Last Updated : 25 Mar, 2015 09:12 AM

 

Published : 25 Mar 2015 09:12 AM
Last Updated : 25 Mar 2015 09:12 AM

அறம் பிறழ்கிறார்களா உச்ச நீதிபதிகள்?

‘உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் கேரளத்தின் இப்போதைய ஆளுநருமான பி. சதாசிவம், சமீபத்தில் டெல்லிக்கு வந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்; டெல்லி மாநிலத் துணைநிலை ஆளுநராகவோ, தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராகவோ அவர் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று பல்வேறு அரசியல், அதிகாரவர்க்கப் பிரமுகர்கள் மத்தியில் பேச்சு நடந்ததாகத் தெரியவருகிறது.

டெல்லியின் துணைநிலை ஆளுநர் பதவிக்குப் புதிதாக ஒருவரை நியமிக்க மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. தேசிய மனித உரிமைகள் கமிஷனின் இப்போதைய தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மே மாதத்தில் பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்கிறார். காலியாகும் அந்த இடத்தில் தன்னை நியமிக்க வாய்ப்பிருக்கிறதா என்று சதாசிவம் கேட்டிருப்பதாக புதுடெல்லி பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. கேரள ஆளுநரின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்பார்களா என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆளுநர் பதவி என்பது அரசியல் சட்டரீதியிலான உயர் பதவிகளுள் ஒன்று. ஆளுநர்கள் எதைச் செய்தாலும், பேசினாலும் முழு விவரங்களையும் தெரிந்துகொண்டே செயல்பட வேண்டும், நடுநிலை பிறழாமல் நடக்க வேண்டும், அரசியல்வாதிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆளுநரோ நாட்டை ஆளும் கட்சியின் தேசியத் தலைவர் மகனுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், இதற்காக திருவனந்த புரத்திலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பறந்து வருகிறார். இப்படி வருவதே வித்தியாசமாகத் தெரிகிறது.

அமித் ஷா - சதாசிவம் உறவு!

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னரே இருவரும் அறிமுகமானவர்கள். 2012, 2013 ஆண்டுகளில் துளசிராம் பிரஜாபதி என்பவர் போலீஸ் வசத்தில் இருக்கும்போது கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த பெஞ்சில் இருந்தவர் சதாசிவம். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அமித் ஷா. இந்தச் சம்பவத்தில் ஷாவுக்கு நேரடிப் பங்கு இருப்பதை நிரூபிக்கும் ஆதாரம் ஏதுமில்லை என்று நீதிமன்றம் அவரை விடுவித்தது. அதற்குப் பிறகு, சதாசிவம் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெற்றார். கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். குற்றவியல் வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவித்ததால் சதாசிவத்துக்கு ஆளுநர் பதவி கிடைத்ததாக எழுந்த கருத்தை ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சதாசிவமே மறுத்திருக்கிறார். அமித் ஷாவைத் தான் விடுதலை செய்தபோது பாஜக ஆட்சிக்கு வரும், அமித் ஷா அதன் தேசியத் தலைவராவார் என்பதற் கெல்லாம் வாய்ப்பே இல்லாமலிருந்தது என்றார்.

சதாசிவத்தை ஆளுநராக நியமனம் செய்ததற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், சுதந்திர இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற பிறகு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பிரமுகர் சதாசிவம்தான். கடந்த செப்டம்பரில் அவருடைய நியமனம் நடைபெற்றபோது 2 முன்னாள் தலைமை நீதிபதிகள் அதை விமர்சித்தனர். அரசியல் நெருக்கடிக்கு ஆளாகாமல் நீதித் துறை செயல்பட வேண்டும் என்பதால், இது ஆரோக்கியமான முன்னுதாரணம் அல்ல என்றே கருதப்பட்டது. “மிகவும் முறையற்றது, துரதிருஷ்டவசமானது” என்று பிரபல சட்ட நிபுணர் ஃபாலி எஸ். நாரிமன் கண்டித்தார். “நீதிபதிகள் பதவியைத் தேடி ஓடுவதும் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகத் துடிப்பதும், இப்போது நீதிபதிகளாக இருப்பவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் நீதித் துறையின் சுதந்திரத்தன்மை என்ற சிறப்பையே நாசமாக்கிவிடும்; அதுதான் நம்முடைய அரசியல் சட்டத்தின் அடிப்படையான அம்சம்” என்றார் நாரிமன்.

