Published : 02 Mar 2015 09:08 AM
Last Updated : 02 Mar 2015 09:08 AM

பொருளாதாரத்தை தூண்டிவிட முயற்சி

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழுமையான முதல் பட்ஜெட்டை (2015-16) மிகவும் கவனமாகத் தயாரித்து அளித்திருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. தொழில், வர்த்தகத் துறையின் வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்பு போன்றவற்றுக்குப் பலனளிக்க முயற்சி செய்திருக்கிறார். அதே வேளையில், நிதிப் பற்றாக்குறை கட்டுமீறிப் போய்விடக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

மாத சம்பளக்காரர்கள் எதிர்பார்த்தபடி வருமான வரி விலக்கு வரம்பைக் கணிசமாக உயர்த்திவிடவில்லை. அதே வேளையில், வருமான வரிச் சலுகை பெற ஓய்வூதியத் திட்டத்திலும் மருத்துவ, பொதுக் காப்பீட்டுத் திட்டங்களிலும் சேமிப்பிலும் முதலீடு செய்ய ஊக்குவிப்புகளை அளித்திருக்கிறார். தங்கத்தை முதலீடு செய்து அதற்கு வட்டி பெறும் திட்டத்தை அறிவித்துள்ளார். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டைச் சிறிதளவு அதிகரித்திருக்கிறார். பெருநிறுவனங்கள் மீதான வரியை 30%-லிருந்து 25% ஆகக் குறைத்திருக்கிறார். அடுத்த 4 ஆண்டுகளுக்கு இதே வரிவிகிதம் தொடரும் என்று உறுதியளித்திருக்கிறார்.

கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவரவும் புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்று அறிவித்துள்ளது, இந்த நிதிநிலை அறிக்கையின் வரவேற்புக்குரிய அம்சங்களில் ஒன்று. வெளிநாடுகளில் சொத்துகளையும் பணத்தையும் மறைத்துவைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மறைத்த சொத்து மதிப்பைப் போல 300% அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.

நேர்முக வரிகளைவிட மறைமுக வரிகள்மூலம்தான் அதிக நிதியைத் திரட்ட அருண் ஜேட்லி உத்தேசித்திருக்கிறார். சேவை வரி 14% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு நிதி திரட்ட 2% கூடுதல் தீர்வை விதிக்கும் முடிவும் சேவை வரி உயர்வும் ஏழை, நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையைத்தான் அதிகரிக்கும். வருமான வரி விலக்கு வரம்பை மேலும் உயர்த்தாததால் நடுத்தர வர்க்கத்தினர் இந்த அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான இறக்கு மதி வரியை உயர்த்தும் முடிவால் அவற்றின் விலை மேலும் உயர்வதுடன் பணவீக்கத்தையும் அதிகப்படுத்தும். நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில அறிவிப்புகளின் உண்மையான தன்மை வெளிப்படும்போதுதான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் வரிச்சுமை தெரியவரும்.

இந்த நிதிநிலை அறிக்கை, நடுத்தர கால வளர்ச்சியைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 8.1% முதல் 8.5% வரை இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015-16-ல் அரசின் நிதிப் பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 3.9%-க்குள் இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2016-17-ல் இதை வெறும் 3% ஆகக் குறைத்துவிட வேண்டும் என்ற லட்சியம் மேலும் ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தொழில்துறையில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஏற்பட தனியார் துறையிடமிருந்து அதிக முதலீடு வராததால் அரசே அந்த வேலையைத் தொடங்கியிருப்பதைத்தான் இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது. எனவேதான் பற்றாக்குறை பற்றி அதிகம் கவலைப்படாமல் செலவுகள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசு நிதியைச் செலுத்திப் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கினால் தனியார் துறையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பிறகு சேர்ந்துகொள்ள முடியும் என்ற நோக்கில் இந்தச் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாநிலங்களுக்கு மத்திய நிதித் தொகுப்பிலிருந்து ஒதுக்கப்படும் தொகையின் அளவு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அத்துடன் இன்னின்ன துறைகளில்தான் செலவு செய்ய வேண்டும், இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்ற வரம்புகளை மத்திய அரசு நீக்கிவிட்டது. ‘கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற தத்துவ அடிப்படையில் மாநில அரசுகள் தங்களுக்கு உகந்த, தங்களுக்கு அவசியப்பட்ட இனங்களில் செலவு செய்ய சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான முதலீடு அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் கிராமங்களுக்குத் தேவைப்படும் அடித்தளக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிரந்தரமான, சமுதாயச் சொத்துகளை உருவாக்கவும் இத்திட்டத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயுவுக்கான மானியத்தைப் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக வழங்கியதைப் போல எதிர்காலத்தில் எல்லா மானியங்களையும் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

வரிகள் மூலம் வருவாய் 18% அளவுக்கு உயரும் என்று அரசு எதிர் பார்க்கிறது. 2015-16-வது நிதியாண்டில் வரி இனங்கள் மூலமான வருவாய் மேலும் ரூ.1.4 லட்சம் கோடி அதிகரிக்கும் என்று ஜேட்லி எதிர்பார்க்கிறார். சேவை வரியையும் உற்பத்தி வரியையும் உயர்த்தியிருப்பதால் அதிக வருவாய் கிடைக்கும் என்பதே எதிர்பார்ப்பு. அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளைச் சந்தையில் விற்பதன் மூலம் ரூ.69,500 கோடி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. கடந்த காலங்களில் இப்படி அரசுத் துறை நிறுவனப் பங்குகளை விற்கும்போது இலக்கு நிர்ணயிப்பதும் அதை அடைய முடியாமல் குறைவதுமே வழக்கமாக இருந்துவருகிறது. நிறுவனங்கள் மீதான வரியை 30%-லிருந்து 25% ஆகக் குறைத்திருப்பதும், வங்கிகள் தரும் கடனுக்கான வட்டி வீதம் மேலும் குறைய வாய்ப்பிருப்பதும் தொழில்துறை முதலீட்டை மேலும் ஊக்குவிக்கும்.

நாட்டின் கிழக்குப் பகுதியைப் பொருளாதாரரீதியாக வளப்படுத்த மேற்கு வங்கத்துக்கும் பிஹாருக்கும் சிறப்பு நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஜேட்லி. அவ்விரு மாநிலங்களிலும் விரைவில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த அறிவிப்பின் நோக்கம் பொருளாதாரமா, அரசியலா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இவ்வளவு விரிவாக சிந்தித்துத் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், விவசாயத் துறைக்குப் போதிய கவனம் செலுத்தாமல் விட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. விவசாயத் துறைக்கான கடன் நிதி ஒதுக்கீட்டைச் சிறிதளவு உயர்த்தியதைத் தவிர முக்கியமான பெரிய திட்டம் ஏதும் இல்லை. விவசாய நிலங்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க மாற்று வழிகளை யோசித்திருக்க வேண்டும். பாசன வசதிகளை மேம்படுத்தவும் மழை நீர் சேகரிப்புக்கும் பெருந்திட்டங்களை அறிவித்திருக்கலாம். உர மானியத்தையும் நேரடியாக விவசாயிகளுக்குக் கிடைக்கும்படி அறிவிக்கலாம் என்ற யோசனையை அரசு பரிசீலித்ததாகத் தெரியவில்லை. பெருநிறுவனங்களுக்குக் காட்டப்படும் பரிவில் சிறு அளவுகூட விவசாயத்துக்குக் காட்டப்படவில்லை என்பது, இந்த நிதிநிலை அறிக்கை யாருக்கானது என்பதைத் தெளிவாக உணர்த்திவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x