Last Updated : 20 Apr, 2015 08:51 AM

 

Published : 20 Apr 2015 08:51 AM
Last Updated : 20 Apr 2015 08:51 AM

கைகளின் பாலே நடனம்

காது கேளாதோர் நலனில் பாகிஸ்தான் காட்டும் அக்கறை எல்லோருக்கும் ஒரு பாடம்!

பாகிஸ்தானில் உருதுதான் தேசிய மொழி. சிந்தி, பஞ்சாபி, பஷ்தூ, பலூச்சி மாநில மொழிகள். இவை தவிர, 300 வட்டாரச் சிறுமொழிகள் உள்ளன. பாகிஸ்தானின் இந்தக் கலாச்சாரப் பன்மை, அந்த நாட்டின் மொழிக் குடும்பங்களை இணைக்கும் கவினுறு மொழிக் கம்பளமாக ஜொலிக்கிறது. அதன் வட்டாரச் சிறு மொழிகள் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக உருவாகியுள்ளன. உருது மொழி இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து 12-வது நூற்றாண்டில் பரவி, தென்மேற்கு இந்தியாவில் புழங்கத் தொடங்கியது. பிரிட்டிஷார் ஆட்சிக் கால சீதனமாக 1947-ம் ஆண்டு பாகிஸ்தானின் அரசு அலுவல் மொழியானது ஆங்கிலம்.

காது கேளாதோருக்குக் கல்வி வழங்கும் சிறிய குழுவைச் சேர்ந்த கல்வியாளர்கள் இன்னொரு மொழியை பாகிஸ்தானின் மொழிக் குடும்பத்தில் சேர்க்க விரும்புகிறார்கள். இதை யாரும் பேச முடியாது. இதை ‘பாகிஸ்தானின் சைகை மொழி’ என்று அழைக்கிறார்கள். இம் மொழியை நாடு முழுக்கப் பரப்புவதில் அவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

சமூகப் புறக்கணிப்பு

காது கேளாத சிறார்களுக்கான பள்ளிக்கூடங்கள் 1980-களில்தான் பாகிஸ்தானில் தொடங்கின. அவற்றில் மிகப் பெரியது கராச்சி நகரில் உள்ள அப்சா பள்ளி மற்றும் கல்லூரியாகும். அங்குதான் பாகிஸ்தான் சைகை மொழியை ஆராய்ச்சி மூலம் மேம்படுத்திப் பயன்படுத்துகின்றனர். காது கேளாதோருக்கான பாகிஸ்தான் சங்கம் பல்வேறு நகரங்களிலும் சிறு நகரங்களிலும் 1987 முதல் தொடங்கப்பட்டது. காது கேளாதோர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது மட்டுமல்லாமல், பொது இடங்களில் அவர்களை ஒதுக்கியும், வரக் கூடாது என்று தடுத்தும் துன்புறுத்திவந்தார்கள். உளவியல்ரீதியாகப் பாதிக்கப் பட்டவர்கள் என்று அவர்களைக் கருதியதுடன், சாதாரண மாக வாழும் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் மீது முத்திரை குத்தியிருந்தனர்.

