Published : 22 Apr 2015 08:20 AM
Last Updated : 22 Apr 2015 08:20 AM

சிவப்புப் பிராந்தியத்தில் நடப்பது என்ன?

முதலில் காங்கரில் நடந்த தாக்குதலில் ஒரு ஜவானின் உயிர் போனது. அடுத்த சில மணி நேரங்களில் தாந்தேவாடாவில் நடத்தப்பட்ட நிலக்கண்ணிவெடித் தாக்குதலில், வாகனம் சிதறி நான்கு போலீஸார். அடுத்து, சுக்மாவில் நடந்த இரு தரப்புக்கும் இடையேயான மோதலில், சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ஏழு பேர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் மாவோயிஸ்ட்டுகளால் இதுவரை 16 போலீஸார் இறந்துள்ளனர்.

மாவோயிஸ்ட்டுகளின் மோதல் என்ற உள்நாட்டுக் கலகம் பல ஆண்டுகளாக இந்தியாவில் தொடர்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதத்தால் இறப்பவர்களைவிட, மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல்களால் அதிகம் பேர் இறந்துள்ளனர். மக்கள் யுத்தக் குழு, மாவோயிச கம்யூனிச மையம் என்ற இரு அமைப்புகளும் 2004-ல் ஒன்றாக இணைந்த பிறகு பிறந்ததுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்). கட்சியின் வளர்ச்சி ஒரே சீராக இல்லை. சில ஆண்டுகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இயக்கமாகவும் சில ஆண்டுகளில் மக்கள் அஞ்சி விலகும் அமைப்பாகவும் இருந்திருக்கிறது. இப்போது இந்த இயக்கத்தின் செல்வாக்கு கரைந்துகொண்டிருக்கிறது. ஆனால், பாதுகாப்புப் படையினரின் பலவீனம் காரணமாக, அதன் திடீர் தாக்குதல்கள் மீண்டும் செய்திகளில் அதைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. கடந்த ஆண்டு இதே காலத்தில் (ஜனவரி முதல் மார்ச் வரை) 280 தாக்குதல் சம்பவங்கள்தான் நிகழ்ந்தன. இந்த ஆண்டு இதுவரையில் 320 சம்பவங்கள் நடந்துள்ளன. 2011-ல் படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிரச்சினை, இப்போது கை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது.

காவல், பாதுகாப்பு அமைப்புகளின் பலவீனங்கள்

மாவோயிஸ்ட்டுகள் விவகாரத்தை அரசியல் சார்ந்து அணுகுவது வேறு. பாதுகாப்புப் படைகளின் பலவீனமே பல நேரங்களில் அவர்களுடைய தாக்குதல்களுக்குப் பெரும் இழப்பை உருவாக்கித் தந்துவிடுகின்றன. மொத்தம் 6 மாநிலங்களில் 23 மாவட்டங்களில்தான் மாவோயிஸ்ட்டுகளின் 80% மோதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் 6 மாவட்டங்கள் சத்தீஸ்கரில் உள்ளன. அவை பீஜப்பூர், பஸ்தார், தாந்தேவாடா, காங்கர், கொண்டாகாவோன், நாராயண்பூர், சுக்மா. “மாநிலக் காவல் துறைத் தலைமையின் கையாலாகாத்தனத்தால்தான் மாவோயிஸ்ட்டுகளை இன்னமும் ஒடுக்க முடியாமல் இருக்கிறது” என்கிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை இயக்குநர் பிரகாஷ் சிங்.

ரமண் சிங்கின் கடிதம்

கடந்த ஆண்டு மத்தியில் பாஜக அரசு ஏற்பட்டவுடன் சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமண் சிங், தங்களுடைய மாநிலத்துக்கு மேலும் 26 மத்தியப் படைப்பிரிவுகளை அனுப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்குக் கடிதம் எழுதினார். ஏற்கெனவே 50 படைப்பிரிவுகளை மத்திய அரசு அனுப்பிவைத்திருக்கிறது. “ஆனால், கூடுதல் படைகளைக் கொண்டு எதையும் செய்துவிட முடியாது; உள்ளூர் போலீஸார் முன் முயற்சி எடுக்காமல், இன்னும் 100 பட்டாலியன்களை அனுப்பிவைத்தால்கூட மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க முடியாது. வெளியிலிருந்து செல்லும் படைப்பிரிவினரால் மாநில போலீஸாருக்கு உதவி யாகத்தான் செல்ல முடியும்” என்கிறார் அவர் .

பிளவுகளே பலவீனம்

சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் போலீஸார் இறந்தவுடனேயே காவல் துறைத் தலைவர் எஸ்.ஆர். கல்லூரி ஒரு கருத்தைப் பதிவுசெய்தார். “நான் இல்லாதபோது இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கக் கூடாது, அதுவும் அந்த மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளருக்குக்கூடத் தெரிவிக்காமல் செய்திருக்கக் கூடாது, துணைக்கு இன்னொரு படைப்பிரிவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளாமல் சென்றிருக்கக் கூடாது.”

