Published : 02 Mar 2015 10:23 AM
Last Updated : 02 Mar 2015 10:23 AM

பட்ஜெட் 2015 குறுக்குவெட்டுப் பார்வை: இந்தியா பறக்கப்போகிறதா?

2015-16 நிதிநிலை அறிக்கை குறித்து பொருளியல் அறிஞர், இடதுசாரித் தலைவர் ஆகிய இருவரின் பார்வைகள்:



செயல்பட வேண்டிய நேரமிது

- அசோக்.வி.தேசாய்

நிதிநிலை அறிக்கை என்பது பலருக்கும் உணவளிக்கும் அன்னப் பாத்திரம் என்பதுடன் பொருளாதாரக் கப்பலை வழிநடத்தும் சுக்கான் போன்றதும்கூட. கடந்த ஜூலையில் அளித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அருண் ஜேட்லி இதை மறந்தார். நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்காமல், பொருளாதார ஊக்குவிப்புகளைப் புதிதாக அறிவித்திருந்தார். பொருளாதார நிலைமைகுறித்துத் தெளிவில்லை என்று ஜேட்லி சமாளிக்கலாம். ஆனால், மத்திய புள்ளியியல் துறை அளித்த தரவுகள் பொருளாதாரம் சரிந்துகொண்டிருப்பதைத் தெளிவாக உணர்த்தின. நவம்பரில் அரவிந்த் சுப்ரமணியம் அவருக்கு முதன்மைப் பொருளாதார ஆலோசகராகக் கிடைத்தார்.

டிசம்பரில் வெளியான இடைக்காலப் பொருளாதார ஆய்வறிக்கை அதிகத் தகவல்களைக் கொண்டிருக்கவில்லை. ‘பொருளாதாரம் மீட்சி அடைந்துவருகிறது, புறச் சூழலும் சாதகமாக இருக்கிறது, பெரிய நாடுகளின் பொருளாதார நிலைமை காரணமாக முதலீட்டாளர்கள் இந்தியாவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்’ என்று மட்டும் கூறியது.

வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என்கிறார் ஜேட்லி. பணவீக்க விகிதம் 3% முதல் 4% ஆக இருந்தால் ஜி.டி.பி. 11% முதல் 12% வரையில் இருக்கலாம். அரசின் வருமானமும் உயர வேண்டும். ஆனால், 1.4% மட்டுமே உயர்வு இருக்கும் என்கிறது நிதிநிலை அறிக்கை. கணிசமான அளவுக்கு வரிச்சலுகையையும் அளித்துவிடவில்லை. வருவாய் குறைவதால்தான் இந்த நிலைமை.

பணப் பற்றாக்குறை ஏற்படும்போது அரசுகள் முதலில் குறைப்பது மூலதன முதலீட்டைத்தான். நடப்புக் கணக்கில் கைவைத்தால் சலுகைகளை அனுபவித்துவருபவர்கள் கூக்குரலிடுவார்கள், அரசுக்கு எதிராகக் கிளம்புவார்கள். எல்லா அரசுகளுமே மூலதனச் செலவைக் குறைவாகவும் முதலீட்டுச் செலவை அதிகமாகவும் வைத்துக்கொள்ளும்.

4.1% நிதிப் பற்றாக்குறை என்பது வரலாற்றிலேயே மிகக் குறைவு. தொழில்நுட்பத்தையும் கட்டமைப்புகளையும் விரிவுபடுத்த நிறைய செலவழிக்கலாம். பணவீக்க விகிதம் குறைந்திருக்கிறது. மொத்த உற்பத்தி மதிப்பில் மேலும் சில சதவீதத்தை முதலீட்டுக்குத் திருப்பிவிட்டால் குறிப்பிடத்தக்க பொருளாதார ஆதாயம் ஏற்படும்.

எதில் செலவிடுவது?

மின்சார உற்பத்திக்குப் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. மத்திய அரசு அதிகம் முதலீடு செய்தால் மின்சார விலை தொடர்பாக மாநிலங்களுடன் பேரம்பேச முடியும். மின்கட்டணத்தை உயர்த்தினால் மின்வாரியங்கள் நஷ்டத்திலிருந்து மீளும். மின்உற்பத்தியும் அதிகரிக்கும். நிலம், நீர், ஆகாய மார்க்கமாகப் போக்குவரத்தை வளர்க்க முதலீடு செய்யலாம்.