ரிச்சர்ட் கியரி

அப்போதுதான் ரிச்சர்ட் கியரி ஹார்விட்ஸ் என்ற அமெரிக்கர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அவருடைய மனைவி ஹைடியுடன் இந்தியாவிலிருந்து பாகிஸ் தானுக்குக் குடிபெயர்ந்தார். அவர்களுடைய மகனுக்குக் காது கேட்காது. அவனுக்குக் கல்வி அளிப்பதற்காக பிலிப்பைன்ஸிலும் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் பலருடன் சேர்ந்து அவர்கள் பணிபுரிந்தார்கள். 1984-ல் கராச்சிக்கு வந்த அவர்கள் தங்களுடைய இந்திய விசா காலாவதியாகிவிட்டது என்பதை உணர்ந்தார்கள். எனவே, கராச்சியிலேயே தங்கி, ‘காது கேளாதோரை நோக்கிச் செல்லுதல்’ என்ற திட்டத்தைத் தொடங்கினர். கராச்சியின் சேரிப் பகுதியில் சிறிய வகுப்பறையில் 15 மாணவர்களுடன் இது இயக்கமாகத் தொடங்கியது. அவர்களுடைய மகன் மைக்கேலும் அவர்களில் ஒருவர். அதிலிருந்து பிறந்ததுதான் குடும்பக் கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பு. அதில் இப்போது கராச்சி, ஹைதராபாத், ரஷீதாபாத், சுக்கூர், நவாப்ஷா (சிந்து), லாகூர் (பஞ்சாப்) ஆகிய நகரங்கள் இணைந்துள்ளன. காது கேளாதோரை நோக்கிச் செல்லும் இந்தப் பள்ளிகளில் இப்போது சுமார் 1,000 மாணவர்கள் பயில்கின்றனர். அம்மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் தொழில்நுட்பப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. காது கேளாத மாணவர்களின் பெற்றோர்களுக்கும், இத்தகைய மாணவர்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இந்த எண்ணிக்கையும் இந்தப் பயிற்சிகளும் போதாதுதான். பாகிஸ்தானில் மட்டும் காது கேளாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 12.5 லட்சம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 1,000 என்பது மிகச் சிறிய பகுதிதான். ஆனால், பாகிஸ்தானின் கல்விப்புல நிலையைப் பார்க்கும்போது இந்த 1,000 என்ற தொகையே கணிசமான வெற்றி என்றுதான் கூற வேண்டும். இந்தப் பள்ளிகள் லாப நோக்கில் நடத்தப்படுபவை அல்ல. இதன் பாடத்திட்டங்கள் இதன் ஆசிரியர்கள், பெற்றோர்களால் உருவாக்கப்பட்டவை. தரமானவை. பாகிஸ்தானில் உள்ள தொழில் நிறுவனங் களும், வெளிநாட்டு அற நிறுவனங்களும் இப்போது நிதி உதவி செய்யத் தொடங்கியுள்ளன. ரஷீதாபாத் நகரில், ‘காது கேளாதோர் ஆய்வுப் பள்ளி’ நிறுவ ‘யு.எஸ்.எய்ட்’ என்ற அமைப்பு சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் தந்துள்ளது.

அன்றாடப் புரட்சி

இந்த ஆய்வுப் பள்ளிகளில் உணர்ச்சிகரமான, சமூகப் புரட்சி அன்றாடம் நடைபெறுகிறது. இந்த மாணவர்களைச் ‘சிறப்பானவர்களாக’க் கருதாமல், ‘சாதாரணமானவர்களாகவே’ கருதி நடத்துகின்றனர். மற்ற பள்ளிகளைப் போல அல்லாமல், இந்தப் பள்ளியின் வகுப்பறைகளில் பாடங்கள் முழு அமைதியுடன் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மாணவர்களும் ஆசிரியர்களும் (ஆசிரியர்களில் பாதிப் பேருக்கும் காது கேட்கும் திறன் குறைவு) சைகை மூலம்தான் பேசிக் கொள்கின்றனர். பாலே நடனக்காரர்களின் கால்களைப் போல இவர்களுடைய கைகளும் உதடுகளும் முக பாவனைகளும் நொடிக்குள் 100 மாற்றங்களைக் காட்டுவது பார்க்கப் பரவசமாக இருக்கும்.

இவர்களுடைய வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பாகிஸ்தான் சைகை மொழி. இரண்டாவது, டிஜிடல் ஊடகத்தைப் பயன்படுத்துவது.

