Last Updated : 09 Mar, 2015 09:12 AM

 

Published : 09 Mar 2015 09:12 AM
Last Updated : 09 Mar 2015 09:12 AM

தடுப்புச் சுவரால் கிடைக்கப்போகும் பயன் என்ன?

சோமாலியா எல்லைப் பகுதியில், தடுப்புச் சுவர் கட்டும் கென்ய அரசின் முடிவைப் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது அந்த முடிவு சரிதான் என்று தோன்றியது. போரால் நிலை குலைந்திருக்கும் சோமாலியாவிலிருந்து கென்யாவுக்குச் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுப்பதற்கான முயற்சி என்பதால், இது சரியான தீர்வாக இருக்கலாம் என்ற எண்ணம் முதலில் இருந்தது. லாமு மாகாண கவர்னர் ஐஸா டிமாமி இந்த முடிவுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தச் சுவர், சட்டவிரோதக் குடியேறிகள் மட்டுமல்லாமல், சோமாலியாவிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளும் கென்யாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கும் என்பதால் இதை வரவேற்கத் தோன்றியது.

ஆனால், சற்று ஆழமாகச் சிந்தித்தால், நீண்டகால நிலவரத்தைக் கருத்தில்கொள்ளும்போது, இது அத்தனை சரியான முடிவாகத் தெரியவில்லை. மேம்பட்ட வாழ்க்கைக்காக மேற்கு ஜெர்மனிக்கு மக்கள் அதிக அளவு செல்லத் தொடங்கியதைக் கண்ட கிழக்கு ஜெர்மனி, இரண்டு நாடுகளுக்கும் இடையில் கம்பி வலை மற்றும் கான்க்ரீட் தடுப்புச் சுவரை எழுப்பியது. 1961 ஆகஸ்ட் 13-ல் இந்தத் தடுப்புச் சுவரைக் கட்டத் தொடங்கியபோது, ‘சோஷலிஸ நாடான கிழக்கு ஜெர்மனிக்குள் ‘பாசிஸ்ட்டுகள்’ நுழைவதைத் தடுக்கவே இந்தச் சுவர்’ என்று கிழக்கு ஜெர்மனி கூறியது. எனினும், கிழக்கு ஜெர்மனி எதிர்பார்த்ததுபோல், இரு நாடுகளிலிருந்தும் பரஸ்பரம் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண் ணிக்கை குறைந்துவிடவில்லை.

அதன் பின்னர், அந்தத் தற்காலிகச் சுவருக்குப் பதில், 12 அடி உயரமும் 4 அடி தடிமனும் கொண்ட பிரம்மாண்டமான சுவரை எழுப்பியது கிழக்கு ஜெர்மனி. 12 தடுப்புக் காவல் மையங்களுடன் அமைக்கப்பட்ட அந்தச் சுவரில் ஏறிச் செல்வது இயலாத காரியமாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள், மோப்ப நாய்கள், இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் காவல்படையினரையும் அந்தத் தடுப்புச் சுவருக்குக் காவலாக நிறுத்தியது. சுவரில் ஏற முயல்பவர்களைச் சுட்டுத்தள்ளவும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இத்தனை ஏற்பாடுகளுக்குப் பின்னரும் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்பவர்களை முழுமையாகத் தடுத்துவிட முடியவில்லை. 1989-ல் இந்தச் சுவர் தகர்க்கப்பட்டது வரையிலான கால கட்டத்தில், கிழக்கு ஜெர் மனியிலிருந்து 5,000-க்கும் மேற்பட்டவர்கள், இந்தச் சுவருக்கு அருகில் இருந்த கட்டிடங்களின் ஜன்னல்கள் வழியாகவும், கம்பி வலைகளில் ஏறிக் குதித்தும், ஏன் பறக்கும் பலூன் மூலமாகவும்கூட, மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார்கள். கிழக்கு ஜெர்மனி அரசின் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மிஞ்சும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு கென்யா அரசு பெருமளவிலான நிதியைச் செலவிட முடியுமா என்பது சந்தேகம்தான். அப்ப டியான சூழ்நிலையில், சோமாலி யாவுக்கும் கென்யாவுக்கும் இடை யில் கட்டப்படும் இந்த ‘பெர்லின் சுவர்’ எப்படி வெற்றிகரமாக இருக்கும் எனும் கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

சட்டவிரோத ஊடுருவல் பிரச்சினைக்குத் தீர்க்கமான முடிவை எட்டாதவரை, இந்தச் சுவர் ஒரு தற்காலிகமான நடவடிக்கையாகத்தான் இருக்க முடியும். 70-களில் இடி அமீனின் சர்வாதிகார ஆட்சியில் உகாண்டா சின்னாபின்னமானபோது, அந்நாட்டிலிருந்து பலர் கென்யாவுக்குத் தப்பிவந்தனர். அடைக்கலமாக வந்த உகாண்டா நாட்டினரில் நல்ல கல்விப் பின்புலம் கொண்ட பலர், கென்யாவில் நல்ல வேலையிலும் அமர்ந்தனர். தெற்கு சூடான் கதையும் இதேபோன்றதுதான். வடக்கு சூடானுடனான போரின்போது கென்யாவுக்குத் தப்பி வந்த தெற்கு சூடான்காரர்களில் பலருக்கு நமது நகரங்களில் நல்ல வேலை கிடைத்தது. இந்த இரண்டு நாடுகள் தொடர்பான விஷயத்திலும், எல்லையைச் சுற்றி தடுப்புச் சுவர்கள் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு கென்யா வரவில்லை. மாறாக, அந்த இரண்டு நாடுகளிலும் அமைதியும், ஒழுங்கும் ஏற்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத்தான் கென்யா எடுத்தது.

பின்னாளில் உகாண்டா அதிபராகப் பதவியேற்ற யொவேரி முசெவெனியின் படை களும், தான்சானியா அதிபர் ஜூலியஸ் நைரேரேவின் படைகளும் ஒன்றி ணைந்து இடி அமீனைத் துரத்தியடித்த பின்னர், அந்நாட்டைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங் கப்பட்டன. கென்யாவில் இருந்த உகாண்டா மக்கள் உடனடியாகத் தங் கள் நாட்டுக்குத் திரும்பி தங்கள் நாட்டைச் சீரமைக் கும் நடவடிக்கையில் பங்கெடுத்தனர்.

கென்யாவில் வேலை தேடி அலையும் நிலையில் உகாண்டா நாட்டினர் தற்போது இல்லை. மாறாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வணிகம் போன்ற விஷயங்களுக்காக நம் நாட்டினர்தான், உகாண்டாவுக்குப் படையெடுக்கின்றனர். அதேபோல், தெற்கு சூடான் சுதந்திரமடைந்த பின்னர், அந்நாட்டு மக்கள் தாங்களாகவே தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர்.

எனவே, சோமாலியா பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு (எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்குப் பதில்) ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை கென்ய அரசு எடுக்க வேண்டும் என்பதுதான் பலரது விருப்பம். உண்மையில், வேற்றிடத்தில் அழையா விருந்தாளியாக இருக்க நேரும்போது, மனிதர்கள் மனதில் அமைதி ஏற்படுவ தில்லை. எனவே, சோமாலியாவில் அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுதான் கென்யாவின் முடிவாக இருக்க வேண்டும். ஏனெனில், சோமாலியாவின் அமைதியில்தான் கென்யாவுக்கான அமைதியும் அடங்கியிருக்கிறது.

- தமிழில்: வெ. சந்திரமோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x