Last Updated : 15 Mar, 2015 09:43 AM

 

Published : 15 Mar 2015 09:43 AM
Last Updated : 15 Mar 2015 09:43 AM

சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா மன்மோகன் சிங்?

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர் மிகவும் நெஞ்சுரம் மிக்கவர். தான் விசாரிக்க வேண்டியவர்களுடைய சமூக அந்தஸ்தோ, விசாரணை அமைப்பின் அதிகாரமோ அவரிடம் எந்த மலைப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவேதான், சி.பி.ஐ-யின் முடிவிலிருந்து அவர் மாறுபட்டிருக்கிறார். ஹிந்தால்கோ என்ற தனியார் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் நடந்துள்ள முறைகேடுகளுக்காக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே நேரில் விசாரணை நடத்துவது என்று தீர்மானித்ததன் மூலம், இந்திய நீதித் துறை வரலாற்றில் அவருடைய பெயர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.

நிலக்கரித் துறையின் முன்னாள் செயலர் பி.சி. பாரக், ஆதித்ய பிர்லா தொழில் குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குமாரமங்கலம் பிர்லாதான் அரசின் அந்த முடிவால் பலன் அடைந்தவர். இந்த மூவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம்-1988 ஆகியவற்றின் கீழ், சதி செய்ததாகவும், நம்பிக்கை மோசடி செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்டனையியல் சட்டத்தின் பொருத்தம்

இந்த வழக்கில் சி.பி.ஐ-யின் விசாரணை முடிப்பு அறிக்கைகள் இரண்டை நிராகரித்த பிறகு நீதிபதியின் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. விசாரணை அமைப்பின் கண்டுபிடிப்பை ஏற்கவும், நிராகரிக்கவும் சட்டம் அளிக்கும் உரிமையை நீதிபதியின் நடவடிக்கை உறுதி செய்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாகவோ எதேச்சாதிகாரத்துடனோ, ஏதோ ஒரு நோக்கை மட்டும் வலியுறுத்தியோ விசாரணை அமைப்புகள் செயல்பட்டாலும், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்கத் தேவையில்லை என்பதற்கு அரசியல் சட்டம் வழிவகுத்துள்ளதைப் பாராட்டியாக வேண்டும்.

ஆளும் கட்சிகளுக்கு விசாரணை அமைப்புகள் மீது உடும்பைப் போல வலுவான ஒரு பிடி இருக்கிறது. விசாரணை அமைப்பையும் மீறி நீதிபதிகள் இதைப் போலத் துணிச்சலான முடிவெடுப்பதால், அரசியல் அழுத்தத்துக்கு ஆளாக நேரிடும், நீதிபதியின் நேர்மை குறித்துகூடச் சில வட்டாரங்கள் சந்தேகம் எழுப்பக்கூடும். மிக முக்கியமான இத்தகைய வழக்குகளில் விதிவிலக்காகவே நாம் இப்படி நேர்மையான, நடுநிலையான, துணிச்சல் மிக்க நீதிபதிகளைப் பெறுகிறோம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 319-வது பிரிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. விசாரணை அமைப்பு ஒருவரைக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவராகக் கருதாவிட்டாலும் அவர் மீதும் விசாரணை நடத்துமாறு உத்தரவிட நீதிமன்றத்துக்கு விருப்ப அதிகாரத்தை இந்தப் பிரிவுதான் வழங்குகிறது. விசாரணைக்குப் பிறகு, தன்னிடம் தரப்படும் ஆவணங்களில், இன்னொருவர் மீது குற்றம் சுமத்தப்பட போதிய ஆதாரங்கள் இருந்தும் அவரை விசாரணைக்குக்கூட உட்படுத்தியிருக்கவில்லை என்றால், நீதிபதியே நேரடியாகத் தலையிட்டு அவரையும் விசாரியுங்கள் என்று உத்தரவிட இந்தப் பிரிவுதான் வழி செய்கிறது. மற்றவர்களைப் போலவே அவருக்கும், தனது தரப்பை எடுத்துக்கூற அவகாசமும் வாய்ப்புகளும் போதிய அளவு தரப்படும். இப்படித்தான் மன்மோகன் இப்போது இந்த விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார்.