அருண் ஜேட்லியின் கேலி

மத்திய அமைச்சரவையில் பல வழக்கறிஞர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அருண் ஜேட்லியைவிடத் தொழிலில் திறமையானவர்கள் அவர்களில் யாரும் இல்லை. சதாசிவம் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது ஜேட்லி விமர்சிக்கவில்லை. ஆனால், 2012-ல் மாநிலங்களவையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது, “நீதிபதிகளும் தலைமை நீதிபதி களும் அதிக சம்பளம், குறைந்த பொறுப்பு இருக்கும் கவுரவமிக்க பதவிகளை அரசிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்று அரசுக்கு ஆதரவாகப் பல தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கிவிடுவார்கள்; நீதிபதிகளில் இரண்டு வகையினர் உண்டு. ஒரு பிரிவினர் சட்டங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள். இன்னொரு பிரிவினர் சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்” என்றார்.

வேறு பல விவகாரங்களைப் போல இதிலும் பாஜக, காங்கிரஸின் பாதையிலேயே செல்கிறது. தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புகளை வழங்கும், அடக்க ஒடுக்கமான நீதிபதிகள்தான் தேவை என்று தொடங்கிய முதல் அரசு இந்திரா காந்தி தலைமையிலானது. அவருடைய முக்கிய ஆலோசகர்களான பி.என். ஹக்சர், மோகன் குமார மங்கலம், எச்.ஆர். கோகலே போன்றவர்கள் ‘அரசின் லட்சியத்துக்கேற்ப’ செயல்படும் நீதிபதிகள் தேவை என்று சிந்தித்துச் செயல்பட்டனர். நீதித் துறை நியமனங்களில் அவர்கள் தீவிரமாகத் தலையிட்டனர். 1973-ல் பணி மூப்பும் திறமையும் மிக்க பல நீதிபதிகளைப் புறக்கணித்து ஏ.என். ராய் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதுதான் மிகவும் பிரபலமான - அல்லது அவப்பெயர் பெற்ற - நியமனமாகும். தங்களுடைய எண்ணங்களுக்கேற்பச் செயல்படக்கூடிய நீதிபதிகளை நியமிக்கும் மரபு பின்பற்றப்பட்டதால் அரசுக்கு ஆதரவானவர் களான பலர் இடம் பெற்றதால், அரசியல் சட்டத்துக்கு முரணாக அதிகாரங்கள் அனைத்தும் மைய அரசிடம் குவிய வழியேற்பட்டுவிட்டது.

ரங்கநாத் மிஸ்ரா விவகாரம்

காங்கிரஸ் கட்சி நீதித் துறையில் அரசியலைப் புகுத்தியதற்கான சமீபத்திய உதாரணம் ரங்கநாத் மிஸ்ரா. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா, சீக்கியர்களுக்கு எதிராக 1984-ல் நடைபெற்றக் கலவரம்குறித்து விசாரிக்க அரசு கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டார். கலவரத்தைத் தடுக்கத் தவறியதாகக் காவல் துறையையும் அரசு நிர்வாகத்தையும் கண்டித்த மிஸ்ரா, காங்கிரஸ் கட்சி குற்றம் எதையும் செய்யவில்லை என்று அறிக்கை அளித்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சில காங்கிரஸ்காரர்களும் ஓர் அமைச்சரும்கூடக் கும்பல்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்ததாகவும் ஏவிவிட்டதாகவும் நேரில் பார்த்த பலர் சாட்சியம் அளித்தும்கூட அவர், காங்கிரஸுக்குப் பங்கில்லை என்று கூறிவிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு, ஒடிசா மாநிலத்திலிருந்து காங்கிரஸ் ஆதரவில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாந்தி பூஷண் வீசிய குண்டு

அரசியல்வாதிகளுடன் நெருக்கமாகத் தொடர்புகொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விரும்பும் போக்கு கவலையைத் தருகிறது. இதற்கு இணையாக நிதி ஊழலும் அதிகரித்துக்கொண்டே வருவதற்கான ஆதாரங்களும் கிடைத்துவருகின்றன. ஃபாலி நாரிமனைப் போலவே சட்ட நிபுணரும் நீதித் துறையினரால் மிகவும் மதிக்கப்படுபவருமான சாந்தி பூஷண் 2010-ல் உச்ச நீதிமன்றத்தின் கடந்த 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் செய்தவர்கள் என்று அறிக்கையாகவே தாக்கல் செய்தார். அவர்களுடைய பெயர்களை எழுதி அந்தப் பட்டியலைக் காகித உறையில் வைத்து அரக்கு முத்திரையிட்டு உச்ச நீதிமன்றத்திடமே அளித்துவிட்டார்!

அந்தச் சமயம் நான் டெல்லி சென்றிருந்தேன். பிரித்துப் பார்க்கப்படாத அந்த உறையைப் பற்றியே என்னுடைய வழக்கறிஞர் நண்பர்கள் தங்களுக்குள் அடிக்குரலில் பேசிக்கொண்டிருந்தனர். சாந்தி பூஷண் 50 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருப்பதாலும், நேர்மை யானவர் என்று பெயரெடுத்ததாலும் அவருடைய பட்டியல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. என்னுடைய நண்பர்கள் அவர்களுடைய நேரடி அனுபவத்தின் பேரில் நீதிபதிகள் எம்.என். வெங்கடாசலய்யா, ஜே.எஸ். வர்மா, எஸ்.பி. பரூச்சா குறித்து உயர்வாகப் பேசினார்கள். அதே சமயம், அவர்களுக்கு மற்றவர்கள் தொடர்பாகச் சந்தேகம் இருந்தது. சந்தேகம் தீர அந்தக் காகித உறை இன்னும் திறந்து பார்க்கப்படவில்லையே, என்ன செய்வது!