பங்குச் சந்தைகளைத் தன்னுடைய சிவப்பு நாடா முறையால் மென்னியைப் பிடித்துவிட்டது செபி. வங்கிகளிடம் மூலதனம் போதவில்லை. கடன் தருவதில் எச்சரிக்கையாக இருக்கின்றன. தொழில்துறைக்கு நிறையக் கடன் தேவைப்படுகிறது. நிதித் துறை சட்ட சீரமைப்பு கமிஷன் செய்த பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். வங்கிகளுக்கு அதிக நிதியைத் தந்து அவற்றைத் தனியார்மயமாக்க வேண்டும். ஜேட்லி இதில் எதையும் செய்யவில்லை. பழைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதுடன் சில திட்டங்களுக்கு பாஜக தலைவர்களின் பெயர்களைச் சூட்டியிருக்கிறார். இல்லாவிட்டால் காங்கிரஸ் நிதிநிலை அறிக்கைக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியாதே?

பாஜக ஆட்சிக்கு வந்ததும் எடுத்த முக்கிய நடவடிக்கை, மானியங்களை ‘ஜன் தன் திட்டம்’ மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்குவதுதான். அத்துடன் ஆதார் திட்டத்தையும் இணைத்து இதர திட்டங்களை அமல்செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

கருப்புப் பண ஒழிப்பு பாஜகவுக்குப் பிடித்த அடுத்த கொள்கை. இதற்காகக் கடுமையான சட்டம் இயற்றப்படும் என்று ஜேட்லி எச்சரித்திருக்கிறார். ஆனால், இப்படிப் பணம் போட்டுவைத்திருப்பவர்கள் ஏமாளிகள் அல்ல. ஒன்று, நல்ல வழக்கறிஞர்களை வைத்து வாதாடுவார்கள் அல்லது வெளிநாட்டுக் குடிமகன்களாகிவிடுவார்கள் அல்லது 6 மாதங்களுக்குள் தாய்நாடு திரும்பி எல்லாவற்றையும் சரிப்படுத்திவிடுவார்கள். எனவே, இந்த சட்டத்தால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை.

பாஜகவில் உள்ள விவரம் தெரியாதவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையைப் பாராட்டுவார்கள். ஜேட்லி இதையெல்லாம் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளக்கூடும். மக்கள் தங்களுக்குப் பிடித்ததைச் செய்வார்கள்; சில வேளைகளில் அது தவறாகப் போய்விடும். சாதாரண மக்கள் தவறு செய்யலாம், நிதியமைச்சர் தவறு செய்தால் அது நாட்டுக்கே பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும்.

- அசோக் தேசாய், பொருளியல் அறிஞர்

*****

பொருளாதாரத்தைச் சுருங்க வைக்கும்

- சீதாராம் யெச்சூரி

மோடி அரசுக்காக ஜேட்லி தயாரித்துள்ள முழுமையான முதல் நிதிநிலை அறிக்கை பிரம்மாண்டமான மாயத் தோற்றமே.

மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது? வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்த பொதுச் செலவுகளை அதிகரிப்பதற்குப் பதிலாக சுருக்கியிருக்கிறது. 2014-15-ல் அரசின் மொத்தச் செலவு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதைவிட 7% குறைவு, அதாவது 1.14 லட்சம் கோடி ரூபாய் குறைவு.

2015-16-ல் மொத்த வரி வருவாய், ஜி.டி.பி-யில் 10.3% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் 10.8%-ஐ விட இது குறைவு.