சட்டத்தின் மாட்சி

பிரதமரோ முன்னாள் பிரதமரோ யாராக இருந்தாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படியான விசாரணையிலிருந்து அவருக்கு விலக்கு எதுவும் கிடையாது என்பதை நீதிபதியின் ஆணை உணர்த்துகிறது. முன்னாள் பிரதமரை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவதா என்று அவருடைய ஆதரவாளர்கள் கோபப்படுவது நகைப்புக்குரியது. யாருமே சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. மன்மோகன் சிங் இந்த விசாரணை நடைமுறைகளுக்கு உட்பட்டே தீர வேண்டும். இறுதியில் அவர் குற்றமற்றவர் என்றேகூட உறுதிப்படலாம்.

ஏப்ரல் 8-ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டது தொடர்பாகச் சிலர் கருத்து தெரிவிப்பது திசை திருப்பவும் குழப்பத்தை உண்டாக்கவும்தான். மன்மோகன் ஊழல் பேர்வழி என்றோ, ஹிந்தால்கோவுக்கு உரிமை வழங்க லஞ்சம் பெற்றார் என்றோ நீதிபதி கருதிவிடவில்லை. ஒடிசாவின் ‘தாலபிரா-II’ சுரங்கத்தை ஹிந்தால்கோ நிறுவனத்துக்கு வழங்க பிரதமர் அலுவலகத்திலிருந்து, தேவையில்லாமல் அதிக அக்கறை காட்டப்பட்டிருக்கிறது; 2005 ஜூன் 17-ல் மன்மோகனும் தொழிலதிபர் பிர்லாவும் தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள், பிரதமருக்கு பிர்லா கடிதம் எழுதியிருக்கிறார், என்.எல்.சி. என்ற அரசுத் துறை நிறுவனத்துக்கு ஒதுக்குவதற்காக வைத்திருந்த நிலக்கரிச் சுரங்கம் ஹிந்தால்கோ என்ற பிர்லா நிறுவன தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் மன்மோகனின் குற்றம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவர் மீது சந்தேகம் ஏற்படச் செய்துவிட்டது. அவர் தானாகவே இந்த முடிவை எடுத்தாரா அல்லது யாராவது சொல்லி எடுத்தாரா என்பது முக்கியமல்ல, அன்றைய நாளில் பிரதமர் பதவியுடன் நிலக்கரித் துறைப் பொறுப்பையும் சேர்த்தே வகித்தவர் அவர்தான் என்பதால், அவரை விசாரிப்பது அவசியமாகிவிட்டது.

சி.பி.ஐ. எங்கே தவறியது?

சி.பி.ஐ. இந்த விசாரணையின்போது செய்த பெரும் பாவம் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தாததுதான். இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டுகள் முழுக்க பாரக், பிர்லா ஆகியோர் மீது மட்டுமேதான் என்பது கேலிக்குரியது. மன்மோகனை நேரடியாகக் குறிப்பிடாமல் ‘உரிய அதிகாரம் படைத்தவர்’என்றே குறிப்பிட்டுள்ளனர். அரசில் அப்போது இருந்தவர்களுக்கும் இப்போது இருக்கிறவர்களுக்கும் அந்தச் சொல் நிலக்கரித் துறை அமைச்சரைத்தான் குறிக்கிறது என்று தெரியும். முக்கிய முடிவு யாரால் எடுக்கப்பட்டதோ அவர் வரை சென்று விசாரணை முடங்கிவிட்டது. சி.பி.ஐ-யின் அப்போதைய இயக்குநர், மன்மோகனை விசாரிப்பது அவசியமில்லை என்று நினைத்தாரோ அல்லது யாராவது விசாரிக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்தார்களோ தெரியாது, விசாரிக்கவில்லை. அப்போதே மன்மோகனிடம் விசாரித்து வாக்குமூலத்தைப் பதிவு செய்து அறிக்கை அளித்திருந்தால், இந்த விவகாரத்தில் அவருடைய பங்கு ஏதுமில்லை என்பது அப்போதே தெளிவாகியிருக்கலாம். நீதிமன்றம் அவருக்கு இப்போது சம்மன் அனுப்பியிருக்க வேண்டிய அவசியமும் நேரிட்டிருக்காது.

