Last Updated : 19 Feb, 2015 09:00 AM

 

Published : 19 Feb 2015 09:00 AM
Last Updated : 19 Feb 2015 09:00 AM

அகராதிக்குப் புது வார்த்தை ‘மேன்ஸ்ப்ளெயின்’!

ஆங்கில அகராதிக்கு ஆஸ்திரேலியா இந்த ஆண்டு தந்திருக்கும் புதிய வார்த்தை ‘மேன்ஸ்ப்ளெயின்’ (Mansplain). உலகில் உள்ள எந்த நாட்டுப் பெண்ணும் இந்த வார்த்தையைக் கேட்டு வியப்படைய மாட்டார். காரணம், இதை அவர்கள் வாழ்க்கையில் பல தருணங்களில் நேரடியாக அனுபவித்திருப்பார்கள். உருப்படியான வேலை எதுவும் இல்லாத காலங்களில், இணையதளம் பல புதிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் திருப்பணியிலும் ஈடுபடுகிறது. மேன்ஸ்ப்ளெயின் என்ற வார்த்தை ஆஸ்திரேலிய ஆங்கிலத்துக்கான மெக்கயர் அகராதியில் ‘இந்த ஆண்டின் (2015) புதிய வார்த்தையாக’ அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சரி, இதற்கென்ன பொருள் என்று கேட்கிறீர்களா? ஷ்ஷ்ஷ்ஷ்… பொறுமையாகக் கேளுங்கள்.

ஒரு பெண்ணிடம், ஒரு ஆண் (அவளுக்கு எதுவும் தெரியாது என்ற பாவனையில்) ஒரு விஷயத்தை விளக்குவதுதான் மேன்ஸ்ப்ளெயின். சுருக்கமாகச் சொன்னால், ஆணாதிக்க நடவடிக்கையை விவரிக்கும் ஒற்றைச் சொல்! அந்தப் பெண் உண்மையில் அந்த ஆணைவிடப் படித்தவராகவும் விவரம் தெரிந்தவராகவும்கூட இருக்கலாம்.

ரெபேக்கா என்ற அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர், ஆட்வேர்ட் முய்பிரிட்ஜ் என்பவரைப் பற்றிப் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு ஆண், அந்தப் புத்தகத்தின் முக்கிய அம்சம்குறித்து அவரிடமே - குறுக்கே பேசாமல் கேட்கும்படி கட்டளையிட்டுவிட்டு - தொலைக்காட்சிப் பேட்டியில் விளக்கிக்கொண்டிருந்தார். இடையில் ரெபேக்கா குறுக்கிடவோ, அந்தப் புத்தகத்தை எழுதியதே நான்தான் என்று கூறவோ அவர் வாய்ப்பே அளிக்கவில்லை. அவர் எதையாவது கூற முற்பட்டபோதெல்லாம், தன்னுடைய குரலை உயர்த்தி அவரை அடக்கிக்கொண்டிருந்தார் அந்த மேதாவி!

இதைக் குறிப்பிடத்தான் மேன்ஸ்ப்ளெயின் என்ற வார்த்தை ஜனித்தது. மேன்ஸ்ப்ளெயினிங் என்பது பெண்கள் எதிர்த்துப் பேசிவிடாமலிருக்க, ஆண் தன்னுடைய குரலை உயர்த்திப் பேசும் உத்தியைப் பற்றியது. பெண்களுக்குப் பரிந்து பேசும் ஆண்கள் இருக்கிறார்களே அவர்கள்கூட இம்மாதிரியான விவாதங்களின்போது வாயை மூடுவதில்லை.

வாயை அடைத்த செனட்டர்

அமெரிக்காவின் கென்டுகி செனட்டரான ரேண்ட் பால், சி.என்.பி.சி. தொலைக்காட்சியின் பேட்டிக்காக பெண் நிருபர் கேள்வி கேட்க முற்பட்டபோது, உதட்டின் மீது விரலை வைத்து, ‘பேசாதே’ என்பதுபோலச் சைகை செய்தார். அத்துடன் நல்ல நிருபராகத் திகழ எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்றுகூட ஆலோசனைகளைக் கூறினார். அவருடைய பேச்சு, தோரணை காரணமாக அந்தப் பெண், பேட்டிக்கு இடையில் அவரிடம் மன்னிப்பு கேட்க நேர்ந்தது.