சமூகத் துறைகளுக்கான செலவு

சமூகத் துறைகளில் செலவுகளை அதிகம் செய்வதற்குப் பதிலாக நிதிப் பற்றாக்குறையை 3.9% ஆகக் குறைக்க முயற்சி நடக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கும் உணவு மானியத்துக்கும் அதே ஒதுக்கீடுதான் செய்யப்பட்டுள்ளது. இதனால் உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்புப் பெருக்கம், வாழ்க்கைத்தர உயர்வு ஆகியவை கேள்விக்குறியாகிவிட்டன. ஜி.டி.பி-யில் மொத்த மானியச் செலவின் பங்கு 2.1%-லிருந்து 1.7%ஆக, ரூ.2.60 லட்சம் கோடியி லிருந்து ரூ.2.44 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் குடும்ப நலனுக்கான ஒதுக்கீடு ரூ.35,163 கோடியிலிருந்து ரூ.29,653 கோடியாகக் குறைக்கப்பட் டிருக்கிறது. வீடமைப்பு, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்புக்கான செலவு ரூ.6,008 கோடியிலிருந்து ரூ.5,634 கோடியாகக் குறைந்திருக்கிறது. பழங்குடியினர் திட்டத்துக்கு ரூ.5,000 கோடி குறைக்கப்பட்டுவிட்டது. பட்டியல் இனத்தவருக் கான ஒதுக்கீடு ரூ.12,000 கோடி குறைந்திருக்கிறது. மகளிருக்கான திட்ட ஒதுக்கீடு 20% (சுமார் 20,000 கோடி ரூபாய்) வெட்டப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட நிதி ரூ.16,000 கோடியிலிருந்து ரூ.8,000 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

பணக்காரர்களுக்கே ஆதாயம்

உள்நாட்டு, வெளிநாட்டுப் பணக்காரர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர். நேரடி வரி வருவாய் ரூ. 8,315 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மறைமுக வரி வருவாய் ரூ.23,383 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. செல்வ வரி ரத்து செய்யப்பட்டுவிட்டது. நிறுவனங்கள் மீதான வரி 30%-லிருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு ஆகியவற்றுக்கு மூலதன ஆதாய வரி, குறைந்தபட்ச மாற்று வரியிலிருந்து விலக்கு தரப்பட்டிருக்கிறது.

பணக்காரர்களுக்குத் தந்த வரிச் சலுகையால் 2014-15-ல் ஏற்பட்ட நிதியிழப்பு, நிதிப் பற்றாக்குறை ரூ.5,89,285.2 கோடியைவிட அதிகம். பணக்காரர்களுக்குத் தரும் மானியங்களால்தான் பற்றாக்குறை ஏற்படுகிறதே தவிர, ஏழைகளுக்குத் தரும் மானியங்களால் அல்ல. பற்றாக்குறையை ஈடுகட்ட அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ.70,000 கோடி மதிப்புக்கு விற்க அரசு முடிவு செய்திருக்கிறது. இது குடும்பக் கஷ்டத்துக்கு வெள்ளிப் பாத்திரங்களை விற்பதைப் போன்றதாகும்.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு கொண்டுவந்த பொருளாதார சீர்திருத் தத்தையே இன்னும் வலுவாகக் கொண்டுவருகிறது மோடி அரசின் பட்ஜெட். உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு அதிக ஊக்குவிப்பு தந்து, முதலீட்டை ஈர்த்தால்தான் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பெருகும் என்று கூறப்படு கிறது. பணக்காரர்களுக்கு இவ்வளவு பெருந்தொகையை ஊக்குவிப்பாக அளிக்காமல், நம்முடைய சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளில் முதலீடு செய்தால் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார சமத்துவம் ஆகிய அனைத்துமே சாத்தியமாகும்.

தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்துக்குப் பெருமளவு நன்கொடை தந்த பெருநிறுவனங்களுக்கு நன்றிக் கடனாகத்தான் இந்த நிதிநிலை அறிக்கையை பாஜக சமர்ப்பித்திருக்கிறது. இந்தியா ‘பறப்பதற்கான நேரம்’ வந்துவிட்டதாக நிதியமைச்சர் நம்பிக்கையோடு தெரிவிக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையின் உதவியால் பணக்காரர்கள் ‘எழுச்சி’ பெறுவார்கள். ஆனால், ஏழைகள் மேலும் அதிக ஆழத்தில் வீழத் தயாராக வேண்டும்.

- சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு, மாநிலங்களவை உறுப்பினர்.

‘தி இந்து’ (ஆங்கிலம்), | தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x