Last Updated : 13 Feb, 2015 10:03 AM

 

Published : 13 Feb 2015 10:03 AM
Last Updated : 13 Feb 2015 10:03 AM

ஆண்டவன் நின்று கேட்பான்!

நிம்மதி தேடிச் செல்லும் கோயில்களில் நடக்கும் கசப்பான நிகழ்வுகளின் பதிவு!

அப்போதுதான் அறுவடையாகியிருந்தது. அறுவடை செய்யும் இயந்திரங்கள் குறுகிய சாலைகளை அடைத்துக்கொண்டிருந்தன. ஆனாலும், கோயில்களைத் தேடிப் பயணம் செல்வது மிகவும் சுகமாக இருந்தது.

வெயில் அதிகமாக இல்லாமல், மேகம் மூடிய தமிழ்நாட்டு வானம் தரும் இதம் இந்தியாவில் எங்கும் கிடைக்காதது.

ஆந்திராவிலிருந்து தமிழகக் கடலோரம் வரை இருப்பவை அறுபது கோயில்கள். மலை உச்சிகளிலும், நகர நெருக்கடிகளுக்குள்ளும், பசிய வயல்களுக்கிடையேயும், கடல் அலைகள் சுவர்களை நனைக்கத் தொடர்ந்து ஈரமாகிக்கொண்டும் இயங்கிவருபவை. குறைந்தது பன்னிரண்டு நூற்றாண்டுகள் வாழ்ந்துகொண்டிருப்பவை. காலம் தரும் முதுமையின் சுவடுகளை மக்களின் உதவி கொண்டு திரும்பத் திரும்ப அழித்துக்கொண்டு, கம்பீரத்துடன் அமைதியாக வயதாகிக்கொண்டிருப்பவை. உலகின் எந்த நாட்டிலும் இந்த அதிசயம், அதிகப் பரபரப்பு இல்லாமல் செய்யப்படும் அதிசயம், நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. இத்தாலி பிரிட்டன் போன்ற நாடுகளிலும் பழைய தேவாலயங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் பல பழமையின் எச்சங்களே தவிர, உயிரோடு இயங்கும் அமைப்புகள் அல்ல. தமிழர்கள் பலருக்கு இது அதிசயம் என்பது தெரியாது. அவர்களுக்குத் தெரியாததனாலேயே இது தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது என்று சிலர் நினைத்தாலும் அவர்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

எல்லா கோயில்களிலும் சதாரண மக்களின் பக்தி என்னை வியக்க வைத்தது. பற்றுடை அடியவர்களுக்கு எளியவன் என்ற நம்மாழ்வாரின் வரியை என்னைத் திரும்பத் திரும்ப நினைக்க வைத்தது. ஆனால், பெரும்பாலான கோயில்களில் மக்கள் ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை. மந்தைகள் போல நடத்தப்படுகிறார்கள். சுரண்டுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு குறைந்தபட்ச அளவிலாவது அடிப்படை வசதிகளைச் செய்து தர முடியும். ஆனால், சில பெரிய கோயில்களைத் தவிர, மற்ற கோயில்கள் எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருக்கின்றன.

மலைக் கோயில்

சோளிங்கர் கோயிலுக்குச் செல்ல 1,300 படிகள் ஏற வேண்டும். போகும் வழியில் அமைக்கப்பட்டிருக்கும் கூரை, படி ஏறுபவர்களைக் கதிரவனிடமிருந்து காப்பாற்றுகிறது. ஆனால், உச்சியை அடையும் வரையில் கழிப்பறை வசதி கிடையாது. இடையில் இருக்கும் கழிப்பறைக் கட்டிடங்கள் பத்திரமாகப் பூட்டப்பட்டிருந்தன. மேலே ஏறினால், கருவறையை அடைவதற்கு ஒடுக்கமான கூண்டுகள் வழியாகச் செல்ல வேண்டும். சிறிது பருமனாக இருந்தால் பக்கவாட்டில்தான் செல்ல முடியும். தீ விபத்து நேர்ந்தால் மலை உச்சியிலிருந்து கீழே வராமலே நேராக மேலுலகம் சென்றுவிடலாம். இந்த வழி மனிதர்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. செல்லும் வழியெல்லாம் குரங்குகள். கருவறைக்கும் சில குரங்குகள் கூடவே வந்தன. அனுமனின் வழித்தோன்றல்களாக இருக்கலாம். சிரிப்பையே அறியாத அர்ச்சகர்கள். இறைவன் அடியில் இருக்கிறோம் என்ற எண்ணம் நம்மிடம் இருந்தாலும், அர்ச்சகர்களின் பார்வை அந்த எண்ணத்தை உறிஞ்சி எடுத்துவிடும்.

அரங்கனும் ஆடலரசனும்

அரங்கன் கோயில் மிகவும் சுத்தமாக இருக்கிறது. ஆனால், மனம் வெளுத்தவர்களை கோயிலைப் பராமரிப்பவர்களிடையே காண்பது அரிதிலும் அரிது. எல்லா இடங்களிலும் கூட்டம். பணம் இருந்தால் கூட்டத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. கரை வேட்டி கட்டியிருந்தால், அரங்கனே என்னை வந்து பார்க்க வேண்டும் என்று ஆணையிடலாம். அர்ச்சகர்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்தால், தடைகள் எளிதாக விலகிவிடும். ஒழுங்காக வரிசையில் நின்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்குத்தான் பல தடைகள். எப்போது நடை திறப்பார்கள், எப்போது மூடுவார்கள் என்பதைக் கோயிலில் திருநாட்கள் நடக்கும் நாட்களில் கண்டுபிடிப்பதே கடினம். நாங்கள் சென்ற அன்று, தடைகளையும் வரிசைகளையும் மீறிச் சிலர் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் கரை வேட்டிக்காரர்கள் சிலர்; மடிசார் புடவை கட்டியிருந்த மூதாட்டி ஒருவர்; வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று அறிவித்துக்கொண்டிருந்த உடைகள் அணிந்த பெண்கள் இருவர்.

