Last Updated : 05 Feb, 2015 09:16 AM

 

Published : 05 Feb 2015 09:16 AM
Last Updated : 05 Feb 2015 09:16 AM

தோல் தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழலும்

பெரும்பாலான தோல் தொழிற்சாலைகள் பாதுகாப்பற்ற சூழலிலேயே இயங்குகின்றன.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வாரம் நடந்த அகோர விபத்தானது தோல் தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பாதுகாப்புகுறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 10 உயிர்களைப் பலிவாங்கிய இந்தச் சம்பவம், தோல் தொழில் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. தமிழ்நாட்டில் இதுவரை பட்டாசு ஆலைகள் மட்டுமே பணிபுரிவதற்குப் பாதுகாப்பற்ற இடமாகக் கருதப்பட்டன. இந்தப் பட்டியலில் தற்போது தோல் தொழிற்சாலைகளும் சேர்ந்திருக்கின்றன. இதற்கான காரணங்களை, இந்த மாவட்டத்தில், இந்த தொழிற்சாலைகள் உருவான வரலாற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலூர் மாவட்டம்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டதும், மிகப் பெரும் அளவிலான தோல் ஏற்றுமதியைக் கொண்டதுமாகும். இந்தியாவிலேயே முதன்முதலாக இங்குதான் தோல் உற்பத்திக்கூடங்கள் தொடங்கப்பட்டன. கர்நாடக நவாபின் காலத்தில் இது தொடங்கப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான ராபர்ட் கிளைவ், கர்நாடக நவாபான சந்தா சாகிபுடன் இணைந்து ராணிப்பேட்டைப் பகுதியில் இதனைத் தொடங்கினார். தோல் உற்பத்திக்குத் தேவையான மாட்டுத் தோலை முஸ்லிம்கள் அதிகம் கைவசம் வைத்திருந்ததால் ராபர்ட் கிளைவ் இதற்காகச் சந்தா சாகிபின் துணையை நாடினார். இதற்கான உற்பத்திச் சூத்திரங்களை ராபர்ட் கிளைவ், சந்தா சாகிபுக்குக் கற்பித்தார். மேலும், மூலத் தோலை தொட்டிகளில் சுண்ணாம்புடன் நீறவைத்து அதனைப் பதனிடுவதற்காகத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்ததால், இந்தத் தொழிலுக்குச் சாதகமாக அமைந்தது. மற்றவர்கள் தொடத் தயங்கும் மாட்டுத் தோலை இவர்கள் குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு, பிரிட்டிஷாருக்குப் பதனிட்டுக் கொடுத்தனர். இந்த மரபு இப்போதும் தொடர்கிறது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உருவாக்கம்

இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கான அமைச்சகம் என்பது இந்திரா காந்தி காலத்தில்தான் தொடங்கப்பட்டது. 1974-ல் அவசரச் சட்டம் மூலம் தொடங்கப்பட்ட இந்த அமைச்சகத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவில் தொழிற்சாலை மற்றும் பிற காரணிகளால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாப்பது, இந்திய வனங்கள் மற்றும் வன உயிரிகளைப் பாதுகாப்பது. இதனைத் தொடர்ந்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதன் கட்டுப்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் 1980-களுக்குப் பிறகே இந்தியாவில் தொடக்கம் பெற்றன.

தமிழ்நாட்டில் 1982-ல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்காணிப்பதும் கட்டுப் படுத்துவதும்தான் இந்த வாரியத்தின் முக்கியமான வேலையே. ஆனால், பெரும்பாலும் இந்தத் துறை செயல்படாமலே இருக்கிறது. அரசுத் துறைகளிலேயே செயல்படாத துறை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள். துறை சார்ந்த ஆர்வமற்ற பிரதிநிதிகள், தேவையற்ற அரசியல் தலையீடுகள், மிதமிஞ்சிய ஊழல் போன்றவைதான் அதற்குக் காரணம். இதன் தொடர்ச்சிதான் சமீபத்திய கொடூர விபத்துகள்.

சுற்றுச்சூழல் கட்டுப்பாடு

தோல் தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை பல நிறுவனங்கள் வளர்ச்சியடைந்தபோதும் சட்டப்படி இப்போதும் சிறுதொழிற்சாலைகளாகவே இருக்கின்றன. மேலும், சுற்றுச்சூழல் தீங்கு வகைப்பாட்டின்படி, இவை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சிவப்பு வகை தொழில்முறையாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் அடிப்படைகளான மறு பயன்பாடு, மறு சுழற்சி, மறு ஊட்டம், மறு மீட்பு போன்றவை தோல் தொழிற்சாலைகளுக்கு அதிகம் பொருந்துகின்றன. ஆனால், இவற்றை இந்தத் தொழிற்சாலைகள் சரியாகக் கடைப்பிடிப்பதில்லை.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, தோல் தொழிற் சாலைகள் தங்களின் பாரம்பரிய சுண்ணாம்பு உற்பத்தி முறையிலிருந்து, அதிகம் தீங்கு நிறைந்த வேதிப்பொருட்களுக்கு மாறின. இவை பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளால் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள். மேலும், அனுமதிக்கப்பட்ட வேதிப்பொருட்களில்கூடக் குறிப்பிட்ட அளவில்தான் தனிமங்களும் சேர்மங்களும் மூலக்கூறுகளும் இருக்க வேண்டும் என்பது சர்வதேச விதி. ஆனால், வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், அவற்றைப் பயன்படுத்தும் தோல் தொழிற்சாலைகளும் இந்த விதியைக் காற்றில் பறக்கவிடுகின்றன. குறிப்பாக, தோல் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் முக்கிய வேதிப்பொருளான குரோம் என்பது மனித உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கக்கூடியது; சிறியவர் முதல் பெரியவர் வரை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதிலிருந்து வெளிவரும் நச்சுவாயுக்களும் மிக அபாயமானவை.

