Published : 04 Feb 2015 08:53 AM
Last Updated : 04 Feb 2015 08:53 AM

ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்!

கனடா நாட்டின் ஆல்பர்டா பிரதேசத்திலிருந்து அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்காவுக்குக் குழாய் மூலம் எண்ணெய் கொண்டுவரும் ‘கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன்’ திட்டத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் தந்துவிட்டது. செனட் ஒப்புதல் தந்தாலும் தனக்குள்ள ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதை ரத்துசெய்துவிடுவேன் என்று அதிபர் பராக் ஒபாமா எச்சரித்தும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 62 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 36 பேர் எதிர்த்தும் வாக்களித் துள்ளனர். ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களில் 9 பேர் ஆதரித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் 1,900 கி.மீ. தொலைவுக்குக் குழாய் வழியாக எண்ணெய் கொண்டுவரப்படவுள்ளது. தினமும் 8,30,000 பீப்பாய் எண்ணெய் இதன் மூலம் பெறப்படும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 40,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று இந்தத் திட்டத்தின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதிக அளவுக்குக் கரி மாசு காற்றில் கலக்கும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு இந்தத் திட்டத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், அப்படியெல்லாம் வேலைவாய்ப்பு பெருகிவிடாது என்றும் சுற்றுச்சூழல் ஆதரவாளர்களின் தரப்பு கூறுகிறது. எண்ணெயைக் கொண்டுவரும் குழாய்ப் பாதை ஆபத்தில்லாதது என்பதால், இதில் ஆட்சேபிக்க எதுவுமில்லை என்பது இந்தத் திட்டத்தின் ஆதரவாளர்களுடைய நிலைப்பாடு.

சமீப காலமாக இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விவாதங்களின் போது ஆக்கபூர்வமான சில திருப்பங்களும் ஏற்பட்டுள்ளன. முதல்முறையாக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் புவி வெப்பமாதல்குறித்தும் பருவநிலை மாறுதல்குறித்தும் கவலையுடன் பேசியுள்ளது ஆறுதல் அளிக்கும் மாற்றம். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தவிர, மற்ற அனைவருமே தொழிற்சாலைகள் வெளியேற்றும் கரிப் புகையாலும் இதர வகை மாசுகளாலும் பருவநிலை மாறிக்கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டார்கள்.

பருவநிலை மாற்றத்துக்கு மனிதர்கள்தான் முதல் காரணம் என்பதைப் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டிருந்தாலும், அது தொடர்பான சட்டத் திருத்தத்துக்குத் தேவையான வாக்குகள் கிடைக்காதது வருத்தத்துக்குரியது. பருவநிலை மாற்றம் தொடர்பாக, வளர்ந்துவரும் நாடுகளுக்கு எப்போதும் அறிவுரை கூறிவரும் அமெரிக்காவின் இரட்டை வேடம் இங்கே பல்லிளிக்கிறது. மனிதர்களின் பங்கை ஒப்புக்கொண்டால் அதில் அமெரிக்காவின் பங்கு கணிசமானது என்பதை ஒப்புக்கொள்வது போலாகிவிடுமல்லவா? அப்படி ஒப்புக்கொள்வது, உலகத் தொழில் துறையில் நிலவும் தனது ஏகாதிபத்தியத்துக்குத் தானே முட்டுக்கட்டை போடுவது போலாகிவிடும் என்பதுதான், அமெரிக்கா போடும் இரட்டை வேடத்துக்குக் காரணம். இந்த லட்சணத்தில்தான், கரிப் புகை வெளியீட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளை இந்தியா போன்ற நாடுகள் எடுக்க வேண்டும் என்றும், அதற்கான தொழில்நுட்பத்துக்கு உடனடியாக மாற வேண்டும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்துக்கொண்டிருக்கிறது.

தொழில் வளர்ச்சிக்காக நாம் தரும் விலை மிக அதிகம் என்பதை யாரைவிடவும் நன்றாக உணர்ந்திருக்கும் அமெரிக்கா, இந்த விஷயத்தில் இனியும் பாராமுகமாக இருந்துவிடலாகாது. எப்போதும் பிற நாடுகளை நோக்கி நீளும் அமெரிக்காவின் சுட்டுவிரல் தன்னை நோக்கித் திரும்ப வேண்டிய காலமிது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x