Published : 02 Feb 2015 09:02 AM
Last Updated : 02 Feb 2015 09:02 AM

பொறுப்புகளே இல்லாத தலையீடு!

மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சராகத் தான் பதவி வகித்த போது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய அமைச்சகத்தின் செயல்பாட்டில் தலையிட்டதைப் பட்டியலிட்டுக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஜெயந்தி நடராஜன் எழுதியுள்ள பரபரப்பான கடிதம் இப்போது பெரிதும் பேசப்படுகிறது.

வெகு காலத்துக்கு முன்னரே காங்கிரஸாருக்குத் தெரிந்திருந்த ஒரு தகவலைத்தான் ஜெயந்தி நடராஜன் இப்போது அந்தக் கடிதம் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முடிசூடா மன்னராகத் திகழும் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூ. அரசின் நிர்வாகத்தில் அடிக்கடி தலையிட்டுவந்தார்; முதல் 5 ஆண்டு களைவிட, அடுத்த 5 ஆண்டுகளில் அவருடைய தலையீடு அதிகமாக இருந்தது. பழங்குடிகள், மலைவாழ் மக்களிடையே பேசும்போது, “உங்களில் ஒருவன் நான், உங்களுடைய நலனைக் காக்கவே நான் இருக்கிறேன்” என்று பேசுவார்; எனவே, அவரது தலையீட்டால் பல தொழில்திட்டங்களை முடக்க நேர்ந்தது. நிறைய தொழில்திட்டங்கள் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருந்த நேரத்தில் வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஜெயந்திக்குக் கட்டளையிடப்பட்டது. அதையடுத்து, “தொழில்களைத் தொடங்க இதுநாள்வரை தடையாக இருந்தவை நீக்கப்பட்டுவிட்டன” என்று ராகுல் காந்தி கூறினார். உண்மையில், ராகுல் யார் தரப்பில் நிற்கிறார் என்றே தெரியாத நிலை. இத்தகைய நிலைப்பாடுகளைப் பல விஷயங்களில் எடுத்திருக்கிறார் அவர். இவைதான் ஜெயந்தி நடராஜனின் பிரதானமான குற்றச்சாட்டுகள்.

ஒரு சட்டம் தொடர்பாகவோ, திட்டம் தொடர்பாகவோ அரசியல் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பே. ஆனால், அதையெல்லாம் கட்சிக்குள் முறையாக விவாதித்து, கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவு காணப்பட வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இந்த ஜனநாயக நடைமுறையெல்லாம் கிடையாது. கட்சித் தலைமை என்ன நினைக்கிறதோ, பேசுகிறதோ, எதை ஆதரிக்கிறதோ அதுதான் கொள்கை, நிலைப்பாடு, திட்டம் என்றெல்லாம் ஆகிவிட்டது.

ஐ.மு.கூ. அரசு பதவிக்கு வந்த நாள்முதல், ஏதாவதொரு துறையின் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தியிடம் கட்சிக்காரர்கள் மன்றாடினார்கள். வெளியில் இருந்துகொண்டு கட்சியை வலுப்படுத்தவே விரும்புவதாக அவர்களுக்கு எல்லாம் ராகுல் பதிலளித்தார். அமைச்சர் பதவியென்றால் தனது நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதாலேயே அதைத் தவிர்க்கப் பார்க்கிறார் என்று கட்சிக்குள்ளேயே பேச்சு உலவியது. இதையெல்லாம் உறுதிப்படுத்தும் விதத்தில்தான் ஜெயந்தி நடராஜனின் கடிதமும் இருக்கிறது.

மோடி அல்லது அமித் ஷாவின் தூண்டுதலில்தான் ஜெயந்தி இப்போது இப்படிப் பேசுகிறார் என்றும் சி.பி.ஐ. தன்னை நெருங்கிவிடுமோ என்ற அச்சத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வீசுகிறார் என்றும் காங்கிரஸ் தரப்பில் எதிர்க் குரல்கள் வருகின்றன. ஜெயந்தி, தான் செய்தவற்றைத் தவறு என்றோ, அவற்றைச் செய்யாமல் இருக்கத் தான் முயன்றதாகவோ தெரிவிக்கவில்லை. கட்சித் தலைமையின் சொல்படி செயல்பட்டும், தன்னைப் பதவியிலிருந்து விலக்கி, பழியைத் தன் மீது போடுவானேன் என்றுதான் கேட்டிருக்கிறார்.

பொறுப்புகளைத் துணிந்து ஏற்கத் தயங்குபவர்கள், திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு நூலை இழுத்தபடி நாடகத்தின் எல்லாக் காட்சிகளையும் தீர்மானித்துவிட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x