முக்கியமான கேள்விகள்

என்னுடைய பார்வையில் இப்போது எழும் முக்கியக் கேள்விகள் இவைதான்: ஹிந்தால்கோவுக்கு உரிமை வழங்கியதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதா? அல்லது தங்களுக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் சாதாரணச் செயல்தானா அது? அந்த நிலக்கரிச் சுரங்கத்தைப் பெறும் உரிமை ஹிந்தால்கோவுக்கு உண்டா? இதனால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைத்ததா? இந்த முடிவால் அரசுக்கு நஷ்டம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்ற முடிவுக்கு நீதிபதி வந்தால்தான், மேற்கொண்டு மன்மோகன் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் வழக்கைக் கொண்டுசெல்ல முடியும்.

அப்பாவியா, இல்லையா?

அரசில் பதவி வகித்த பொது ஊழியர், பொதுநலன் அல்லாமல் - யாருக்காவது மதிப்புமிக்க பலன் அல்லது பண ஆதாயம் பெற்றுத்தர - தனது பதவியைப் பயன்படுத்தியதை நிரூபிக்கத்தான் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(1)(டி)(iii) பிரிவு உதவுகிறது. சுருக்கமாகச் சொன்னால், அவருடைய செயல்பாடு அரசுக்கு இழப்பையும் யாருக்கோ லாபத்தையும் அளித்திருக்க வேண்டும். இதைச் செய்தால் பதிலுக்கு நீங்கள் இதை எனக்குச் செய்ய வேண்டும் என்று பேசிவைத்துச் செய்திருக்க வேண்டியதில்லை. குற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்தார் என்று நிரூபிக்க வேண்டியதில்லை. தான் நிரபராதிதான் என்பதைக் குற்றம்சாட்டப்பட்டவர்தான் நிரூபித்தாக வேண்டும். மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் நேர்மையானவர்தான், பொது ஏலம் வேண்டாம் - நேரடியாகவே கேட்போருக்குக் கொடுத்துவிடலாம் என்று மாநில முதலமைச்சர்கள் அப்போது கோரினார்கள், அதனால்தான் ஒதுக்கினார் என்பதெல்லாம் இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரை பொருந்தாத வாதங்கள்.

மன்மோகன் முன்னுள்ள வழிகள்

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் முன்னால் ஏப்ரல் 8-ல் ஆஜராவதற்குப் பதிலாக, தனக்கு எதிராகத் தனி நீதிபதி எடுத்துள்ள நடவடிக்கையை ஆட்சேபித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதற்கும் முன்னால் அவர் மனு தாக்கல் செய்யலாம். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரலாம். அப்படி நடந்தால், இந்த வழக்கு சட்டப் போராட்டங்களால் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். அப்போது, தான் பொது ஊழியர் என்பதால் தன்னை விசாரிக்க உரிய அனுமதியை சி.பி.ஐ. கோரிப் பெறவில்லை என்றும் வாதிடலாம். ஆனால், அத்தகைய அனுமதி, இந்திய தண்டனையியல் சட்டங்களுக்குப் பொருந்தும், ஊழல் தடுப்புச் சட்டங்களுக்கு அவசியமில்லை. இந்தியத் தண்டனையியல் சட்டப்படி அவர் மீது வழக்குத் தொடர, குடியரசுத் தலைவரின் அனுமதியை சி.பி.ஐ. பெற்றாக வேண்டும். அரசு நிர்வாகம் அல்ல, குடியரசுத் தலைவரே நேரடியாக இதில் முடிவெடுத்தாக வேண்டும். மாநிலங்களவையிலும் அவர் உறுப்பினராக இருப்பதால், குடியரசுத் துணைத் தலைவரிடம் சி.பி.ஐ. அனுமதி பெற்றாக வேண்டும். எனவே, சட்டரீதியாகப் பல்வேறு முன்மாதிரிகளை ஏற்படுத்தக்கூடிய வழக்காக இது உருவெடுக்கப்போகிறது.

- ஆர்.கே. ராகவன், சி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குநர்.
‘தி இந்து’ (ஆங்கிலம்).
சுருக்கமாகத் தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x