Published : 26 Mar 2015 09:05 AM
Last Updated : 26 Mar 2015 09:05 AM

நீரின்றித் தள்ளாடும் இந்தியா

அதிகரிக்கும் நீர்த் தேவை வரலாறு காணாத பஞ்சத்தில் இந்தியாவைத் தள்ளிவிடக் கூடும்.

இந்தியாவில் நீர் தொடர்புடைய சண்டைகள் கடந்த 20 ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குடிப்பதற்குத் நீர் இல்லை என்ற அவல நிலையுடன், விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நீரை மற்ற துறைப் பயன்பாட்டுக்குத் திருடுவதும் தினந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் நீருக்காக விவசாயிகள் கொலைகூடச் செய்யப்பட்டுள்ளார்கள்.

மத்திய நீர்வள அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஓர் ஆண்டில் பயன்படுத்தக் கூடிய நீரின் அளவு 11,21,000,00,00,000 கன மீட்டர். இவற்றில் 6,90,000,00,00,000 கன மீட்டர் நீரைப் பூமிக்கு மேற்பகுதியிலுள்ள ஆறுகள் மற்றும் குளங்கள் மூலமாகவும், 431,000,00,00,000 கன மீட்டர் நீரைப் பூமிக்கு அடியிலிருந்து கிணறுகள் மூலமாக எடுத்துப் பயன்படுத்த முடியும். ஆனால், தொடா்ந்து அதிகரித்துவரும் மக்கள்தொகையாலும், விவசாயம் மற்றும் தொழில்துறைகளில் ஏற்பட்டுவரும் வேகமான மாற்றங்களாலும், நீரின் தேவை பல மடங்கு உயா்ந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, மத்திய நீர்க் குழுமம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தத் நீர்த் தேவை, நம் நாட்டின் நீர் இருப்பைவிட அதிகரித்துவிடும். அப்படியென்றால், நம் நாட்டில் தற்போது நீர்ப் பஞ்சம் இல்லை என்று அர்த்தமில்லை.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பகுதிகளிலும் தற்போதே நீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது என்பதே உண்மை. எங்கெல்லாம் தனிநபர் பயன்பாட்டுக்காக ஒரு ஆண்டில் கிடைக்க வேண்டிய 1,700 கன மீட்டர் நீரைவிட குறைவாக நீர் கிடைக்கிறதோ அங்கே நீர்ப் பஞ்சம் உள்ளதாகக் கூறலாம். இதன்படி, இந்தியாவில் தற்போது ஏறக்குறைய 76% மக்கள் நீர்ப் பஞ்சத்தில் உள்ளார்கள். அதாவது, மத்திய நீர்க் குழுமத்தால் மொத்தமாக வகைப்படுத்தப்பட்டுள்ள 20 பெரிய ஆற்றுப் படுகைகளில், வெறும் 9 படுகைகளில் வசிப்பவர்கள் மட்டும்தான் தற்போது நீர்ப் பஞ்சத்தைச் சந்திக்காமல் உள்ளார்கள் என்பது கசப்பான உண்மை. தமிழகத்தில் ஒரு ஆண்டில் சராசரியாக தனிநபருக்குக் கிடைக்கும் நீரின் அளவு வெறும் 750 கனமீட்டர் என்பது மேலும் அதிரவைக்கிறது.

துறைவாரியான நீர்ப் பயன்பாடு

இந்தியாவில் தற்போது மொத்தமாகப் பயன்படுத்தப் படும் 6,34,000,00,00,000 கன மீட்டர் நீரில், ஏறக்குறைய 85% விவசாயத்துக்கும், 7% வீட்டு உபயோகத்துக்கும், 2% தொழிற்சாலைகளுக்கும், மீதம் இதரப் பயன் பாட்டுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், இந்தப் பயன்பாட்டில் பெரிய மாற்றங்கள் 2050 ஆண்டு வாக்கில் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நீரின் மொத்தத் தேவை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. விவ சாயத் துறையில் நீரின் பயன்பாடு 85%-லிருந்து 74% ஆகக் குறைந்து, தொழில் மற்றும் இதரப் பயன்பாடு களின் அளவு பன்மடங்காக அதிகரிக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நீரின் தேவை ஒவ்வொரு துறையிலும் பன்மடங்கு அதிகரிக்கப்போகிறது என்பது தான் இந்தப் புள்ளிவிவரங்கள் தரும் கடுமையான எச்சரிக்கை.

மீள்வது எப்படி?

