Published : 02 Feb 2015 09:33 AM
Last Updated : 02 Feb 2015 09:33 AM

வன்முறை ஏற்படுத்தும் பொருளாதார இழப்பு

உலகில் வன்முறை ஏற்படுத்தும் இழப்புதான் மிகவும் அதிகம். உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் ஏற்படும் 11% இழப்பு வன்முறைச் சம்பவங்களால் ஏற்படுகிறது.

சிரியா, சூடான் போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போர்களும், கலகங்களும் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. உள்நாட்டுப் போர்கள் பெரிய அளவிலான உயிரிழப்புகளுக்கும், மக்கள் அகதிகளாக்கப்படுவதற்கும் வித்திடுவது மட்டுமல்லாமல், அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பல ஆண்டுகளுக்கு முடக்கியிருக்கின்றன. அந்த நாடுகளில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் உண்மையிலேயே உலக நாடுகள் கவனிக்க வேண்டிய மிகப் பெரிய பிரச்சினை என்பதை மறுக்க முடியாது.

ஒவ்வொரு உள்நாட்டுப் போரிலும் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. உள்நாட்டுப் போரில் கொல்லப்படுபவர்கள் மட்டுமல்லாது, தாக்குதல்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் அச்ச உணர்வு ஆகியவற்றின் பின்னணியில், உள்நாட்டுப் போர்கள் மூலம் ஏற்படும் இழப்பின் உண்மையான மதிப்பைக் கணக்கிட்டால், அது உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4%ஐ விட அதிகம் என்பது தெரியவரும். சஹாரா பாலைவனத்தின் தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளில் நடக்கும் குற்றங்கள் அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% இழப்பை ஏற்படுத்துகின்றன.

இந்தக் குற்றச் சம்பவங்களால், அந்தப் பிராந்தியத்தில் ஆண்டுதோறும் 86 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. அதைவிட முக்கியமான விஷயம், இந்த வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க முடிந்தால், இன்னும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை அந்நாடுகள் அடைந்திருக்க முடியும் என்பதுதான். உண்மையில், வன்முறைச் சம்பவங்களில் கொலைதான் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில்லை. அதைவிட மோச மான பிரச்சினைகள் பல இருக்கின்றன. முதல் பிரச்சினை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தான்.

பல குழந்தைகள் வன்செயல்களின் பாதிப்பை நேரடியாகச் சந்திக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் 15% குழந்தைகள் உடல்ரீதியான சித்தரவதைகளை அனுபவிக்கிறார்கள் என்று ஐ.நா. சபை தெரிவிக்கிறது. சஹாரா பகுதி நாடுகளில் 12 கோடிக் குழந்தைகள் உட்பட உலகமெங்கும் 29 கோடிக் குழந்தைகள் இத்தகைய வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.

குழந்தைகள் மீதான வன்முறை ஏற்படுத்தும் பொருளாதாரப் பாதிப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் பொருளாதார நிபுணர்கள், இத்தகைய குழந்தைகளின் எதிர்கால வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். எகிப்தில் மட்டும் இந்த வகையான பொருளாதார இழப்பின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடி என்கிறார்கள் நிபுணர்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களும் உலக அளவில் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சஹாரா பகுதி நாடுகளில் கடந்த ஆண்டு மட்டும் 28%-க்கும் அதிகமான பெண்கள் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களால் எகிப்தில் மட்டும் ஆண்டுதோறும் ரூ. 4 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், எகிப்தில் ஆண்டுதோறும் ஏற்படும் பொருளாதார இழப்பின் மதிப்பு ரூ. 9 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.

இந்தப் பகுதிகளில் மதுவிற்பனை தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவதன் மூலமும் வன்முறைத் தாக்குதல்களைக் குறைக்க முடியும். பிரிட்டனில் இப்படியான நடவடிக்கை, வன்முறைச் சம்பவங்களைக் குறைத்திருக்கிறது.

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த உகாண்டாவில் ‘சாஸா’(ஸ்வாஹிலி மொழியில் ‘இப்போதே’என்று அர்த்தம்) எனும் திட்டம் செயல்படுகிறது. இது வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறது. இதுபோன்ற திட்டங்களால் நிச்சயம் நன்மை ஏற்படும் என்றாலும், செலவழிக்கும் ஒவ்வொரு டாலரும் இந்தத் திட்டங்களுக்கு எப்படிப் பயன்படுகின்றன என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

டெய்லி நியூஸ் - எகிப்து நாளிதழ் தலையங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x