Last Updated : 31 Mar, 2015 09:14 AM

 

Published : 31 Mar 2015 09:14 AM
Last Updated : 31 Mar 2015 09:14 AM

இந்தியாவைப் புரிந்துகொள்வது எளிதல்ல!

வடகிழக்கின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனி இயல்புகள், கதைகள் உண்டு.

கடைசியாக இந்தியாவின் வரைபடத்தை நீங்கள் முழுமையாக இரண்டு நிமிடங்கள் பார்த்தது நினைவிருக்கிறதா? வரைபடங்களைப் பார்க்கும் பழக்கமே இன்று அநேகமாக இல்லை எனலாம். வடகிழக்கு என்பதை ஒரே பகுதியாகவே பெரும்பாலானோர் நினைத்துக்கொள்வதுண்டு. வரைபடத்தில் காணும்போது ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததுபோல இருப்பதால் நமக்கு அவ்வாறு தெரிகிறது. இதனால், இங்கிருப்பவர்களின் கலாச்சாரமும் மனநிலையும் அவ்வாறாகவே இருக்கும் என்று எண்ணுவதுண்டு. ஆனால், வடகிழக்கு என்பது பலதரப்பட்ட மக்கள் நிறைந்த ஒரு பகுதி. இங்குள்ள ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் அத்தனை வேறுபாடுகள் உண்டு. இதில் மேகாலயா ஒரு வசீகரமான பகுதி. அதற்கு மலையும் மழையும் மட்டும் காரணமல்ல.

இடங்களைச் சுவாரசியமாக ஆக்குவது அங்குள்ள மக்களும் அவர்களுக்கிடையில் நடக்கும் சமூக உரையாடல்களும்தான். அங்குள்ள மூன்று வாசிகளான காசி, ஜைந்தியா மற்றும் காரோ இன மக்கள் எல்லோரும் அவரவர் பாணியில் வேறுபட்டவர்கள். இதில் காசி மற்றும் ஜைந்தியா குழுவினர் கிட்டத்தட்ட அக்கா, தங்கைகள் என்று கூறலாம். பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் வழக்கம்கூட எளியதே. காரோ இனத்தவர்கள் முற்றிலுமாக இவர்களின் மொழி, கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டவர்கள்.

காதல் திருமணங்கள் மட்டுமே!

மேகாலயாவின் மக்கள்தொகை 30 லட்சம் மட்டுமே. அதில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் ஷில்லாங்கைச் சுற்றியே வாழ்கின்றனர். இவர்களில் காசி இனத்தவரே பெரும்பான்மை. காசியும் ஜைந்தியா மக்களும் தாய்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இன்றும் சொத்தும் பெயரும் பெண்ணுக்கு மட்டும்தான். ஒரு பெண்ணை மணந்துகொண்டால் அவளின் குடும்பப் பெயரைத்தான் ஆண் எடுத்துக்கொள்ள வேண்டும். திருமணம் இங்கு காதல் திருமணங்கள் மட்டுமே. தரகர்களே இங்கு இல்லை. திருமண வலைதளங்களே இங்கு கிடையாது. அவரவர் பார்த்துத் திருமணம் செய்துகொள்ளலாம். பொருளியல் சார்ந்த அந்தஸ்துச் சிக்கலைத் தவிர, பெரும்பாலும் வேறு எதுவும் எழுவதில்லை. திருமணத்தின் மூலம் பிறக்கும் பிள்ளைகளும் தாயின் பெயரைத்தான் எடுத்துக்கொள்வார்கள். எனவே, இங்கு ‘அப்பன் பெயர் தெரியாதவன்’ என்ற வசையோ/வழக்காடலோ கிடையாது. அநாதைக் குழந்தைகளே இந்தச் சமூகத்தில் கிடையாது. ஆணுக்குச் சொத்தும் கிடையாது, பெயரும் கிடையாது. இதனால் ஆண்கள் சிலர் மனஅழுத்தத்தில் இருப்பதைப் பார்த்துள்ளேன். இதனால் சூது, குடி போன்றவை இங்கு அதிகம் உண்டு.