அறிவியல் முறைப்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பும், தொழிற்சாலைப் பாதுகாப்பும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. இந்நிலையில், வேதிப்பொருட்களும் தண்ணீரும் கலந்து பதனிடப்படும் தோலானது, இந்தத் தொழிற்சாலைகளுக்குப் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் சேர்த்தே உருவாக்கிவிடுகிறது. காரணம், அபாயகரமான வேதிப்பொருட்கள் மற்றும் தண்ணீர் கலந்த உற்பத்திச் செயல்முறை, நிலத் துக்கும் மனிதர்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் கழிவு நீரையும் சேற்றையும் வெளியேற்றுகிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த இரண்டையும் சுற்றுச்சூழலுக்கு எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்தாமல் நன்னீராக மறுசுழற்சி முறையில் அதாவது பூஜ்ஜியக் கழிவு வெளியேற்ற முறையில் வெளியேற்றும் தொழில்நுட்பங்கள் உருவாகி விட்டன. மேலும், சேற்றைக்கூடப் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கும் தொழில்நுட்பங்களும் உருவாகியிருக்கின்றன.

ஆனால், இவற்றை வேலூர் மாவட்டக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பெரும்பாலும் கடைப் பிடிப்பதில்லை. வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை சிப்காட், மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் தோல் தொழிற்சாலைகள் இணைந்து பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ராணிப்பேட்டையின் ஒரு பகுதி தவிர, மற்ற எதுவுமே கழிவு வெளியேற்றத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதில்லை. பல நிலையங்களும் இவற்றோடு இணைந்த தொழிற் சாலைகளும் அதிகாலையில் குறிப்பிட்ட அளவு கழிவுநீரைப் பாலாற்றில் திறந்துவிடுகின்றன. பல ஆண்டு களாக நடைபெற்றுவரும் இந்தச் சட்ட விரோதச் செயல்பாட்டால் பாலாறு இன்றைக்கு நஞ்சாறாக மாறி விட்டது. நிலத்தடி நீரும் விவசாயமும் காலியாகிவிட்டன. உற்பத்தி என்பதைத் தாண்டி வியாபார மனோபாவம் கொண்ட இந்த முதலாளிகள், லாபத்துக்காக இம்மாதிரி யான சட்டவிரோதச் செயல்களைச் செய்கிறார்கள்.

தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நலன்

தோல் தொழிற்சாலைகள் பெரும்பாலும் தொழிலா ளர்கள் வேலைசெய்வதற்குப் பாதுகாப்பற்றவை யாகத்தான் இருக்கின்றன. அபாயகரமான வேதிப் பொருட்களுடன் உற்பத்தியில் ஈடுபடுவதற்குத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் பெரும்பாலும் அவர் களுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும், குறைந்த கூலியுடன் அதிக நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சில நிறுவனங்களில் வார விடுமுறைகூட வழங்கப்படுவதில்லை. அதுபற்றிய எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் இங்குள்ளவர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் குறிப்பிட்ட அளவு வடஇந்தியத் தொழிலாளர்களும் அடங்குவார்கள். இவர்களுக்கான தங்குமிடம் என்பது மாட்டுக் கொட்டகையைவிட மோசமானது. இங்குள்ள சில நிறுவனங்கள் இரு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கும் முறையைக் கடைப்பிடிக்கக் கூடியவை என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மைகளில் ஒன்று. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்களும், தொழிற்சாலை ஆய்வாளர்களும் எதையும் கண்டு கொள்வதில்லை. தொழிற்சாலைகளின் ‘கவனிப்பே’ இதற்கெல்லாம் காரணம்.

ஏற்றுமதி மூலம் அதிக வருவாயைக் கொடுக்கும், இரண்டு லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பளிக்கும் இந்தத் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக் குறைபாட்டின் உச்சத்துக்குச் சென்றுவிட்டால், மனித உயிர்களைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகாவது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து, சுற்றுச்சூழலையும் மனித உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். தமிழக அரசின் தார்மீகக் கடமை அதுதான்.

- இஜாஸ் அகமது, சமூக விமர்சகர், தொடர்புக்கு: ijaz_ahmed@outlook.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x