Published : 27 Apr 2015 08:44 AM
Last Updated : 27 Apr 2015 08:44 AM

நாட்டு நலன் அடிப்படையில் நீதி!

வெறுப்பு, பகைமை கலந்த இரு கட்சி அரசியல், மாலத்தீவின் வளர்ச்சி, பாதுகாப்பு, அமைதி மற்றும் வளத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிடும் என்பது சமீபத்திய நிகழ்வுகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ‘நீதித் துறையில் அதிபர் தலையிட சட்டம் அனுமதிப்பதில்லை’ என்று அதிபர் அப்துல்லா யாமீன் கூறுகிறார். அவர் குறிப்பிடுவதுபோல், நீதித் துறையில் ஆட்சியாளர்கள் தலையிடாமல் இருப்பது என்பது போன்ற கொள்கைகளின் மூலம்தான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். நீதித் துறையும் அரசும் நிர்வாகமும் பரஸ்பரம் பிறரது செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். ஆனால், இந்தக் கொள்கை மீறப்படுவதுதான் இன்று மாலத்தீவின் மிகப் பெரிய பிரச்சினை.

அதேசமயம், மாலத்தீவு அரசியல் சட்டம் இன்னும் அடிப்படை நிலையிலேயே இருப்பதை மறுக்க முடியாது. அதன் உண்மைத் தன்மை மற்றும் புரிதல் ஆகியவை இன்னும் விரிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனினும், மக்கள் மீதான நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் மற்றும் நாட்டின் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகிய விஷயங்களைக் கையாளும்போது, தற்போது கிடைக்கும் தெரிவு களையே நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நஷீத் மீதான வழக்கும் மேலே சொன்ன வரையறைகளுக்குள் வரும். அவர் முன்னாள் அதிபர் மட்டுமல்ல, ஆயுதப் படையின் தலைமைத் தளபதியாகப் பணி புரிந்தவர். கணிசமான மக்களின் ஆதரவுடன் எதிர்க் கட்சித் தலைவராகப் பணியாற்றுபவர். இந்தக் காரணங் களுக்காக நீதி விஷயத்தில் அவருக்குச் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்பதல்ல; அதே சமயம் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்விஷயத்தைக் கையாள வேண்டும். தலைமை நீதிபதி அப்துல்லா முகமது மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவு.செய்த ராணுவம், சட்டவிரோதமான முறையில் ராணுவ நடைமுறைகளைப் பயன்படுத்திக் கைதுசெய்தது.

முன்னாள் அதிபர் நஷீத் குற்றமற்றவரா இல்லையா என்பது அல்ல விஷயம். இந்தச் சட்ட நடவடிக்கைகளின் விளைவுகள் மாலத்தீவின் எதிர்காலத்தில் எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் முக்கியமானது. நஷீத் மீதான வழக்கின் தீர்ப்பு மக்களால் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நியாயமான வகையிலும் இருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று. நீதித் துறை அமைப்புகளில் அதிபர் தலையிட முடியாது; அப்படிச் செய்யவும் கூடாது என்றாலும், நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில் நீதித் துறையின் அறிவுரை மற்றும் ஆலோசனையை அவர் நாட வேண்டும். நீதித் துறை, நிர்வாகம் மற்றும் அரசு ஆகிய மூன்று அமைப்புகளும் தங்களுக்குள் தலையிட முடியாது என்றாலும், தேசிய அளவிலான நெருக்கடிகள், பெரிய அளவிலான பொது விஷயங்களில் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுவதை அனுமதிப்பதுடன் அதை வலியுறுத்தவும் செய்கிறது மாலத்தீவின் அரசியல் சட்டம். மஜ்லீஸ் (மாலத்தீவு நாடாளுமன்றம்) உருவாக்கியிருக்கும் ஆணையங்கள் மற்றும் அமைப்புகள் இந்த விஷயங்களை மேற்பார்வை செய்யவும் அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது.

இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசித்து, உயர் மட்ட அளவிலான நீதி விசாரணை அமைப்பின் (Grand Jury Trial) மூலம் இந்த வழக்கு விசாரணையை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு மஜ்லி உறுப்பினர்களிடம் அதிபர் யாமீன் கேட்டுக்கொள்வார் என்று நம்பலாம். அந்த விசாரணை அமைப்பின் முடிவுகள் மஜ்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் அளிக்கப்படும். இந்த முறை நீண்டதாகவும், அலுப்பூட்டுவதாகவும் இருக்கலாம். ஆனால், இதன் முடிவுகள் நம்பகத்தன்மை யுடன் இருக்கும், முடிவு எப்படியானதாக இருந்தாலும்.

இதில் ஈடுபடும் அமைப்புகள், நாட்டின் நலன் முக்கியம் என்ற எண்ணத்தில் செயல்படுமானால், இதன் விளைவுகளும் பலன் தருவதாகவே இருக்கும்.

- தமிழில்: வெ. சந்திரமோகன்.

மாலத்தீவு இணைய இதழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x