சிறப்பு அதிரடிப்படையின் தலைவரும் மாநிலக் காவல் துறைத் துணைத் தலைவருமான ஆர்.கே. விஜ் அந்த நடவடிக்கையைத் தங்களுடைய வீரர்களின் மாபெரும் தீரமான தாக்குதல் என்று வர்ணித்தார். அந்த மோதலின்போது இறந்த போலீஸாரின் சடலங்களைக்கூட அவர்களால் அப்போது மீ்ட்டுவர முடியவில்லை. சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குப் பிறகே கூடுதல் படையுடன் சென்று சடலங்களை எடுத்துவர முடிந்தது.

இப்படி தோல்விகளுக்கு ஒருவர் மற்றவர் மீது பழி போடுவது இது முதல் முறையல்ல. பல மூத்த காவல் துறை அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதுகூடக் கிடையாது. அந்தத் துறையே பல்வேறு குழுக்களாகத்தான் பிரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. “நான் காவல் துறைத் தலைவராக இருந்த காலத்தில்கூட அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து செயல்படுவார்கள். ஆனாலும், அப்போதெல்லாம் ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் ஒன்றாக இணைந்துவிடுவோம்” என்கிறார் சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல் துறைத் தலைவராக (டி.ஜி.பி.) பதவி வகித்த விஸ்வரஞ்சன். அரசியல் தலையீடுகள் காரணமாகத்தான் காவல் துறை இப்படி இருக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார். காவல் துறையின் நிர்வாகத்தில் நேர்மைக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதற்குக் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவமே சாட்சி. நக்சல்களின் நடமாட்டங்களை ஒடுக்குவதில் சிறந்தவரும் நேர்மையாளருமான கிரிதாரி நாயக், காவல் துறைத் தலைவராக நியமிக்கப்படவில்லை. மாநிலக் காவல் துறைக்குள்ளேயே இருக்கும் கோஷ்டிகள் போதாதென்று, மாநிலக் காவல் துறைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயும் உறவு சுமுகமாக இல்லை. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராகச் செயல்படும் போலீஸ் படை மூன்று பிரிவுகளாக இருந்தாலும், மூன்றுக்கும் சேர்த்து ஒருவர்தான் அதிகாரியாக இருக்கிறார் என்பது பெரிய பின்னடைவாகிவிட்டது.

சுக்மாவில் சிறப்பு அதிரடிப்படை திடீரென ஒரு நாள் தானாகவே சென்று மாவோயிஸ்ட்டுகளை எதிர்கொண்டது. அதன் மூத்த அதிகாரிகளுக்குக்கூடத் தகவல் தெரிவிக்கப்பட வில்லை. யாருடைய உத்தரவின்பேரில் இந்தப் படை சென்றது என்றுகூட மாநிலத் தலைநகரில் யாருக்கும் தெரியவில்லை. தாந்தேவாடா சம்பவத்தில் வெறும் 12 போலீஸார், துணைக்கு எந்தப் படையையும் உடன் அழைத்துச் செல்லாமல், இதர போலீஸ் படைப்பிரிவுகளுக்கும் தகவல் தெரிவிக்காமல், சாலைகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளனவா, தீவிரவாதிகள் மறைந்துள்ளனரா என்பதைக் கண்டறியும் சாலைத் திறப்புப் படைப்பிரிவும் முன் செல்லாமல், தாங்களாகவே சென்று தீவிரவாதிகள் விரித்த வலையில் சிக்கிக்கொண்டனர்.

எது உண்மை, எது பொய்?

கடந்த சில ஆண்டுகளில் மாநில போலீஸாரும் மத்தியப் படைகளும் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சரண் அடைந்துவிட்டதாக அரசு தெரிவிக்கிறது. பஸ்தார் கிராமவாசிகளை விசாரித்தாலோ, பலரும் “எங்களைக் கட்டாயப்படுத்தி மாவோயிஸ்ட்டுகள் என்று ஒப்புக்கொள்ள வைத்து, சரண் அடையும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தனர்” என்கின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளெல்லாம் காவல் அமைப்புகளுக்கு அழகல்ல. முதலில், காவல் - பாதுகாப்பு அமைப்புகள் தங்களுக்குள் கூட்டுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்புறம் வனத்துக்குள் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். பலங்களையே பலவீனமாக்கிக்கொள்பவர்களால் தாக்குதல்களை வெற்றியாக்க முடியாது!

©‘தி இந்து’ (ஆங்கிலம்), |தமிழில் சுருக்கமாக: சாரி|

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x