1980-க்கு முன்னால் இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்குமே பொதுவான சைகை மொழி இருந்தது. உருது மொழியில் உள்ள சில வார்த்தைகளும் கருத்தாக்கங்களும், பாகிஸ்தானின் வட்டார மொழி வார்த்தைகளும் அந்தப் பொதுச் சைகை மொழியில் இல்லை. எனவேதான், பாகிஸ்தானுக்கென்று தனிச் சைகை மொழியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 1990-களில் அப்சா உருவாக்கிய புத்தகங்களும் வழிகாட்டிக் குறிப்புகளும் இப்போதைய காலத்துக்கு ஏற்றதாக இல்லை. அதுமட்டுமின்றி அச்சிலும் இல்லை. எனவே, காது கேளாதோருக்குக் கற்றுத்தரும் பஞ்சாப், சிந்து மாநில ஆசிரியர்களுடனும், அப்சா பள்ளித் தலைமை ஆசிரியர் ரூபினா தய்யாபுடனும் இணைந்து 5,000 வார்த்தைகள், சொற்றொடர்கள் இணைந்த பேரகராதியை ‘குடும்பக் கல்வி அறக்கட்டளை’ தயாரித்துள்ளது. அதன் இணையதளத்தில் அன்றாடம் புதிய விடியோ பதிவு இடம்பெறுகிறது. மாணவர்கள் அனைவரும் புதிய சொற்றொடருக்குப் புதிய வார்த்தையை ஆங்கிலம், உருது ஆகிய இரு மொழிகளிலும் எழுதுகின்றனர்.

தொழில்நுட்பத்தை மையமாகக் கொள்வதே இந்தத் திட்டத்தின் வழிமுறை. ஆன்-லைன் வசதியுடன் ஒரு புத்தகம், ஒரு சி.டி., போன் ஆப். கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்தும் வகுப்பறைகளில் இடம்பெறுகின்றன. கூடுதல் தகவல்களுக்கு இணையதளங்களையும் தேடிப் பார்க்கு மாறு ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

தொழில்நுட்பமும் புது மொழியும்

உருது, ஆங்கிலம், சைகை மொழி ஆகிய மூன்றின் மீது இந்த மொழிக் கருவிகள் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. தொடர்ந்து வகுப்புகளில் பங்கேற்க முடியாவிட்டாலும் சைகை மொழியைக் குழந்தைகளின் உறவினர்களும் குடும்ப நண்பர்களும்கூட கற்றுக்கொள்ள இவை உதவுகின்றன. ‘சொல்லாதீர்கள், சைகையில் காட்டுங்கள்’என்று பாகிஸ்தானிய ஊடகங் களில் பிரபலங்களைக் கொண்டு செய்யப்படும் பிரச் சாரங்கள், காது கேளாதோர் மீது சமூகத்துக்கு இருக்கும் தவறான எண்ணங்களைப் போக்கும் முயற்சிக்கு உதவுகிறது.

இந்த அமைப்பு தயாரித்த அகராதி, டி.வி.டி-க்கள் போன்றவை நாடு முழுக்க 10,000-த்துக்கும் மேல் விநியோகிக்கப்பட்டுள்ளன. சின்னஞ்சிறிய கிராமங் களுக்கும் இத்தகவல்களும் பாடக் கருவிகளும் போய்ச் சேர, நாட்டின் 25 நகரங்களுக்குக் ‘காது கேளாத தலைவர்கள்’ 25 பேரை அமைப்பு அனுப்பிவைக்கும். 18,000 பாகிஸ்தானிய சைகை மொழிப் புத்தகங்களும் 7,000 டி.வி.டி-க்களும் 1,50,000 பேரைச் சென்றடையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

“பாகிஸ்தானியச் சமுதாயத்தில், ஏராளமான மொழிகளும் சமூகங்களும் தங்களுக்குரிய இடத்துக் காகப் போட்டி போடுகின்றன. இந்த நிலையில், ஒரு சமூகத்துக்கு அதன் பிரத்தியேக மொழியைக் கொடுப்பது எத்தகைய சிறப்பு வாய்ந்தது? ஒரு மொழியை இழந்தால் ஒரு கலாச்சாரத்தையே இழக்கிறோம்” என்கிறார் அவாசென். புதிய மொழியைப் பெறுவது புதிய கலாச்சாரத்தைப் பெறுவதாகும். பல்வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்டுள்ள பாகிஸ்தானுக்குப் புதிய மொழியால் மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில் சுருக்கமாக: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x