மக்களிடமே நிலம்

அவர்களுக்கான மன்னரும் (சியெம் என்று அழைக் கப்படுவார்) அமைச்சர்களும் எல்லாம் ஆண்களே. ஆம்! இன்றும் அந்த முறை உண்டு. நிலம் என்பது அரசிடம் கிடையாது. மக்களிடமே உள்ளது. அது தொடர்பான எந்தச் சிக்கலுக்கும் மன்னரையே மக்கள் அணுகுவார்கள். வெளியாட்களுக்கு நிலம் கிடையாது. குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதுவும் நிலத்தின் சொந்தக்காரர் மனம் நோகாத வரை மட்டுமே. தனி நீதிமன்றமும் அவர்களுக்கான சட்டங்களும் உண்டு. அதற்கான வழக்கறிஞர்களும் உண்டு. இந்த ஆட்சிக் கட்டமைப்பில் பெண்களுக்கு இடமே கிடையாது. தாய்வழிச் சமூகமாக இருந்தாலும் இது ஒரு சுவாரசியமான முரண்.

காசி மொழி, ஜைந்திய மொழி, காரோ மொழி மூன்றுமே வேறு வேறு. வடகிழக்குப் பழங்குடிகளில் காசியும் ஜைந்தியாவுமே முதலில் வந்தவர்கள். இது ஆதாரபூர்வமாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அழகுணர்ச்சியும் கொண்டாட்டமும் இசையும், ஏற்றத்தாழ்வுகளும் கொண்ட சமூகம் இது. ஆனால், பெரும்பாலான வடகிழக்கு இனக்குழுக்களில் பட்டினி என்பதே கிடையாது. அவர்களை அவரவரின் கிராமமோ குழுவோ பார்த்துக்கொள்ளும். இதையெல்லாம் மீறியும் பொருளியல் சிக்கல்கள் இங்கும் உள்ளன.

ரகசியமே கிடையாது

குழு, இனம், நட்பு, வஞ்சம், இசை, இலக்கியம், களிப்பு நிறைந்த இந்தச் சமூகத்தில் ரகசியங்களே கிடையாது என்று சொல்வதுண்டு. அனைவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து வைத்திருப்பார். சிரபுஞ்சியில் அவ்வளவு மழை பெய்வதற்குக் காரணம், வங்கதேசச் சமவெளி வழியாகத் தென்மேற்குப் பருவக்காற்று வரும்போது, அங்குள்ள மலைகள் மீது ஏறி அவற்றுக்கிடையில் சிக்கிக்கொண்டு கொட்டித்தீர்ப்பதனால்தான். அதே போல இவர்களின் ரகசியங்களும் மலைகளுக்குள்ளேயே உலவிக்கொண்டு மீண்டும் மீண்டும் வந்து சேரும் என்ற அழகிய புனைவு இங்கு உண்டு. இப்படி வடகிழக்கின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனி இயல்புகள், கதைகள் உண்டு.

ஆனால், டெல்லிதான் இந்தியா என்று டெல்லியில் இருப்பவரும் சென்னைதான் தமிழகம் என்று சென்னையில் இருப்பவரும் நினைக்கிறார்கள். வடகிழக்கு பல இன, மொழி பேசும் மக்கள் கொண்ட சிக்கலான இடம். இவை எப்படி இன்றைய இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது என்ற வரலாறே இங்கு பெரும் பாலானோருக்குத் தெரியாது. அதிலும் குறிப்பாக நாகாலாந்து எப்படி இதற்குள் வந்தது என்பது. விடுதலைக்கு முன்னர் இருந்தே நாகாலாந்தைச் சேர்ந்த இனக்குழுக்கள் தங்களைப் பொதுவான ஆட்சியின் கீழ் கொண்டுவருவதில் விருப்பம் கொள்ளவில்லை. பழங்குடிகளின் மனநிலையில் வெளியாட்களுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட ஆட்கள் வருவதையும், தங்கள் வாழ்வில் சின்ன வகையில்கூட இடையூறு செய்வதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதன் ஒரு எச்சமே திமாப்பூர் சம்பவம்.

வெளியாட்கள் மீதான பயம்!