கீழமை நீதிமன்றங்கள்

கீழமை நீதிமன்றங்களில் ஊழல் அதிகம் என்பது வெகு காலத்துக்கு முன்னரே தெரிந்த விஷயம்தான். அது அப்படியே மேல்நோக்கிப் பரவி உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றங்களுக்கும் வந்துவிட்டது. இது மிகவும் கவலை தரும் அம்சமாகும். நடுத்தர வர்க்கம் நீண்ட காலமாகவே அரசியல்வாதிகள் என்றாலே சந்தேகக் கண்ணோடுதான் பார்த்துவருகின்றது. அதிகாரிகள் மீதும் அவர்களுக்கு அவ்வளவாக நன்னம்பிக்கை இல்லை. எங்கு, யார் தவறு செய்தாலும் நீதித் துறை அதைத் தடுத்து நிறுத்திவிடும் என்று மலையாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே பொதுநல வழக்குகளின் எண்ணிக்கையில் உயர்வு, உயர் நீதிமன்றங் களிலும் உச்ச நீதிமன்றங்களிலும் மேல்முறையீடு என்று அரசின் எதேச்சையான செயல்களுக்கு எதிராக முயற்சிகள் தொடர்கின்றன.

எல்லாம் அறிந்தவர்களா நீதிபதிகள்?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு, அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் உள்ள தொழில்நுட்பங்கள் தொடர்பான நிபுணத்துவம் தேவைப்படுகிறது என்பதே மூன்றாவது முக்கிய அம்சம். இப்போதைய உலகம் சிக்கலானது, வேகமாக மாறிவருகிறது. புதிய தொழில்நுட்பங்களால் விரும்பியும் விரும்பாமலும் சில விளைவுகள் ஏற்பட்டுவிடு கின்றன. பாலின சமத்துவ நீதி என்பது கட்டுப்பெட்டியான பழைய நம்பிக்கைகளைத் தகர்க்க முயல்கிறது. தாவரங்கள், பிராணிகள், மனிதர்கள் பற்றி இதுவரை நாம் புரிந்துவைத்திருந்த மரபியல் சார்ந்த தகவல்கள் மாறிக்கொண்டிருக்கின்றன, அறிவியல் துறையில் புரட்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தச் சவால்களையெல்லாம் சந்திக்கும் அளவுக்கு நம்முடைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரிடமும் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அறிவுசார் சொத்துரிமை, சுற்றுச்சூழல் தொடர்பராமரிப்பு போன்ற வழக்குகளில் தவறான தீர்ப்புகளுக்கு முழுக்க முழுக்க அறியாமையே காரணங்களாக இருக்கின்றன. நிபுணர்களை வரவழைத்து கருத்துகளைக் கேட்க வழியிருக்கிறது என்றாலும், எப்போதாவதுதான் அப்படி கேட்கப்படுகிறது. வழக்கப்படியும் மரபுப்படியும் உச்ச நீதிமன்ற நீதிபதி என்பவர் ‘எல்லாம் தெரிந்தவராகவே’ கருதப்படுவதால் அவர் எதையும் யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இனி இல்லை என்ற எண்ணம் நிலவுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் பல தனிச்சிறப்பு வாய்ந்த நீதிபதிகள் இருக்கின்றனர். நேர்மையாளர்கள், துணிவானவர்கள், தங்களுடைய அறிவைப் பெருக்கிக் கொள்ள விழைவோர் என்று பலர். இப்படி விதிவிலக்காகப் பலர் இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் நிகழ்காலம், வருங்காலம்குறித்து நாம் நம்பிக்கையோடு இருந்துவிட முடியாது. ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட பிரச்சினை களுடன், நீதிபதிகள் விசாரிக்க வேண்டிய வழக்குகளின் சுமையும் அவர்களுக்குப் பணிப்பளுவை ஏற்றிவிடுகிறது. அதைவிட ஆபத்து, நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக சமீபத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள். இதன் விளைவாக உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் அரசுக்கு அதிக அதிகாரம் கிடைத்திருக்கிறது. பணிச்சுமை, அரசியல் அழுத்தத்துக்கு அடிபணிவது, வழக்கின் தன்மை புரியாதது, சில வேளைகளில் ஊழல்களுக்கு இரையாவது என்பவைதான் நமது உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய நிலை!

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்;

|தமிழில்: சாரி.|

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x