Published : 19 Mar 2015 10:42 am

Updated : 19 Mar 2015 10:42 am

 

Published : 19 Mar 2015 10:42 AM
Last Updated : 19 Mar 2015 10:42 AM

மறுக்கப்படும் சமூகநீதி: போராடுபவர்கள் பொய்யர்கள் அல்ல | உண்மையை மறைக்கலாமா?

கடந்த திங்கள் அன்று வெளியான கே. சந்துருவின் > ‘போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு’ என்ற கட்டுரைக்கு வந்திருக்கும் எதிர்வினைகளில் சில:

போராடுபவர்கள் பொய்யர்கள் அல்ல!

தலைமை நீதிபதியைச் சந்தித்த சமூக நீதிக்கான போராட்டக் குழுவின் அமைப்பாளர்கள் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளைத் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார் நீதிபதி சந்துரு. ஆனால், அந்தக் கோரிக்கைகள் குறித்து எந்தக் கருத்தையும் விளக்கத்தையும் தெரிவிக்காமல் தவிர்த்துவிடுகிறார்.


தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங் களில் ‘அதிகபட்சம்’ 69% இடஒதுக்கீடு என்று குறிப்பிட்டது சரியா? அது ‘குறைந்தபட்சமே’ தவிர, ‘அதிகபட்சமல்ல’; திறந்த போட்டியிலும் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே!

இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் ‘உரிமை’யே தவிர, ‘சலுகை’யல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே சமூக நீதிக்குத்தானே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் 15(4)(5) 16(4) இவையும்கூட எந்த இடத்திலும் ‘சலுகை’ என்று கூறவில்லையே.

வழக்கறிஞர்களின் போராட்டம்குறித்துக் கருத்துத் தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு. சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு போராட்டம் நடத்தும்போது அவர்களைப் ‘பொய்யர்களாக’ வர்ணிப்பது அவர் வகித்த பதவிக்குத் தகுதியாகுமா?

தலைமை நீதிபதி மேற்கொள்ளும் தந்திரத்தை நீதிபதி கே. சந்துரு மறைப்பானேன்? ஒரே பட்டியலாக அனுப்பினால், 6 உயர் சாதிக்காரர்கள் இருப்பது கண்ணை உறுத்தும் என்பதால், தனித்தனியாக அனுப்பினால் தெரியாது என்கிற தந்திரத்தை அவர் கையாளுகிறார் என்ற நிலையில் அவருக்காக வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமும் பின்னணியும் என்ன?

மாவட்ட நீதிபதிகள், முதுநிலை உரிமையியல் நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித் துறை நடுவர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை விவரமாக எழுதத் தெரிந்தவர், அகில இந்திய அளவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள்பற்றி புள்ளிவிவரங்களுடன் ஏன் எழுத முன்வரவில்லை? இந்தியா முழுமையும் 24 உயர் நீதிமன்றங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 24 என்பது குறித்துக் கவலை தெரிவித்திருக்க வேண்டாமா?

2014 ஜனவரியில் தயாரான 12 பேர் கொண்ட பட்டியலிலும் பார்ப்பனர் ஆதிக்கம்தான் தலைதூக்கி நிற்கிறது. அதில் பாதிப் பேருக்கு மேல் 10 முறைகூட உயர் நீதிமன்றங்களில் வழக்காடியவர்கள் இல்லை என்கிறபோது, எந்தத் தகுதியில் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு அவர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்?

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகுதானே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக உள்ளே நுழைய முடிந்தது?

-கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்உண்மையை மறைக்கலாமா?

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப் படுகிறவர்களின் தகுதிகள் குறித்துக் கருத்து வேறுபாடுகள், அதிருப்திகள் இருந்தாலும், 2013 டிசம்பரில்தான் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் களத்தில் இறங்கி, 12 பேர் அடங்கிய பட்டியலை விலக்கிக்கொள்ளுமாறு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அதில் 10 பேருக்கு அதுவரை இருந்திராத அளவுக்கு எதிர்ப்பு இருந்தது. அவர்களில் சிலருடைய பெயர்கள் இடம்பெற்ற விதம் குறித்துப் புகார்கள் இருந்தன. ஓரிரு வழக்குகளும் அந்தப் பட்டியலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டன. அதே பட்டியலைப் பராமரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் ஆணையிட்டது. அந்தப் பட்டியலில் குறைகள் இருப்பதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அதைத் திருப்பியனுப்புமாறு கூறியது. இதுவரை பிரதிநிதித்துவமே இல்லாத பிரிவினர், குறைந்த அளவே பிரதிநிதித்துவம் பெற்ற பிரிவினர்களைச் சேர்க்க வேண்டியதையும் வலியுறுத்தியது.

நன்கு சட்டப் பயிற்சி பெற்றவர்கள், அனுபவம் உள்ளவர்கள், தரமான ஆளுமை மிக்கவர்களுக்குத் தருவதை வழிகாட்டு நெறிகளாகச் சுட்டியது. ஒருசிலரின் கருத்துக்களை மட்டுமே ஏற்கும் விதத்தில் அல்லாமல், எதேச்சாதிகாரமாக முடிவு செய்யாமல் கலந்தாய்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றது. அதுவரை இருந்திராத வகையில் பட்டியல் நிராகரிக்கப்பட்டதே, தேர்வு முறை எப்படிப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது. அந்த முறையில் அறிவுபூர்வமான அணுகு முறையோ, வெளிப்படைத் தன்மையோ இல்லை. எனவே தகுதியற்றவர்கள், தகுதி போதாதவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

காலியிடங்களுக்கு உரியவர்களை ஒரே சமயத்தில் தேர்வு செய்யாமல், தனித்தனிப் பட்டியல்களாகத் தேர்வு செய்வதையும் எதிர்க்கிறோம். பெண்கள், சிறுபான்மைச் சமூகத்தவர்களுடைய பெயர்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஏற்கெனவே அதிக அளவுக்குப் பிரதிநிதித்துவம் பெற்றவர்கள் பற்றி நீதிபதி கே. சந்துருவின் கட்டுரை அதிகம் பேசவில்லை. சார்பு நீதிமன்றங்கள் பற்றி நிறைய புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன, பிரச்சினை அவற்றைப் பற்றியதல்ல. அவற்றிலும் தங்கள் தகுதி காரணமாகப் பதவி உயர்வு பெற்றவர்களும் அவரவர் சமூகத்துக்கான இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளது நியாயமே அல்ல.

பார்ப்பனர்கள், முதலியார், கவுண்டர்கள், பிள்ளைமார்கள் அதிக நியமனங்களைப் பெற்றிருப்பதை மறுக்கவே முடியாது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த 9 பேர் நீதிபதிகளாக இருப்பதைப் பட்டியல் காட்டுகிறது. அவர்களில் 3 பேர் ‘பார்’ மூலம் வந்தவர்கள் மற்ற 6 பேர் தங்களுடைய கடுமையான உழைப்பு, திறமை மூலம் பதவி உயர்வு பெற்றவர்கள், சாதி அடிப்படையில் பதவி பெற்றவர்கள் அல்லர். சார்புநிலை நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு விதிப்படி அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருப்பதற்கும் காரணம், சமூக நீதிக்கான போராட்டங்கள்தான். சமூக நீதி கடைப்பிடிக்கப்படாததால்தான் சமூகரீதியாக, கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றங்களில் இடம்பெற முடியாமல் இருக்கிறது.

- சி.விஜயகுமார், தலைவர், ஜனநாயகம், சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள்.

‘போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு’கே.சந்துருஎதிர்வினைகி.வீரமணிசி.விஜயகுமார்

You May Like

More From This Category

More From this Author