‘இது குறிப்பிட்ட இனத்துக்குப் பாடம் கற்பிக்கும் செயல். மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இதைச் செய்துள் ளார்கள்’ போன்ற புரிதலற்ற விவாதங்கள் குழப்பங் களையே விளைவிக்கின்றன. நாகா என்று ஒரு இனமே உண்மையில் கிடையாது. நாகாலாந்து என்ற மாநிலம் பல இனக்குழுக்களால் ஆன ஒன்று. அவர்களுக்குள் பல நூற்றாண்டுகளாகச் சண்டைகள் இருந்துவந்துள்ளன. சைமன் குழுவுக்குக் கொடுக்கப்பட்ட அறிக்கையில் இதைப் பார்க்கலாம். அவர்கள் மணிப்பூரில் இருக்கும் குழுக்களுடனும் அசாமில் இருக்கும் மக்களுடனும் தொடர்ந்து போரிட்டு வந்துள்ளார்கள். ஆகவே, வெளியாட்கள் மீதான ஒரு பயமும் பதற்றமும் புதிதல்ல. இனக்குழுவுக்குள்ளான சண்டையும் புதிதல்ல.

தொல்குடி மனநிலை

பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகள் அரசியல் சாசனத்தில் ஆறாவது அட்டவணையில் வருபவை. இங்கு வெளியாட்கள் நிலம் வாங்க இயலாது. அரசாங் கத்துக்கே நிலம் கிடையாது. தொல்குடி என்றதும் இவர்கள் வேல் கம்புடன் ‘வெற்றிவேல் வீரவேல்’ கோஷம் போடும் கூட்டம் என்று நமக்குள்ளே ஒரு பிம்பம் உண்டு. அந்த அளவிலிருந்து இவர்கள் வெளி யேறி இரண்டு தலைமுறைக்கு மேல் ஆகிவிட்டது. நவநாகரிக ஆடைகள் அணிந்தே பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ஆனால், தொல்குடியின் மனநிலை மாற பல நூற்றாண்டுகள் ஆகும். வெளியாட்கள் தங்களுக்கு ஆபத்தானவர்கள் கிடையாது என்று முழுவதுமாக நம்பிக் கூட்டுத் தொழிலில் ஈடுபட்ட பின்னரே அது நிகழும்.

ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சிபுரிந்ததில்லை. ஆட்சி என்றால் நிலம் சம்பந்தமான ‘வரி ஆட்சி’என்று பொருள். எனவே, வெளியாட்கள் இங்கு வந்து பெருவாரியாகத் தங்கியது சமீப காலங்களில்தான். அதுவும் அவர்கள் நிலத்தை எடுக்காவிட்டாலும் தொழில் புரிந்து பொருள் சேர்க்கிறார்கள். தொழிலில் அதிகம் ஈடுபாடில்லாத இனத்துக்கு வெளியாள் பொருள் சேர்ப்பதில் ஒரு அசூயை இருக்கத்தான் செய்யும். அதை வெளிக்காட்ட வாய்ப்பு தேடுவது அவர்களின் இயல்பு. இதில் அரசியல் சேர்ந்துகொண்டால் என்ன ஆகும் என்பதை, சற்றேனும் சமூகப் பார்வை உள்ளவர்கள் உணரலாம்.

உண்மையில், இங்கு இனக்குழுக்களுக்குள்ளேயே பல மோதல்கள் உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் இதுவே முதல் என்று கூறினால், அது இங்குள்ள வர்களுக்குச் சிரிப்பைத்தான் ஏற்படுத்தும். இங்குள்ள இனக்குழுக்களைச் சேராத ஒருவர், திமாப்பூர் போன்ற பெரிய நகரத்தில் இந்தக் கொடிய வன்முறைக்கு ஆளானதால் இது செய்தியாகிவிட்டது. இதில் மதச் சாயம் பூசுவது சற்றும் பொறுப்பற்ற செயல். மேலும், ‘பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை’ என்று அரசாங்க அறிக்கைகளே தெரிவிக்கின்றன. ஆகவே, இது போன்ற பிரச்சினைகளில் உண்மையை அறிந்து கொள்ளாமல் அவசரப்படுவதும் உணர்ச்சிவசப் படுவதும் ஆபத்தானது. இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமானால், இந்தியாவின் பன்மைக் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம் என்பதை மறந்துவிட வேண்டாம்!

- சாரா, வடகிழக்கு மாநிலங்களில் களப்பணியாற்றி வருபவர், தொடர்புக்கு: writersara123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x