Published : 19 Mar 2015 09:31 AM
Last Updated : 19 Mar 2015 09:31 AM

பெண்களின் கண்ணியத்தைவிட ஆட்சிதான் பெரிதா?

மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தின் ராணாகட் என்ற இடத்தில் ‘ஜீசஸ் - மேரி கான்வென்ட்’ பள்ளியில் வயது முதிர்ந்த கன்னியாஸ்திரியைக் கும்பலொன்று தாக்கிப் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம், உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப் போலவே, அந்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா நடந்துகொள்ளும் விதமும் இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

எல்லா மாநிலங்களிலும் பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன. நாடு முழுக்க அவற்றின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. ஆனால், பாலியல் வன்முறைச் சம்பவங்களை எதிர்க் கட்சிகளின் சதி என்று குற்றம்சாட்டும் அளவுக்கு எந்த மாநில முதல்வரும் போனதில்லை. ஆனால், மம்தாவோ ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக எதிர்க் கட்சிகளின் சதி என்ற மந்திரத்தையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

2013-ம் ஆண்டில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் மேற்கு வங்கம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் இருப்பதாக தேசியக் குற்றப்பதிவேடு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் மேற்கு வங்கத்தை மட்டும் நாம் குற்றம்சாட்டிவிடவும் முடியாது. நம்முடைய சமூகத்தில் சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்வோருக்கு எந்த அச்சமும் இல்லை என்பதே தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது. டெல்லியில் நடந்த ‘நிர்பயா’சம்பவம் நாடு முழுக்க எதிர்ப்பு அலைகளை எழுப்பியிருப்பதால் ஒவ்வொரு சம்பவமும் பதைபதைப்புடன் பார்க்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற எந்தப் பதைபதைப்பும் மம்தாவுக்கு இல்லாததுதான் ஆச்சரியம்.

2012-ல் கொல்கத்தா நகரின் பார்க் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடந்த பாலியல் வல்லுறவுச் சம்பவம்குறித்த செய்தி வெளியான உடனேயே அதை அரசியல் சதியாகச் சித்தரித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் முதல்வர் மம்தா பானர்ஜி. மம்தாவின் கட்சித் தோழர்கள் அந்தப் புகாரைச் சர்வசாதாரணமாக நிராகரித்ததுடன், அந்தப் பெண்ணின் நடத்தையையே கேள்விக்குள்ளாக்கிக் களங்கப்படுத்தினார்கள். அது ஒரு கும்பலால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறவுதான் என்று நிரூபித்த காவல்துறை அதிகாரியைக்கூட அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றினார்கள்.

சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆன பிறகும் அந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி இன்னமும் கைது செய்யப்படாமல் இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று வரை மம்தா இந்த விவகாரத்தில் சிறு வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை என்பது ஆட்சியாளர்களின் மனநிலை எந்த அளவுக்கு இறுகிப்போயிருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இது போன்ற சம்பவங்களை அரசியல் சதி என்றும் மாற்றுக் கட்சிகளே அதற்குக் காரணம் என்றும் வாய்க்கு வந்தபடி கருத்து தெரிவிப்பதும் அறிக்கை விடுவதும் உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடவும் காவல்துறையினர் தவறான திசையில் விசாரணையை நடத்தவும்தான் வழிசெய்துவிடும்.

ஒரு பெண்ணின் உரிமையையும் கண்ணியத்தையும்விட தனது ஆட்சிதான் பெரியது என்று ஒரு முதல்வர், இன்னும் சொல்லப்போனால் ஒரு பெண் முதல்வர் நினைப்பாரெனில், இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x