷபிமுன்னா, தொடர்புக்கு: shaffimunna.r@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x