Last Updated : 02 Mar, 2015 09:06 AM

 

Published : 02 Mar 2015 09:06 AM
Last Updated : 02 Mar 2015 09:06 AM

மதச் சார்பின்மை சாத்தியமாகுமா?

மதச் சார்பின்மை என்பது வெறும் மத நம்பிக்கைகள்பற்றிய விஷயமல்ல. அது அறிவியல்ரீதியான சிந்தனையை, நாட்டின் வளர்ச்சிக்கான பாதையாகக் காட்டுவது; அனைவரையும் சமமாகப் பாவிக்கும் மனோநிலை; பிறர் சுதந்திரத்தில் தலையிடாத மனோபாவம். சமூக நீதிக்கான பாதை. “மதச் சார்பின்மை என்னும் கருத்து போலியானது. அது மேற்கத்திய பண்பாட்டின் வெளிப்பாடு” என்பது போன்ற குரல்களைச் சமீப காலமாக அதிக அளவில் கேட்க முடிகிறது. ஆனால், மேலைநாடுகளில் உருவாக்கப்பட்ட ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், நவீன மருத்துவம், தொழில்நுட்பங்கள், உடைகள், பாவனைகள், மேலும் கழிப்பறைகள் வரை ஏற்றுக்கொண்ட சமுதாயம் இது என்பது மட்டும் ஏனோ மறக்கப்படுகிறது.

‘‘பெரும்பான்மையாக இந்துக்களைக் கொண்ட இந்தியாவில், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினர் வாழ்வதில் தடையேதுமில்லை. ஆனால், அவர்கள் பெரும்பான்மையினராகிய இந்துக்களின் நாட்டில், அவர்கள் கருணையினால் வாழ்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது’’ என்ற கருத்தை சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் வெளிப்படையாக முன்வைப்பதை எவ்வாறு எதிர்கொள்வது? இதுதான் இன்று மதச் சார்பின்மை எதிர்கொள்ளும் சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ள முதலில் மதச் சார்பின்மை என்பதுபற்றிய தெளிவான நிலைப்பாடு அவசியம்.

அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி போன்ற நாடுகள் ஒரு காலத்தில் மதச் சார்பு கொண்ட நாடுகள்தான். பின்னர், மதம் சார்ந்த நிறுவனங்கள் அரசை ஆட்டுவிப்பதைத் தவிர்ப்பதற் காக, மதத்தையும் அரசு நிறுவனங்களையும் தனியாக அவர்கள் பிரித்தார்கள். அதன் முக்கிய நோக்கம் ஒரு மதத்தின் நம்பிக்கைகள், வாழ்க்கை நெறிகள் பிற மதத்தினரிடம் அரசு என்ற அமைப்பின் மூலம் திணிக்கப்படக் கூடாது என்பதே.

விசித்திரமான மதச் சார்பின்மை

சமூகம் மத நம்பிக்கைகள் கொண்டதாக அமையலாம். ஆனால், அரசே மதம் சார்பாக இருக்குமென்றால், அது பிற மதத்தினருக்குக் கண்டிப்பாகத் தீங்கு விளைவிக்கும் என்பதை, கழுவில் ஏற்றப்பட்ட சமணர்களைக் கேட்டால் சொல்வார்கள். மதச் சார்பின்மை எனும்போது, மத நம்பிக்கையையும் செயல்பாடுகளையும் பொதுவெளிகளில் வெளிப்படுத்தக் கூடாது என்ற கண்டிப்பான மேற்கத்தியக் கருத்தியலை இந்திய அரசு பின்பற்றவில்லை என்பதைக் கருத்தில் கொள்வதும் இங்கு அவசியம். நம் நாட்டில் இருப்பது மிகவும் விசித்திரமான மதச் சார்பின்மை.

நம் நாட்டில், அரசின் பலவிதமான பலவீனங்களை மதங்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்குச் சாதகமான காரியங்களை நிகழ்த்திக்கொள்கின்றன. இங்கே அரசு அலுவலகங்களில் கடவுள்களின் படங்கள் வைக்கலாம். அரசு அலுவலக மற்றும் கல்வி வளாகங்களில் வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிக்கொள்ளலாம். சடங்குகளைக்கூட நிகழ்த்திக்கொள்ளலாம். அரசு புனித யாத்திரைகளுக்கு நிதி உதவி செய்யும். ஆட்சியாளர்கள் அவ்வப்போது வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு, தங்களின் மதச் சார்பைக் கட்சித் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் தெரிவிப்பார்கள்.

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

மதச் சார்பின்மை என்றவுடன் மற்றுமொரு முக்கியமான கோரிக்கை எழுப்பப்படுகிறது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பதே அது. குறிப்பாக, இஸ்லாமியருக்கு மட்டும் அவர்களுக்கான மதக் கொள்கைகள் அடிப்படையிலான சட்டங்களை அரசு அங்கீகரிப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதைப் பற்றிப் பேசும்போது இஸ்லாம் தவிர சீக்கியம், சமணம், பௌத்தம், பார்சி மற்றும் பழங்குடி மதங்கள் எனப் பல்வகைச் சிறுபான்மை மதங்கள் நம் நாட்டில் உள்ளதையும் மறந்துவிடக் கூடாது. இந்நிலையில், பொதுவான அந்தந்த மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ற வகையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ள தனிப்பட்ட சட்டங்கள், அவரவர் மதச் சடங்குகளையும் அந்த மதத்தினர் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் காப்பாற்றிவருகின்றன. 25 முதல் 30 வரையிலான சட்ட வரைவுகள் சிறுபான்மையினரின் மதச் சுதந்திரம், கல்வி, மற்றும் பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்கின்றன. பொது சிவில் சட்டத்தை அமலாக்கினால், இந்த உரிமைகள் பறிக்கப்படும். இதனால்தான், தங்களின் மத அடையாளங்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் சிறுபான்மையினருக்கு உள்ளது.