“யார் இவர்கள்?” என்று வரிசையில் நிற்கும் பெண் கேட்டார்.

முன்னால் நின்றுகொண்டிருந்த இளைஞர் உடனே சொன்னார், “உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் ரங்கநாதனின் சொந்தக்காரர்கள்.”

சிதம்பரத்தில் இருக்கும் ஆடலரசன் கோயிலுக்கு வருபவர்களில் சிலர், அதைத் தங்கள் சொந்தக்காரர் வீடாக - குறிப்பாக வீட்டுக் கழிப்பறையாக - நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம், அதன் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வருபவர்களுக்கு வந்தால், அவர்கள் மீது நம்மால் கோபம் கொள்ள முடியாது. ‘சிவ சிவ’ என்று பெரிதாக எழுதப்பட்டிருந்த சுவரின் கீழ் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தவர்களைக் கண்டு அவர்களுக்கு ஆத்திரம் வந்தால், சற்று தொலைவில் ‘சிவ சிவ’ என்று எழுதப்பட்டிருக்கும் காவி வேட்டியைக் கட்டியிருக்கும் ஒருவர் நின்றுகொண்டே அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும் நிலையைக் கண்டால் அவரைச் சிவலோகத்துக்கு உடனே அனுப்பிவிடலாம் என்ற எண்ணம் வரலாம்.

சீர்காழிக் கோயில்கள்

சீர்காழியைச் சுற்றி ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பல கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் பல கோயில்களில் மதியத்துக்குப் பிறகே நடை திறக்கப்படுகின்றன. கோயில் பிரகாரங்களில் ‘குடி’ மக்கள் கணிசமாகப் புழங்குகிறார்கள் என்பதற்கு ஆதாரமாகப் பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு கோயிலில் அர்ச்சகர் வரவேயில்லை. கோயிலின் காப்பாளர் கருவறையின் கதவைத் திறந்து காட்டினார். மற்றைய கோயில்களின் அர்ச்சகர்கள் விவரித்ததைவிட மிக அழகாகக் கோயிலைப் பற்றிச் சொன்னார். ‘நீங்களே தீர்த்தம் எடுத்துக்கொள்ளுங்கள். நான் தொடக் கூடாது’ என்றார். ‘நீங்கள் தொடக் கூடாது என்றால், நாங்களும் தொட அருகதை அற்றவர்கள்’ என்று சொல்லி வெளியே வந்தோம்.

வரலாற்றுச் சிறப்பு

நமது கோயில்களில் வரலாறு புதைந்து கிடக்கிறது. கல்வெட்டுகளில் மறைந்து கிடக்கிறது. ஒவ்வொரு கோயிலின் வரலாற்றையும் மிகுந்த சுவையுடன் சொல்ல முடியும். எழுத முடியும். கோயிலின் வரலாற்றுடன் அது இருக்கும் நிலத்தின் வரலாறும் பிணைந்திருப்பதை மாணவர்களுக்கு விளக்க முடியும். உதாரணமாக, திருவெள்ளறைக் கோயிலில் பல்லவர் காலத்திலிருந்து தொடர்ச்சியாகக் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டு வந்திருக்கின்றன என்பதை நமது கட்டிடக் கலை பற்றிச் சிறிது தெரிந்தவர்களால்கூடச் சொல்ல முடியும். ஆனால், கோயிலில் இருப்பவர்களைக் கேட்டால், அவர்கள் தலபுராணத்தைப் பற்றிச் சொல்கிறார்களே தவிர, வரலாற்றுப் பிரக்ஞையுடன் பேசுவதில்லை. ‘இந்தக் கோயில் ஆறாயிரம் வருடங்கள் பழமையானது’ என்று அவர்கள் தொடங்கும்போது, இவர்களுடன் பேசி எந்தப் பலனும் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கதை மிகச் சில மாறுதல்களுடன் எல்லாக் கோயில்களிலும் சொல்லப்படுவது நமக்கு வரலாறுபற்றிய புரிதலே இல்லை என்பதையே காட்டுகிறது.

அறுபது கதைகள்

அறுபது கோயில்களிலும் அறுபது கதைகள் எனக்குச் சொல்லப்பட்டன. எல்லாம் கொள்ளையைப் பற்றிய கதைகள். அர்ச்சகர்களும், தர்மகர்த்தாக்களும், அரசு அதிகாரிகளும் கூட்டணியாகவும் தனித்தனியாகவும் இயங்கி, கோயில் சொத்துகளைக் கொள்ளை அடிக் கிறார்கள் என்பது வெவ்வேறு விதமாகச் சொல்லப்பட்டது. அறுபது கோயில்களில் நடக்கின்றவைதான் அனைத்திலும் நடக்கின்றன என்பது மக்களுக்குத் தெரியும். ‘ஆண்டவன் நின்று கேட்பான்’ என்ற எண்ணத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

அனைத்துக் கோயில்களிலும் ஆண்டவன் இன்று வரை நின்றுகொண்டுதான் இருக்கிறான்.

- பி.ஏ. கிருஷ்ணன்,

புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x