‘கார்டியன்’ பத்திரிகையாளர் லெனோர் டெய்லர், கிளைவ் பால்மர் என்பவரைப் பேட்டி கண்டார். “என்னம்மா உனக்கு அரசியலே தெரியாமல் இருக்கிறதே, சின்னப் பெண்ணாக இருக்கிறாயே?” என்று செல்லமாகக் கடிந்துகொண்டார் பால்மர். பிறகு, அரசியல் நடைமுறைகளை அவருக்குப் பாடம் எடுப்பதுபோலச் சொல்ல ஆரம்பித்தார். “25 ஆண்டுகளாக அரசியல் செய்திகளை அளித்துவரும் என்னைப் பார்த்து அரசியலே தெரியவில்லையே உனக்கு என்றார் அவர்” என்று அங்கலாய்ப்புடன் பிறகு தெரிவித்தார் லெனோர் டெய்லர். கிளைவ் பால்மர் அப்படிச் சொன்னதாலேயே அவரிடம் மன்னிப்பு கேட்டுவிடவில்லை டெய்லர் என்பதையும் குறிப்பிட்டே தீர வேண்டும்.

அப்பப்பா… என்ன கேலி!

கிளமென்டின் ஃபோர்ட் என்ற எழுத்தாளர், பெண்கள் மட்டம்தட்டப்படும் தருணங்கள்குறித்த தகவலைத் திரட்ட இணையதளத்தில் சில கேள்விகளைக் கேட்டார். பல ஆண்கள் அந்த வினாப்பட்டியலுக்கு அக்கறையாகப் பதில் அளித்திருந்தனர். ஆனால், இணையதள வம்புப் பேர் வழிகளோ கேள்விகளையும் பதில்களையும் கேலிசெய்து விமர்சனங்களாகப் பொழிந்து தள்ளினர்.

ஆண்களும் பெண்களும் சேர்ந்து உரையாடும் தருணங் களில் ஆணின் குரல் மரியாதையுடன் கேட்கப்படுகிறது. உண்மையில், அவர் அதிகம் விவரம் தெரியாதவராக, அசடாக இருந்தாலும்! எவ்வளவு படித்தவராக இருந்தாலும் பெண்கள் பேசும்போது ஆண்களுக்கு ஓர் அலட்சியம், கிண்டல், கேலி, அலுப்பு, சலிப்பு எல்லாம் சேர்ந்துகொள்கிறது. (இளம் பெண்கள் பேசும்போது சிலர் ஈர்ப்பின் காரணமாக மவுனம் சாதிக்கிறார்களே தவிர, அப்போதும் அவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்பதில்லை!).

ஒலியும் பொருளும் ஒன்றுபோல இருக்கும் இரண்டு வார்த்தைகள் சேர்ந்து உருவாகும் புதிய வார்த்தையாக (Portmanteau) மேன்ஸ்ப்ளெயின் பிறந்தது.

வீடானாலும் அலுவலகமானாலும் கல்விக்கூடங்களானாலும் நாடாளுமன்றமானாலும் - பெண்களுக்குத் தெரியாது என்று ஆண்கள் விளக்கம் அளிக்கப் புகுந்துவிடுகின்றனர். இதில் ஆணாதிக்கம் மட்டுமல்ல, சில வேளைகளில் அன்பு, பாசம், கருணை, அக்கறை போன்றவையும் சேர்ந்துகொள்வது உண்டு. ஆனால் பெரும்பாலும், “உனக்கென்ன தெரியும், நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொண்டு பேசு” என்ற தோரணைதான் அதிகம். பெண்களும் அதைப் புரிந்துகொண்டு அல்லது சகித்துக்கொண்டு சும்மா இருந்துவிடுகின்றனர். அதே வேளையில், அதைப் பெண்கள் செய்யும்போது, நிராகரிப்பது, கேட்காமலே போய்விடுவது என்று ஆண்கள் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்றனர்.

ஒரு விஷயத்தைப் பெண் சொல்லும்போது தொடர்ந்து புறக்கணித்துவிட்டு, அதையே ஒரு ஆண் பிற்பாடு சொல்லும்போது கேட்டு ஏற்பதுதான், பெண் என்பதற் காகப் புறக்கணிப்பதாகிறது. நேர்காணல் அல்லது கலந்துரை யாடலின்போது ஆணுக்கே அதிக நேரம் ஒதுக்கிவிட்டு, பெண் பதில் அளிக்க வரும்போது கூச்சலிட்டு அவரை அடக்குவதும் இதே போன்ற ஆணாதிக்கச் செயல்தான்.

மேன்ஸ்ப்ளெயினிங் என்ற வார்த்தை சரியானது என்பதை ஏற்கப் பலர் தயாராக இல்லை. ஆண்கள் பேசுவதைக் கேட்பதைப் போலப் பெண்கள் பேச்சு கேட்கப்படுவதில்லை என்பதைப் பலர் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.

பெண்கள் பேசினால் (வேறு வழியில்லாமல்) குடும்பத் தலைவர்கள் எதிர்ப்பே இல்லாமல் கேட்பதையும் சில இடங்களில் நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். ‘அடக்கத்துக்கு’ என்ன வார்த்தை என்று எந்த ஆணாவது, ‘மேன்ஸ்ப்ளெயின்’ செய்யலாம்!

©‘தி கார்டியன்’ தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x