இரண்டு வகையான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று நீர் ஆதாரத்தைப் பெருக்குவது, மற்றொன்று நீரைச் சேமித்துத் தட்டுப்பாட்டைப் போக்குவது. அணைகள் கட்டியும், புதிய குளங்களை வெட்டியும், ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தும் நீர் ஆதாரங்களின் கொள்ளளவை உயர்த்தலாம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், நீரின் கொள்ளளவை நினைத்தபோதெல்லாம் உயர்த்த எந்த மாநிலத்திலும் முடியாது. ஒரு நாட்டின் ‘மொத்த சாத்தியமான நீரின் அளவு’ வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். அதை மீறி அணைகள் கட்டுவதால், பொருளாதாரரீதியாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் அது உகந்ததாக அமையாது.

நீரைச் சேமிக்க நடவடிக்கை வேண்டும்

குறைந்துவரும் ‘சாத்தியமான நீரள’வைக் கருத்தில் கொண்டு, நீரைச் சேமித்து நீரின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டியது தற்போது அவசியம்.

ஏறக்குறைய 85% நீரைத் தற்போது பயன்படுத்திவரும் விவசாயத் துறையில், நீரைச் சேமிக்க பல்வேறு முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருக்கும் பழங்கால பாசன முறையில் நீர் உபயோகத் திறன் வெறும் 35% - 40% என்று கணக்கிடப்பட்டுள்ளது. நீரை வாய்க்கால் மூலமாகப் பயிர்களுக்கு நிலம் முழுவதும் கொடுப்பதால் ஏறக்குறைய 60% நீர் பல்வேறு வழிகளில் வீணாக்கப்படுகிறது. ஆனால், புதியதாகக் கொண்டுவரப்பட்டுள்ள சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் முறைகளின் மூலமாகக் குறைந்த பட்சம் 50% நீரைச் சேமிக்க முடிவதோடு 40% - 60% வரை அதிக மகசூலும், குறைந்த சாகுபடிச் செலவும், மின்சார சேமிப்பும் சாத்தியமாகும்.

நுண்நீர்ப் பாசனத் திட்டம்

மத்திய வேளாண் அமைச்சகத்தால் 2004-ல் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யில் அமைக்கப்பட்ட ‘நுண்நீர்ப் பாசனத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற் கான குழு’வின் மதிப்பீட்டின்படி, குறைந்தது 85 பயிர்களை இந்த நீர்ப் பாசன முறையின் கீழ் இந்தியாவில் லாபத்துடன் பயிர்செய்ய முடியும் என்றும், ஏறக்குறைய 7 கோடி ஹெக்டேர்கள் சாத்தியமான பரப்பளவாக இந்தியாவில் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. ஆனால், தற்போது ஏறக்குறைய 40 லட்சம் ஹெக்டேர்கள் மட்டுமே இந்த நவீனப் பாசன முறையைப் பயன்படுத்திவருகின்றன. இந்தப் பரப்பளவை அதிகரித்து, நீரைச் சேமிக்க முனைப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

இந்தியாவில் தற்போதுள்ள மொத்த நீர்ப்பாசனப் பரப்பான 9.2 கோடி ஹெக்டேரில், நிலத்தடி நீர்ப் பாசனத்தின் பங்கு ஏறக்குறைய 65%. நிலத்தடி நீர் தற்போது கட்டுப்பாடில்லாமல் உறிஞ்சப்படுவதால் நீர்மட்டம் வெகு வேகமாகக் குறைவதோடு, சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளும் அதனால் ஏற்படுகிறது. மத்திய அரசின் ‘நிலத்தடி நீர் வாரிய’த்தின் அறிக்கைகள் இதைக் கோடிட்டுக் காட்டியுள்ளன. ஆகவே, நிலத்தடி நீர் தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, திறனற்ற முறையில் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தினால், நீரைச் சேமித்து நீரின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.

வேகமாக மாறிவரும் காலநிலை மாற்றத்தால், மழையளவு குறைந்து தற்போது நிலவிவரும் நீர்ப் பஞ்சம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சுமார் 125 கோடி மக்கள்தொகையுடன், விவசாயத்தைப் பெரிதும் நம்பியுள்ள நம் நாட்டில், அதிகரித்துவரும் நீர்த் தட்டுப்பாடு சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை பெரிய அளவில் ஏற்படுத்திவிடும். நீர்த் தட்டுப்பாடு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வறுமையை அதிகரித்துவிடும். நீர் ஆதாரத்தைப் பெருக்கி நீர்த் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. நீர்த் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்குக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே, போர்க்கால அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை கள் மூலமாக முடிந்த அளவில் நீரைச் சேமித்து வளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

- அ. நாராயணமூர்த்தி, துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்

தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x