Published : 28 Mar 2015 08:56 AM
Last Updated : 28 Mar 2015 08:56 AM

வலியது வெல்லும்

ஆறு வாரங்களுக்கு மேல் நடைபெற்றுவந்த பரபரப்பான நாடகம் தற்போது முடியும் கட்டத்தை நெருங்கியிருக்கிறது. நாடக முடிவுக்குச் சற்று முன்னதாகவே களப்பலியாகியிருக்கிறது இந்திய அணி! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணிக்கு அடுத்ததாக இந்தியாவும் பலரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி யிருக்கிறது.

தொடர் தோல்விகளுக்குப் பிறகு, உலகக் கோப்பையில் நுழைந்த இந்திய அணிகுறித்து இந்திய ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கவில்லை. ஆனால், இந்திய அணியின் நம்ப முடியாத எழுச்சியைக் கண்டு ரசிகர்கள் பெருமளவில் ஊக்கம் பெற்றிருந் தார்கள். எனினும், ஆரம்பகட்ட எதிர்பார்ப்பு போலவே இந்த உலகக் கோப்பை துயர நாடகமாகவே ஆகிவிட்டது இந்திய அணிக்கு.

கிரிக்கெட் ஆடும் நாடுகளின் மாபெரும் திருவிழாவில் வழக்கம் போலவே பல வெற்றிக் கதைகளும் கண்ணீர்க் கதைகளும் அரங்கேறின. சாதனைகள் நொறுக்கப்பட்டன. பழைய புகழ்கள் சிதறடிக்கப் பட்டன. புதிய நாயகர்கள் தலையெடுத்தார்கள். ஆட்டத்தின் விதிகள் மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதே இல்லை. ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் அத்தகையது.

என்ன செய்யப்போகிறார்களோ என்னும் பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டு, பிறகு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இந்திய அணி நம்பிக்கை என்பது ஒரு நீர்க்குமிழியைப் போன்றது என்பதை நிரூபித் திருக்கிறது. தொடர்ந்து ஏழு ஆட்டங்களில் வெல்லும், ஏழு முறை எதிரணியை முற்றிலுமாக ஆட்டமிழக்கவைக்கும் என்று யாரும் எதிர் பார்க்காத அணி இதையெல்லாம் செய்து உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்த இந்திய ரசிகர்களைத் தன் சொதப்பல் ஆட்டத்தால் ஏமாற்றி யதார்த்தத்தையும் புரியவைத்தது. நாடகத்தின் உச்சக் காட்சியை உணர்ச்சியே இல்லாமல் பார்க்கும் நிலைக்கு இந்தியர்களைத் தள்ளிவிட்டார்கள் தோனி அணியினர்.

ஆஸ்திரேலியா மிகவும் தன்னம்பிக்கையுடனும் கவனத்துடனும் சிறிதும் பதற்றம் அற்ற மனநிலையுடனும் ஆடி வென்றது. அந்த அணிக்கு ஒரு திட்டம் இருந்தது. அதைச் சரியாக அது அமல்படுத்தவும் செய்தது. யதார்த்தமான மதிப்பீட்டில் ஆஸ்திரேலியாவைவிடவும் திறமை குறைந்த இந்திய அணி, தன் திறமைகளையெல்லாம் திரட்டித் தன்னம்பிக்கையுடன் போராடினால்தான் போட்டி என்ற ஒன்றே சாத்தியமாகும் என்ற நிலையில், இந்திய அணி பதற்றத்தையே வெளிப்படுத்தியது. தோல்வி என்பது சகஜம் என்பதுபோலவே ஆடியது.

யதார்த்தமான மதிப்பீடுகள் இன்றி உணர்ச்சி அடிப்படையிலான எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்; ஆத்திரமடைந்தார்கள். ஆடுகளத்தின் மையத்தைத் தேசபக்தியின் உருவகமாகக் காணும் உணர்ச்சி மிகுந்த அவர்களது ஆத்திரத்துக்குத் தொலைக்காட்சித் திரைகளும் அனுஷ்கா ஷர்மா போன்ற அப்பாவிகளும் இலக்கானார்கள். கிரிக்கெட்டின் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளாதவரையில் பொருத்தமற்ற இத்தகைய உணர்ச்சி வெளிப்பாடுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

ஆறு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையில், இந்தியா இந்த அளவுக்கு ஆடியதே பெரிய விஷயம் என்னும் உண்மையைப் புரிந்து கொண்டு, இதைக் கடந்து செல்லும் பக்குவம் இந்திய ரசிகர்களுக்கு எப்போது வருமென்று தெரியவில்லை. மேலும், உணர்ச்சிகளை மீறி அறிவுபூர்வமாக கிரிக்கெட்டைப் பார்ப்பவர்கள் திறமை மிக்க அணிகள் வெல்வதையே வரவேற்பார்கள். ஆகவே, இந்தியத் தோல்வியின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் ஆஸ்திரேலிய வெற்றியை வரவேற்பதுதான் கண்ணியமான விளையாட்டுக்குப் பெருமை சேர்க்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x