இஸ்லாம் என்ன சொல்கிறது?

இந்து மதத்தைப் பொறுத்தமட்டில் அதில் பல்வகை பண்பாட்டுப் பரிமாணங்கள் விரவிக் கிடக்கின்றன. அதற்குள்ளாகவே பல்வகைத் திருமண முறைகளும், சாதிப் பாகுபாடுகளும், வாழ்வியல் நெறிகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாக இருந்துவருகின்றன. எனவே, இந்துக்களுக்கும் சில பிரச்சினைகளை இந்த பொது சிவில் சட்டம் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

சொல்லப்போனால், இஸ்லாம் திருமணச் சட்டப்படி திருமணம் ஒரு ஒப்பந்தமாக அமைகிறது. சட்டரீதியாக மணப்பெண்ணின் உரிமையைப் பாதுகாக்கிறது. பெண்ணுக்கான சொத்துரிமை மற்றும் வாழ்வாதார உரிமையை உறுதிசெய்கிறது. ஆனால், என்ன பிரச்சினை? இஸ்லாமியர் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற நிலைப்பாடுதான் பிரச்சினை. ஆனால், நடைமுறை வாழ்வில் அப்படி நடைபெறுகிறதா என்று பார்த்தால், இந்தியாவில் பெரும்பாலும் அப்படி இல்லை. இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவின் பண்பாட்டு நெறிகளைத்தான் பெரும்பாலும் கடைப்பிடிக்கின்றனர். முன்பொரு முறை நடத்தப்பட்ட ஆய்வில், இஸ்லாமியர்களில் 5.6 சதவீதத்தினரும் (12 லட்சம்), இந்து மதத்தினரில் 5.8 சதவீதத்தினரும் (ஒரு கோடிக்கும் மேல்) ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்துகொண்டுள்ளதாகத் தெரியவந்தது. இந்நிலையில், பெண்ணுரிமையாளர்கள் இது போன்ற மதம் சார்பான சட்ட அனுமதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்துவருகிறார்கள். மதச் சட்டங்களில் பெண்ணுக்கான பாதுகாப்பு, மாண்பு, உரிமைகள் போதுமான அளவு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.

காலத்துக்கேற்ற சீர்திருத்தம் தேவை

மதச் சட்டங்களில் காலத்துக்குத் தேவையான மாறுதல்கள் செய்யப்படுவது அவசியம். அது கண்டிப்பாகப் பாலின சமத்துவத்தை உறுதிசெய்வதாக அமைய வேண்டும். சில இஸ்லாமிய நாடுகளில்கூட பெண்களின் நலனுக்காகச் சட்டங்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மதத்துக்குள்ளாகவும் சீர்திருத்தம் தேவை என்பது காலத்தின் கட்டாயம். சீர்திருத்தம் என்று சொல்லும்போது அது குரானையோ, பைபிளையோ முற்றுமாக நிராகரிப்பது என்பது அல்ல! இப்புனித நூல்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை மானுட நீதியின் அடிப்படையில் புதிய புரிதல்களுக்கு உள்ளாக்குதல் என்பதே ஆகும். ஒவ்வொரு மதத்துக்குள்ளாகவும் காணப்படும் காலத்துக்கு ஒவ்வாத, நீதிக்கு எதிரான நடைமுறைகளும் சட்டங்களும் அந்தந்த மதத்தினராலேயே நீக்கப்படுவதே சரியானதாக இருக்கும். அதற்காகப் போராட வேண்டிய கட்டாயம் அந்தந்த மதத்தின் அறிஞர்களுக்கு உள்ளது. அறிவியல்ரீதியாகவும், அறக் கோட்பாட்டின் அடிப்படையிலும், மனிதநேய உணர்வுடனும் மத அரசியலற்ற கல்வியறிவு மக்களுக்கு அளிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இது போன்ற கல்வியை மதச் சார்பற்ற அரசால்தான் வழங்க இயலும். இது போன்ற கல்விதான் நமது நாட்டை மதப் பூசல்களிலிருந்து காப்பாற்றும். எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் பிற மதத்தினர் அனைவரும் அவரவர் மதங்களுக்குள்ளாக உரையாடலை மேற்கொள்வதும் அவசியம்.

தனிநபர்கள் மதவாதிகளாக இருக்கலாம். ஆனால், அரசு மதச் சார்பற்றதாகத்தான் இருக்க வேண்டும். மதப் பற்றுள்ள மனிதராக காந்தி இருந்தாலும், மதங்களின் சமத்துவமே மதச் சார்பற்ற அரசின் அடிப்படை என்று அவர் நம்பினார். சிறுபான்மையினரை மதிக்கும், பாதுகாக்கும், அவர்களைப் பொதுவெளிகளில் சமமாகப் பாவிக்கும் சூழலை உருவாக்கும் அரசையே நம் நாட்டைப் பொறுத்தமட்டில் மதச் சார்பற்ற அரசு என்று சொல்லலாம். அதை விடுத்து, சிறுபான்மையினரை எதிர் நிலையில் வைத்து, அவர்களைப் பூதாகாரமான விரோதிகளாகக் கட்டமைத்து, அதன் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை முன்வைப்பது என்பது அடக்குமுறையே அன்றி ஜனநாயகமாகாது!

- இரா. முரளி, முதல்வர், மதுரைக் கல்லூரி, தொடர்புக்கு: murali_phil@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x